
தமிழ்நாட்டில் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வகங்களை நடத்துவதற்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இது பெரும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே தொழிலில் நீடிக்க உதவுவதாகவும் உள்ளது. இதைக் கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது.
இடத்தை மட்டுமே கணக்கில் கொள்ளும் உத்தரவு!
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறையின் அரசாணை எண் 390 / 2024 மூலம் இரத்தம் மற்றும் பிற மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் ஆய்வகங்களை நடத்துவதற்கு நகரங்களில் என்றால் குறைந்தது 500 சதுர அடியும் சிறிய நகரம் என்றால் குறைந்தது 300சதுர அடிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவம் என்பதே மக்களுக்கு தாங்க இயலாத பெரும் செலவு வைக்கும் துறையாக மாறி வருகிறது. அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுபடுத்தாத அரசு தான் மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் குறைந்தது இவ்வளவு பெரிய இடத்தில் பரிசோதனை கூடம் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களை காட்டிலும் பல தனியார் மருத்துவ பரிசோதனை கூடங்கள் இயங்கி வருகிறது. அத்தகைய பரிசோதனை கூடங்களின் தரம் மற்றும் கட்டணங்களை கட்டுபடுத்தி முறைப்படுத்தி நடத்துவதற்கு மாநில அரசு தவறியுள்ளது, குறைகளும் உள்ளன.
ஆய்வகங்களின் தரம் மற்றும் கட்டணங்கள் பற்றிய எவ்வித முயற்சியும் மாநில அரசு எடுக்கவில்லை. மாறாக, கட்டிடத்தின் அளவு குறித்து மட்டுமே சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளது திமுக அரசு! இதனால் சிறு முதலீட்டில் இயங்கும் மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு சிறிய இடம் என்ற காரணத்தால் அரசின் சுகாதாரத்துறையால் அங்கீகாரம் மறுக்கப்படும். சாமானிய மக்களின் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள சிறிய ஆய்வகங்கள் மூடப்படும்.
கார்ப்பரேட்டுகளுக்கே கதவு திறப்பு!
அப்பல்லோ, தைரோகேர், மெட்ரோபொலிஸ் போன்ற கார்ப்பரேட்டுகளின் சங்கிலித்தொடர் ஆய்வகங்கள் நாடு முழுவதும் கடை விரித்துள்ளன. இவர்கள் நோயாளிகளை கவரும் வகையில் சாத்தியமான அளவு விரைவாக மெயில் மூலம் அனுப்பியும் விடுகின்றனர். தொடர் சிகிச்சையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு முந்தைய ஆய்வு முடிவுகளுடன் கூடிய வரைபடத்தையும் ஒப்பிடுவதற்கு உதவியாக அனுப்பி வைக்கின்றனர்.
படிக்க: ♦ நவம்பர்-14, நீரிழிவு தினம்: லாப வேட்டையில் மருத்துவ கார்ப்பரேட்டுகள்.
சிறிய அளவில் ஆய்வகங்களை நடத்துபவர்களால் முந்தைய முடிவுகளை எல்லாம் ஒப்பிட்டு தருவது சாத்தியம் இல்லை. இப்படிப்பட்ட சிறிய மருத்துவ ஆய்வு கூடங்களை தரமானதாக மாற்றுவதாக கூறி, இருக்கின்ற மருத்துவ பரிசோதனை கூடங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிடுவதற்கு வழிவகை செயவதற்கே இந்த சுற்றறிக்கை.
அளவைக் கொண்டா தரத்தை நிர்ணயிப்பது?
ஒரு ஆய்வகத்தின் கட்டித்தின் அளவுக்கும் தரத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை. அரசு உத்தரவில் தரம் மற்றும் கட்டணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரத்தப் பரிசோதனை மையங்களை மட்டுமே நடத்தும் ஆய்வகங்கள் பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?

இதனால் சங்கிலித் தொடர் ஆய்வகங்களை – பல்வேறு வகையான ஆய்வுகளை ஒரே கூரையின் கீழ் எடுத்து உயர்தர சேவையை வழங்கும் – நடத்தும் மருத்துவ கார்ப்பரேட்டுகள் மட்டுமே தொழிலில் நீடிப்பர். இதனால் போட்டியாளர்கள் ஒழிக்கப்பட்டு மருத்துவ ஆய்வு கட்டணம் தான் அதிகரிக்கும்.
இந்த உத்தரவு ஒரே நேரத்தில் சிறிய ஆய்வகங்கள் மற்றும் சாமானிய மக்களை தாக்குவதாகவே உள்ளது. அப்படி இருந்தும் சிறிய ஆய்வகங்களை நடத்துபவர்கள் ஜனவரி 12ஆம் தேதியில் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துடன் நிற்கலாமா? இதையும் பரிசீலிக்க வேண்டும்.
படிக்க: ♦ அரசு மருத்துவர்- ஏழை நோயாளி முரண்பாடு: தீர்வுகாண வழி என்ன?
தமக்குள் உள்ள தொழில் போட்டி மற்றும் குறுகிய நலம் சார்ந்த கண்ணோட்டங்களினால் ஒன்றுபட்ட போராட்டங்கள் சாத்தியமற்றதாகின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலில் இருப்பவர்கள், சிறிய அளவில் ஆய்வகம் உள்ளிட்ட தொழிலை நடத்துபவர்கள் கார்ப்பரேட்டுகளிடமோ, கார்ப்பரேட் நல அரசுகளிடமோ பணியக் கூடாது.
முதலுக்கே மோசம் என்று ஆகிவிட்ட தற்போதைய நிலையிலாவது சிறிய ஆய்வகங்களை நடத்துபவர்கள் விழித்துக் கொள்வார்களா? கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான அனைத்து துறைகளிலும் வெடித்தெழும் போராட்டங்களுடனும் கரம் கோர்ப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
எது மக்கள் நல அரசு?
மக்கள் நல அரசு என்று மார்தட்டிக் கொள்பவர்கள் யாரின் பக்கம் நிற்க வேண்டும்? கார்ப்பரேட்டுகளுக்காக ஒட்டுமொத்த நாட்டையே கூறு போட்டு விற்று வரும் பாசிஸ்ட் மோடியின் திசையிலா சமூக நீதி அரசு பயணிப்பது?
“விடியல் அரசின்” ஆட்சியாளர்கள் தற்போது அனுப்பி உள்ள அரசாணையின் மூலம் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர். மாநில உரிமைகள் என்பதை கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது என்பதாக திமுக அரசு தற்போது நடைமுறையில் உணர்த்தி வருகிறது.
சிறு தொழில் போன்று சாமானியர்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள ஆய்வகங்களை நசுக்கும் சதியை முறியடிக்க வேண்டும். மாநில உரிமைகள் என்பது தமிழக உழைக்கும் மக்களின் நலன்களுக்கானதுதான் என்று பாடம் கற்றுத் தர வேண்டி உள்ளது. டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போல் சிறு ஆய்வகங்களை பாதுகாக்கும் சரியான திசைவழிக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை இழுக்க வேண்டியும் உள்ளது.
- இளமாறன்