அமெரிக்க ட்ரம்புக்கு பாசிச முன்னோடி அர்ஜென்டினாவின் மிலே!

பாசிச டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ’குறைந்தபட்ச அரசாங்கம்’ என்ற கொள்கையை தனது அரசாங்க கொள்கையாக அறிவித்தார். இதற்கும் அர்ஜென்டினாவில் மிலே தான் முன்னோடி.

அர்ஜென்டினாவின் அதிபரான திருவாளர் ஜேவியர் மிலே

’பாசிஸ்டுகள் எப்போதுமே வரலாறு முன்னோக்கி செல்வதை விரும்பாதவர்கள்’ என்பதையும் மனித குலத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளும் காட்டுமிராண்டி கும்பலின் பிரதிநிதிகளாக வலம் வருகின்றனர் என்பதை நிரூபித்து வருகின்றனர் சர்வதேச அளவில் முன்னோடிகளாக திரிகின்ற பாசிச பயங்கரவாதிகள்.

பாட்டாளி வர்க்க முகாம் பலவீனப்பட்டு இருப்பதன் காரணமாகவே முதலாளித்துவ தாராளவாதிகளையும், முதலாளித்துவ கொடுங்கோலர்களையும், பாசிச பயங்கரவாதிகளையும் இனம் பிரித்து குறிப்பிட்ட காலகட்டத்தில் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை புரிந்து கொள்வதில் குழப்பத்தை உருவாக்குகின்றனர் திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள். இதைப் பற்றி வேறொரு சமயத்தில் விரிவாக பார்ப்போம்

அமெரிக்காவில் சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது கேடுகெட்ட அரசியல், பொருளாதார கொள்கைகளுக்கு முன்னோடி என்று உயர்த்திப் பிடிக்கின்ற நபர் அர்ஜென்டினாவின் அதிபரான திருவாளர் ஜேவியர் மிலே.

2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்வு செய்யப்பட்ட மிலே, ’அர்ஜென்டினாவின் சுதந்திரம்’ என்ற வார்த்தையே மூக்கில் நாறுகிறது என்று பேசி வருகின்றார். ’ஐரோப்பாவை பிடித்தாட்டுகிறது கம்யூனிச பூதம்’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் காரல் மார்க்ஸ் சுட்டிக்காட்டியதை எடுத்துக் கூறி, அதற்கு நேரெதிராக ’ஐரோப்பாவை பிடித்தாட்டுகிறது சுதந்திரப் பேய்’ என்று வர்ணித்துள்ளார்.

தொழிலாளி வர்க்கத்தை கார்ப்பரேட் முதலாளிகளும், வங்கிகளும் தடையற்ற முறையில் சுரண்டுவதற்கு இத்தகைய சுதந்திரம் எனும் வார்த்தை மிகப் பெரும் தடையாக உள்ளது என்று ஆத்திரமடைந்துள்ளார். ஆனால் வரைமுறையற்ற வகையில் லாபமிட்டுவதற்கு சுதந்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், கார்ப்பரேட்டுகளுக்கு சுதந்திரமும், தொழிலாளி வர்க்கத்திற்கு அடக்கு முறையுமே சரியான வாழ்வியல் முறை என்று பிதற்றி வருகிறார்.

வரலாற்றை 21-ம் நூற்றாண்டிலிருந்து 22 ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னோக்கி கொண்டுச் செல்வது போன்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விட்டு, 19ஆம் நூற்றாண்டை நோக்கி பின்னோக்கி செல்வது என்பதுதான் சரியானது என்றும், அர்ஜென்டைனாவை பொறுத்தவரை 1860-களில் நிகழ்ந்த தாராளவாத அணுகுமுறை தான் சரியானது என்றும் கூறியுள்ளார்.

இந்த வாதங்கள் அனைத்தும் சோசலிசத்திற்கு எதிரானது என்பது மட்டுமின்றி சோசலிச சமூக அமைப்பு உருவானதன் காரணமாக உலகமெங்கும் தோன்றிய பொதுக் கல்வி முறை, பொது சுகாதாரம், தொழிலாளர்களுக்கான உரிமைகள், ஒழுங்குபடுத்தக்கூடிய சமூக அமைப்புகள் போன்ற அனைத்தும் ’மோசமான சுதந்திரத்தை’ கோருகின்றது என்பதால் இவை ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதுதான் மிலேவின் வாதமாக உள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்ற பாசிச பயங்கரவாதிகள் முதல் பிரேசிலின் போல்சனரூ, இஸ்ரேலின் நெதன்யாகு, பிரான்சின் மெக்கரான் போன்றவர்களும் இத்தாலியின் ஜியார்ஜியோ மெலோனி வரையிலான பாசிச பிற்போக்கு கும்பல், இவரின் இயல்பான நண்பர்களாக உள்ளதால் இவர் ட்ரம்புக்கு முன்னோடியாக விளங்குவதில் ஆச்சரியம் இல்லை.


படிக்க: எலான் மஸ்க், விவேக் ராமசாமி இணைந்து மிரட்டும் அமெரிக்க பேரரசு!


முதலாளித்துவ ஜனநாயகம் முன் வைக்கும் சுதந்திரம் என்பதை கார்ப்பரேட் சுத்ந்திரமாக சித்தரிக்கும் மிலே ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள் அர்ஜென்டினாவின் வறுமை விகிதம் 41.7 சதவீதத்திலிருந்து 52.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் ஒராண்டுக்குள் 193 சதவீதம் அதிகரித்து விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுகிறது. சென்ற டிசம்பரில் பதவியேற்றவுடன் பணமதிப்பிழப்பு என்று அறிவித்து மக்களது வாழ்க்கையை கொடூரமான துயரத்திற்கு தள்ளினார் இதன் காரணமாகவே வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் உணவு பண்டங்கள் வரை அனைத்தின் விலையும் 135 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதற்கு நேர் மாறாக தொழிலாளர்கள் சம்பள விகிதம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 16.5 சதவீதமும், அமைப்பு ரீதியாக செயல்படும் தொழிலாளர்களுக்கு 2.1 சதவீதமும் சரிந்துள்ளது. வேலை இழப்பு என்பது தனியார் நிறுவனங்களில் 1,50,859 பேரும், அரசு நிறுவனங்களில் இருந்து 67,133 பேரும், சுயதொழில் செய்து பிழைத்து வந்த மக்கள் 2, 91,959 பேரும் வாழ்க்கை இழந்து வீதியில் நிற்கின்றனர்.

இதனை எதிர்த்துப் போராடுகின்ற சமூக செயல்பாட்டாளர்கள், இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள் போன்ற அனைவரையும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ள மிலே அரசாங்கம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கடத்திக் கொண்டுச் சென்று காணாமல் அடித்துள்ளது. அது மட்டுமன்றி பல்லாயிரம் பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

பாசிச டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ’குறைந்தபட்ச அரசாங்கம்’ என்ற கொள்கையை தனது அரசாங்க கொள்கையாக அறிவித்தார். இதற்கும் அர்ஜென்டினாவில் மிலே தான் முன்னோடி.

சர்வதேச அளவில் பாசிச பயங்கரவாதிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதும், சிறிய சதவீதத்தில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள் போன்றவர்களின் நலனுக்காக பெரும்பான்மை மக்களையும், பாட்டாளி வர்க்கத்தையும் அடக்கி ஒடுக்குவது தற்காலிகமாக வெற்றி பெறலாம்.

ஆனால் கம்யூனிஸ சித்தாந்தத்தின் கீழ் பாட்டாளி வர்க்கம் ஒன்று திரண்டு பாசிசத்தையும், அதன் எஜமானர்களான நிதி மூலதன ஏகபோக கும்பலையும், இவற்றின் பிரதிநிதிகளான பாசிச சர்வாதிகாரிகளையும் குழி தோண்டி புதைப்பார்கள்.

  • ஆல்பர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here