கடந்த இரண்டு மாதங்களாக பாஜக அரசின் வெவ்வெறு நடவடிக்கைகளையொட்டி மணிப்பூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பழங்குடி மக்கள் பிரச்சினைகள் என்பது சிக்கலானவை. அவற்றை தமது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மணிப்பூரை ஆளும் பாஜக அரசு கையாளும்போது போராட்டத்தீ பற்றி படர்கிறது.

1

ணிப்பூர் சூரசந்த்பூர் மலைப்பகுதியில், பாஜகவின் நில அளவை முயற்சிகளை எதிர்த்த மக்கள்மீது சமீபத்தில் கடுமையான தடியடி, வன்முறை நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் ஒன்றிய அரசு மாநில ஆட்சியோடு இணையாக அதிகாரத்தைக் கூடுதலாக எடுத்துக் கொண்டு, ராணுவத்தை அனுப்பி, கண்டதும் சுட உத்தரவிட்டது.

எல்லா மாநிலங்களிலும் அரச வன்முறையை ஒன்றியமும் , அதன் சார்பில் மாநில அரசாங்கங்களும் நடத்துவது வேறு! வடகிழக்கு மாநிலங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டு 76 ஆண்டுகளாக அடக்கப்படுவதும் வேறு, நிச்சயமாக வேறு! ஆனால் என்றுமே மக்கள் கலவரம் செய்தார்கள் என்றும், அவை பிரச்சினைக்குரிய கலவரப் பகுதிகள் என்றும் அரசாங்கம் செய்தி வாசிக்கிறது.

இப்போது பாஜக அரசு மணிப்பூர் வன்முறையை எப்படித் திட்டமிட்டது என்று பாருங்கள். முதலில் பகுதியில் உள்ள வலைத்தளங்கள் முடக்கப்பட்டன; அடுத்து பிரிவு 144 திணிக்கப்பட்டது; உடனே மக்களின்மீது தாக்குதலும் தொடங்கியது.

மக்கள் எதிர்ப்பைத் தொடங்கியதற்குப் பிறகும் அரசு அழைத்துப் பேசவில்லை. அதனால்தான், முதலமைச்சர் என்.பிரேன்சிங் அந்த வட்டாரத்தில் உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள், அதை எரித்து அழித்துப் போராட்டத்தைத் தொடங்கினர். அவசரமாக மக்கள் தீர்மானித்த எதிர்ப்பு மொழி இதுதான். உள்ளூர் மக்கள்மீது தாக்குதல் நடத்தி அரசு பதில் கூறியது.

ஏப்ரல் 28 பூர்வீகக் குடிமக்கள் சங்கம் ( ITLF ) முழுக் கதவடைப்பு நடத்தி, நில அளவை நடைமுறைக்கு எதிர்ப்பு காட்டியது. மலைப்பகுதியில் இவ்வாறான நிலத்தை அளக்கும் முயற்சிகள், பழங்குடிப் பூமியை ” அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக ” மாற்றும் முயற்சி என்று சங்கம் தெளிவாக உணர்ந்தது; எரிப்புக் கலவரம் நடத்தப்பட்டதே, குமுறும் கோபத்தைச் சொன்ன வடிவம்தான்.

ITLF பத்திரிகைச் செய்தி

கதவடைப்பு அறிவித்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது. “மக்கள் கலவரம் செய்தார்கள்” என்று போலீஸ் அறிவித்தது.

உடனே எதிர்ப்பு மற்றப் பகுதிகளுக்கும் பரவியது ; புதிய லங்கா துய்பாங் பஜார், சியெலும் பாலம், லான்வா பாலம், டி.சாம்பாய் ஆகிய இடங்களிலும் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.

பங்முவால் கிராமத்தின் தலைவரும், பழங்குடிப் போராளியுமான ஹெச்.மங்சிங்குப் நேரடியாகக் குற்றம் சாட்டினார் : “நில அளவைக்கான காரணத்தை எந்த உள்ளூர்த் தலைவரையும் கூட்டி ஆலோசிக்கவில்லை. “அவர் அத்தோடு நிறுத்தாமல், ” இப்படி அளவை எடுப்பார்கள், அரசாங்கத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று உடனே அறிவித்து மக்களை அள்ளி வெளியே வீசுவார்கள். இப்படி நாங்கள் அனாதைகளாக வேண்டுமா ? நாங்கள் சும்மா விடமாட்டோம். ”

பழங்குடிகள் நில உரிமை மறுக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் திடீர் திடீர் என்று அப்புறப்படுத்தப் படுவதால்தான் எதிர்க்கிறார்கள் என்பதற்கு வேறு விளக்கம் தேவையா ?

Manipur fire

இப்படித்தான் ‘ பாதுகாக்கப்பட்ட பகுதி ‘ என்ற அரசாங்க இடத்தின் அருகே ‘ கே சோங் ஜாங் ‘ என்ற கிராமத்தில் பல வீடுகள் அரசினால் அத்துமீறி இடித்துத் தள்ளப்பட்டன. இதேகாரணம் சொல்லி அருகாமைப் பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கும் நோட்டீஸ் விடப்பட்டது. அடுத்து ஒரு முயற்சியாக ” சட்டப்புறம்பாக வந்து தங்கிய வெளி ஆட்கள் பற்றி ” விவரம் எடுக்கப் போவதாக ” பிப்ரவரி 27 முதல் மார்ச் 17 வரை ” க்கான ஒரு நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டது. இதற்காக உள்ளூர்வாசிகள் எல்லோருமே ‘கை ரேகைகளை’ ஒப்படைக்கவேண்டும் என்றது அரசு. “எங்கள் உடல் அடையாள ரகசியங்களைக் கொடுக்கமாட்டோம் ” என்று எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் என்ன கூட்டிக் கழித்துப் பார்க்கத் தெரியாத முட்டாள்களா?

பூர்வீகக்குடி மக்கள் சங்கம் ( ITLF ) — குக்கி இன்ப்பி மணிப்பூர் சங்கம்( KIM ), குக்கி மாணவர் அமைப்பு ( KSO ) ஆகியவற்றோடு சேர்ந்து மார்ச் 10 அன்று அமைதி ஊர்வலம் நடத்தியது. ஆனால், எதிர்ப்பு இயக்கத்தினர் மீது போலீஸ் தடியடி நடத்தி ரத்தக் களறியாக்கியது. பிராந்தியத்தின் பல்வேறு பழங்குடிச் சமூகத்தவர்களும் ஒன்று கலந்த அமைதி ஊர்வலமாக அமைந்ததே போலீஸ் தாக்குதலுக்குக் காரணம். மக்கள் ஒருங்கிணைப்பு ஏற்பட்டுவிட்டதே என்பதுதான் அவர்களுக்கு எரிச்சல். ஜோமி, ஹமார், மிசோ, குக்கி இனக் குழுக்களில் கலந்து வாழ்ந்த ஜோ பழங்குடி மக்கள், இயக்கத்தில் முழுவதுமாகக் கலந்து கொண்டனர். இயக்கத்தின் நியாயம், உடனடி எதிர்காலத்தில் ஏற்படப் போகிற பேராபத்து ஆகிய இரண்டும் இந்தப் பெரிய ஒருங்கிணைப்புக்கு அடிப்படைக் காரணங்களாகும்.

லங்காவில் நடந்த ஊர்வலத்தில் பங்குவகித்த சமூகத் தலைவர், 144 போட்டிருப்பது சட்டவிரோதம் ,அடிப்படை உரிமைக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்பதைத் தெளிவாக வைத்து விமரிசித்தார்.

சமீப நாட்களாக மலைப்பகுதிகளுக்கு என்று அனுப்பப்படவேண்டிய அரசாங்க ஆணைகள் வருவதே இல்லை ; இது குடியரசுத்தலைவர் ஆணை (1972) பிரிவு 371 C – யின்படி கட்டாய உரிமையாகும். இதன் பெயரே மணிப்பூர் சட்டபூர்வ அவை (மலைப்பகுதிக் கமிட்டி) ஆணை, 1972 என்பதாகும். பழங்குடி மக்களில் சிலர், (((பழங்குடிகளுக்கு மேலும் அதிகத் தன்னாட்சி உரிமை, சுயாட்சி உரிமை கொண்ட ” தெற்கு மணிப்பூர் பிராந்தியக் கழகம் ” ( SMATC ) என்று சொல்லக்கூடிய ))) பழங்குடிமக்களுக்கான தனிநிர்வாகத்தைக் கோருவதைக்கூட முன்வைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: நாகாலாந்து சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற‌ இராணுவத்தினர் மீது நடவடிக்கையை முடக்கும் மோடி அரசு.

பூரவீக, பழங்குடிகளின் கோரிக்கையும் எதிர்ப்பும் நீண்டு வளர்ந்தபிறகும் ஏப்ரல் 2023 மத்தியில் மாநில நிதி /காட்டிலாகா அதிகாரிகள் கொண்டுவரப்பட்டு நில அளவையையும் வேகமாக்கத் தொடங்கிவிட்டார்கள். ஏப்ரல் 12 அன்று , KSO மற்றும் ஜோமி மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தியது;

“சியால்மாட் கிராமத்துக்குள்ளே கால் வைத்துப்பார் ! ” என்று எச்சரிக்கை விட்டார்கள் ; வல்பகாட் கிராமத்தின் இரு வழிகளையும் சீல் செய்து காவல் போட்டார்கள். அரசியல், சிவில் சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

” இம்பால் சுதந்திர ஊடகம் ” கொடுத்த தகவல்படி, டுய்பாங் சிவில் துணை வட்டார அலுவலர் ( SDO ), ஜாங்மின்லென் லு போவும், சூரசந்த்பூர் துணை மாவட்ட நீதிபதி ( ADM ) எஸ். தியென் லால் ஜாய் — கங்க்டேவும் , கிராம மக்களை மீறி நுழையவே முடியவில்லை.

சூரசந்த்பூர் எம்.எல்.ஏ, எல்.எம். காவ்தேவோடும் உள்ளூர்ப் பழங்குடித் தலைவர்களோடும் கலந்துபேசி வேலையைத் தொடர்வோம் என்று முதல்வர் அறிவித்தார் ; அறிவிப்பால் கோபம்கொண்ட மக்கள் வரிசையாக அடுத்தடுத்து எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இந்த அடங்காத கோபத்தின் விளைவுதான் உடற்பயிற்சிக்கூட எரிப்பு என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதைத்தான் அரசாங்கம் “கலவரம் ” என்று சொல்கிறது. இந்த அரசாங்கம் யாருக்காக நடக்கிறதாம் !

ஆலோசிக்காமல் அரசு தன் விருப்பம்போலப் பழங்குடிகள் மீது கைவைத்து நிலத்தைப் பறிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு எதிர்ப்பியக்கம் மாபெரும் அடையாளமாகும். வாழுமிடத்தைவிட்டுத் தூக்கியெறியப் பட முதல்வரும் போலீசும் கூட்டாகச் சதியில் இறங்குவதை அவர்கள் தொடர்ந்து கவனித்தார்கள். உரிமைமீது கைவைத்தால் தெரியும் சேதி என்று நேரடியாகவே நடவடிக்கையிலும் இறங்கினார்கள். இதனால்தான் இப்போது மணிப்பூர் பற்றியெரிகிறது ! இது பாஜகவுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட மக்களின் எச்சரிக்கை ! இந்திய ஒன்றியம் என்ற சிறையில் பூட்டப்பட்டு வதைபடும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு இயக்கம் !

பின்இணைப்பு :

அண்மையில் நடந்த ஐ.நா விவாதத்தோடு இந்தப் பிரச்சினையைச் சேர்த்து விவாதிப்பது சரியானது. அதற்காகவே இந்தப் பின் இணைப்பு. அரசின் திட்டங்களின் பரப்பெல்லை உலக – லோக்கல் கார்ப்பொரேட் அளவு மிகப் பெரியது, உலக அளவிலானது, சிக்கலானது.

உலக தொல் பழங்குடிகளுக்கான பிரச்சினைகள் பற்றி விவாதிக்க ஐ.நா – வில் ” நிரந்தர அரங்கு ” உண்டு. அதன் பெயர் UN – PFII என்பதாகும். விவாதத்தில், ” தொல் பழங்குடி சார்ந்த மக்கள் ” பற்றி விவாதித்த இந்திய அரசுப் பிரதிநிதி ” இந்த வரையறை இந்தியச் சூழலுக்குப் பொருந்தாது ” என்று மல்லுக்கட்டியிருக்கிறார். இதனை ” ஆதிவாசி உரிமை ” ஆர்வலர்கள் விமரிசனம் செய்திருக்கிறார்கள். இது ‘ Down To Earth ‘ என்ற சூழல் ஏட்டில் வெளியாகியுள்ளது. இந்தியச்

‘ சோழியன் குடுமி ‘சும்மா ஆடாதே !

1947 -க்குப் பிறகான வரையறை எங்கள் நிலை என்று இந்தியப் பிரதிநிதி பேருக்குச் சொன்னாலும் சட்டப்படியான ‘ பழங்குடி ‘ – எஸ்.டி என்ற முன் மொழிவையும் அரசு ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தொல்பழங்குடி என்பதை ஏற்றால் ஆரிய வருகைக்குமுன் இருந்த பூர்வ திராவிடப் பழங்குடி மற்றும் பிற பூர்வகுடிகள் உண்டு என்பதை ஏற்றுப்பேசவேண்டும். ஆரிய வெறிகொண்ட பாஜக இதைச் சொல்லாது, அதனால்தான் ஐநாவில் பார்ப்பனச் சங்கியின் சங்கு ஊதியிருக்கிறது. தொல்பழங்குடி என்பதும் ஏற்பில்லை,எஸ்.டி என்பதும் ஏற்பில்லை. அவாளது வக்கிரக் குறுக்குப்புத்தி எப்படி விளையாடியிருக்கிறது என்று பாருங்கள் ! அந்த அதிகாரிகளின் புண்ணியத்தில் தொல்குடி மக்களின்/பூர்வீகமாகப் பல்வேறு இனப் பாரம்பரியத்தில் வந்த ஆதி மக்களின் நிலங்களை ” ஸ்வாஹா ” செய்து ” அரசின் பாதுகாக்கப்பட்ட நிலத்தோடு (அ.பா. நிலம்) சேர்த்துவிடுவது ” பிறகு ஒன்றிய அரசின் இட்டம் போல ஆட்டமோ/கள்ள ஆட்டமோ ஆடுவது என்பது அரசின் கிரிமினல் தந்திரம். இதுவே தற்போதைய நிலவரம். ஆய்வு செய்கிற அனைவரும் ஒத்த குரலில் சொல்வது, அ.பா. நிலம் என்ற மணிப்பூர் முதல்வரின் காய் நகர்த்தலுக்கு மோடி அரசு முழு ஆதரவு தருகிறது. அதுபோலவே வடகிழக்கு அரசியல் பிரச்சினை சிக்கலானது என்ற பார்வையும் அரசுக்கு இருக்கிறது.

இரண்டு மூன்று விசயங்களை நாம் இங்கே பார்க்கலாம். தற்போது நடக்கும் போராட்டத்துக்கு ஹாவோகிப் என்ற எம்எல்ஏ நேரடி ஆதரவு தெரிவிக்கிறார்; பல காரணங்களுக்காக நிலைமையைப் பயன்படுத்தி வேறு 15 எம்எல்ஏ -க்கள் முதல்வர் அணுகுமுறையை எதிர்த்து ஆதாயமடையப் பார்க்கிறார்கள்; முதல்வர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர், அதற்கு எஸ்.டி அந்தஸ்து வாங்கி அதன்மூலம் தான் ஆதாயம்

( கொள்ளை ) அடிக்கப் பார்க்கிறார். பாஜக டெல்லி தலைமையோ முதல்வரை ஆதரித்து, அவரைக் குளிப்பாட்டி மலைப்பகுதியை எதிர்கால கார்ப்பரேட் நலனுக்காக மாற்றி அமைத்துவிடும் என்பது பச்சையாகத் தெரிகிறது.

மெய்தெய் இனத்திற்கு எஸ்.டி அந்தஸ்து கொடுப்பது குறித்த பிரச்சினையை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

ஆதாரம் : கவுரி லங்கேஷ் செய்திப் பிரிவு, ஏப்ரல் 29 ;

மற்றும் wire.in செய்திக் கட்டுரை , மே2.

ஆக்கம் : இராசவேல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here