வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!

கொலைக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் இதனை எந்த விதத்திலும் சாதி அரசியலாக மாற்றாமல் போராடியுள்ளனர். இதனால் சமூகப் பதற்றத்தை தவிர்க்க முடிந்துள்ளது. 

0
கொல்லப்பட்ட இளைஞர் மணிகண்டன்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் மணிகண்டன் என்ற பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர் தேவேந்திரன் என்பவரால் கடந்த 17ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

கை.களத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், தேவேந்திரன் இருவரும் ஒன்றாக நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் டிரைவராக பணி செய்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே கடந்த காணும் பொங்கல் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மீண்டும் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மணிகண்டன் கை.களத்தூர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் மீது புகார் புகார் தெரிவித்திருக்கிறார். ஏட்டு ஸ்ரீதர் மற்றும் ஊர் காவல் படை காவலர் இருவரும் அருண் என்பவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணிகண்டனிடம் சமாதானம் பேச தேவேந்திரனை அழைத்து சென்றுள்ளனர். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சராசரியாக வெட்டி வீழ்த்தியுள்ளார் தேவேந்திரன்.

மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மணிகண்டனின் இறந்த உடலை காவல் நிலையத்தில் முன் கிடத்திய உறவினர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இந்த கொலையில் காவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர்.

போராட்ட இடத்திற்கு விரைந்த திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மணிகண்டன் குடும்பத்திற்கு உதவுவதாகவும் குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

படிக்க: சாதி ஒடுக்குமுறை : உங்கள் முன்னே சில கேள்விகள் !

மணிகண்டன் கொடுத்த புகாரை அடுத்து சமாதானம் காவல் நிலையத்தில் பேசாமல் எதற்காக மணிகண்டன் வேலை செய்த இடத்திற்கு தேவேந்திரனை கூட்டி செல்ல வேண்டும். ஏற்கனவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஆன நிலையில் தேவேந்திரனை அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் ஆயுதம் இருப்பதை சோதிக்காமல் அழைத்துச் சென்றது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதுவே காவல்துறைக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

மணிகண்டன் தேவேந்திரன் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே இடத்தில் வேலை செய்வதினால் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரிடையே கைகலப்பு உருவான பின்னரே இவ்வளவு நாள் பழகிய நண்பனை கொலை செய்யும் அளவுக்கு சாதியும் ஒரு வகையில் தூண்டுதலாக இருந்துள்ளது.

கிராமப் பகுதியில் பட்டியல் இன சமூகத்தினரிடம் ஒரு இளைஞன் நட்புடன் பழகுவதை ஆதிக்க சாதியினர் விரும்ப மாட்டார்கள். இருவரிடமும் பிரச்சனை உருவான பின்னர் அதனைப் பயன்படுத்தி தேவேந்திரனிடம் சாதிவெறி ஏற்படுத்தி இருக்கவும் வாய்ப்புண்டு என்பதை இந்த கொலை நமக்கு உணர்த்துகிறது.

படிக்க: அழகேந்திரன் ஆணவப்படுகொலை! மக்களுக்கு விடப்படும்  எச்சரிக்கை!

கொல்லப்பட்ட மணிகண்டன் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர். கொலை செய்தவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். கொலைக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் இதனை எந்த விதத்திலும் சாதி அரசியலாக மாற்றாமல் போராடியுள்ளனர். இதனால் சமூகப் பதற்றத்தை தவிர்க்க முடிந்துள்ளது.

ஆனால் காவல்துறையோ தானும் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக போலீஸ்  ஏட்டு மற்றும் ஊர்க்காவல் படை காவலரையும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனல்

கிராமப்புறங்களில் சாதி மதம் மறந்து பழகும் இளைஞர்களிடையே சாதி வெறியை ஊட்டி ஊருக்குள் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வேலையை சமீப காலங்களில் பாஜகவும் இன்னபிற சாதி வெறி கட்சிகளும் செய்கின்றன. ஒருவேளை கொல்லப்பட்டது ஆதிக்க சாதி நபராக இருந்திருந்தால் கலவரமாக மாறி இருக்கவும் வாய்ப்பு உண்டு.

தமிழகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களில் காவல்துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. குற்றத்தை தடுப்பதை செய்யாமல் உருவாக்கும் வேலையை செய்கிறது காவல்துறை. இவர்களோடு இணைந்து கொண்டு தமிழகத்தை கலவர பூமியாக்க சாதி வெறி மதவெறி கும்பல்கள் துடிக்கின்றன.

இளைஞர்களே சாதி, மத பகைமைகளற்று நம் சமுதாயத்தை பாதிக்கும் வேலையின்மை வறுமைக்கு எதிராகவும் அதனை உருவாக்கும் கார்ப்பரேட் காவிப் பாசிசக் கும்பலையும் இம்மண்ணிலிருந்து அகற்றவும் கரம் கோர்த்து ஒன்றிணைவோம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here