இந்தியாவில் ஆயுதம் ஏந்திய நக்சலிசம் முடிவுக்கு வந்துவிட்டாலும், கருத்தியல் ரீதியான ‘திமாகி நக்சல்கள்’ (Dimagi Naxals – அறிவுஜீவி நக்சல்கள்) இன்னும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பயங்கரவாத, தீவிரவாத பீதியூட்டி வருகிறார்.
திருவாளர் மோடி 80-வது சுதந்திர தினத்தில் (ஆகஸ்ட் 15, 2026) செங்கோட்டையில் உரையாற்றியபோது முதன்முறையாக ‘திமாகி நக்சல்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். மாவோயிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கக் குழுக்களிலும் கொள்கை வகுப்பதிலும் தாக்கம் செலுத்தியதாக அவர் அலறியது மட்டுமின்றி. வன்முறை மற்றும் அராஜகத்தை உருவாக்கி இளைஞர்களைத் தவறான பாதையில் இழுக்க முயலும் இவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தி மொழியில் ‘திமாக்’ (Dimaag) என்றால் மூளை அல்லது அறிவு என்று பொருள். காடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகளுக்குப் பதிலாக, நகர்ப்புறங்களிலும் பல்வேறு அமைப்புகளிலும் இருந்துகொண்டு மாவோயிஸ்ட் சிந்தனையைப் பரப்புபவர்களைக் குறிக்கவே பாசிச மோடி இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தி வருகிறார். இந்த திமாகி நக்சல் என்ற வார்த்தையை பாசிச மோடி தற்போது புதிதாக பயன்படுத்தவில்லை. பல்வேறு காலகட்டங்களில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் மத்தியிலான பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் இதனை பயன்படுத்துகின்றார்.
சுதந்திர தின உரைக்குப் பின்னர் டெல்லி பல்கலைக்கழக நிகழ்வொன்றில் பேசிய அவர், தனது ‘திமாகி நக்சல்’ என்ற பேச்சு ஒரு ஹோமியோபதி மருந்து போலச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். அந்த மருந்தைக் கொடுத்தவுடன் மறைந்திருந்த திமாகி நக்சல்கள் அனைவரும் வெளியே வரத் தொடங்கிவிட்டதாகவும், மக்களுக்கு அவர்களின் உண்மை முகம் தெரியவந்துள்ளதாகவும் கூச்சலிட்டு வருகிறார்.
அதன் உச்சகட்டமாக தற்போது பிற கட்சிகளில் உள்ள பாசிச பாஜகவின் அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராக பேசுபவர்கள், செயல்படுபவர்கள், போராடுபவர்கள் அனைவரையும் திமாகி நக்சல் என்று அடைமொழியில் முன் வைத்துள்ளார் என்பது மட்டுமின்றி அவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
படிக்க: மத்திய இந்தியாவை ரத்தக் களரியாக்கும் ஆபரேஷன் காகர் – 2.
குறிப்பாக, கடந்த நவம்பர்-8 ஆம் தேதியன்று சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியபோது, “காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சல்கள் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், ‘திமாகி நக்சல்கள்’ பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதாகவும், இவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும்.” என்று கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியும், இந்தியாவின் தலைமை கார்ப்பரேட் நிர்வாக அதிகாரியாக செயல்படுகின்ற பாசிச மோடி திருவாய் மலர்ந்துள்ளார்.
நக்சல் என்றால் காடுகளில் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடுபவர்கள்; வன்முறையை முன்வைத்து தீவிரவாத பாதையில் நாட்டை வழிநடத்தி செல்பவர்கள்; மொத்தத்தில் அவர்களெல்லாம் தேசவிரோதிகள் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலில் அரிய கண்டுபிடிப்பாகும்.
இத்தகைய சூழலில் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற நாடாளுமன்ற இடதுசாரிகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது என்பதை பரிசீலனை செய்தால் பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியை கட்டுவது பற்றியோ, பாசிசத்தின் செயல் திட்டங்களை எதிர்த்து முறியடிக்கின்ற வகையிலான போர்க்குணமிக்க போராட்டங்களை கட்டியமைப்பது பற்றியோ, குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவது பற்றியோ கவலையில்லாமல் இருக்கின்றனர்.
“பாசிசம் முன்னேறி தாக்கிக் கொண்டிருந்தபோது முதலாளித்துவ வர்க்கம் சாதாரண முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக் கூட ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்த பொழுது தொழிலாளி வர்க்கம் சமூக ஜனநாயக கட்சியின் வெறும் சொல்லளவிலான தீர்மானங்களோடு மட்டும் திருப்தி அடைந்து இருந்திருக்கக் கூடாது. ஆனால் அதற்கு ஓர் உண்மையான வெகுஜனப் போராட்டத்தின் மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கும் வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்திற்கு தங்களுடைய பாசிச திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கும்”என்று எச்சரிக்கை விடுத்தார் தோழர் டிமிட்ரோவ்.
திமாகி நக்சல்கள் பற்றி பாசிச மோடி தீவிரமாக உரை நிகழ்த்திய பிறகு நவம்பர் 10, 2026 அன்று சென்னையில் உள்ள சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து 13 பக்கங்கள் கொண்ட ‘கூட்டு அறைகூவல்’ (Joint Declaration) ஆவணத்தை வெளியிட்டன.
படிக்க: ‘திமாகி நக்சல்களும்’, பாசிச மோடியின் பயங்கரவாத அடக்குமுறைகளும்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [CPI(M)], மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை [CPI(ML) Liberation] ஆகிய கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் மு. வீரபாண்டியன், பெ. சண்முகம் மற்றும் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் இணைந்து இதை வெளியிட்டனர்.
இடதுசாரி மாற்று உருவாக்கம், கார்ப்பரேட் ஆதரவு நவதாராளவாதக் கொள்கைகள், வகுப்புவாத சக்திகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக வலுவான இடதுசாரி மாற்றை உருவாக்குவதே இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் நோக்கம் எனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஆவணத்தை வெளியிட்ட கூட்டத்தில் மோடி பேசிய திமாகி நக்சல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை மாறாக வழக்கமாக அரைத்த மாவை அரைப்பது போல பொருளாதார ரீதியாக பாதிப்புகளை முன்வைத்து பாஜகவை அம்பலப்படுத்துவது என்ற அளவில் மட்டும் முடித்துக் கொண்டார்கள்.
பாசிசத்தை வீழ்த்துவதற்கு இடது முன்னணி ஒன்று தேவை என்பதை நாம் மறுக்கவில்லை என்றாலும் பாசிசம் என்பதையே ஏற்றுக் கொள்ளாத நாடாளுமன்ற இடதுசாரிகள், பாசிச பாஜகவை பிற கட்சிகளைப் போல மற்றொரு அரசியல் கட்சி என்று மதிப்பீடு செய்து அதற்கு எதிராக அரசியல் நடத்துவதன் மூலம் உண்மையிலேயே பாசிசம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள்.
1930 களில் முதலாவது உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அதன் உப விளைவாக தோன்றிய நிதி மூலதனத்தின் பிற்போக்கான பாசிச பயங்கரவாதத்தின் தோற்றம் பற்றி முன்வைத்த தோழர் டிமிட்ரோவ் அதனை புரிந்து கொண்டு எதிர்த்து எதிர்வினையாற்றாத சமூக ஜனநாயக கட்சிகள் தான் பாசிசம் தோன்றுவதற்கான புறநிலைக் காரணங்களில் முக்கியமானது என்று கடுமையாக விமர்சித்தார்.
படிக்க: தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம் || மீள்பதிவு
2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வலதுசாரி அரசியல் தலைவர்களும் பாசிச கொள்கைகளை முன்னிறுத்தக்கூடிய கட்சிகளும் பாசிச பயங்கரவாதிகள் தலைவர்களாக மக்கள் மத்தியில் வலம் வருகின்ற சூழலில் அதனை எதிர்த்து முறியடிப்பதற்கு பதிலாக வழக்கமான புளித்துப் போன பொருளாதார வாத அரசியல் நடத்துவதன் காரணமாக தான் தற்போது வலதுசாரி சித்தாந்தம் உலகில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
முன்னாள் சோஷலிச நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக சீனாவின் ஷி ஜின் பிங், ரஷ்யாவின் விளாதிமிர் புடின் போன்றவர்கள் கூட பாசிச ஆதரவாளர்களாக மாறி உள்ள சூழலில் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற இடதுசாரிகள் இன்னமும் பாசிச எதிர்ப்பை சரியான முறையில் கையாளாகாமல் பேசுவது, எழுதுவது, மாநாடுகள் நடத்துவது, பேரணிகள் நடத்துவது போன்றவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு சாதகமாக மாறிக்கொண்டு உள்ளதே தவிர அவர்களின் அடிப்படையை கண்டுபிடித்து அதற்கு எதிராக போராடுகின்ற துணிவையும் மக்கள் எழுச்சியையும் உருவாக்குவதற்கு பயன்படவில்லை.
பார்ப்பன பாசிசத்தின் வழியே இந்தியாவில் நுழைந்துள்ள நிதி மூலதனத்தின் கொடூரமான வடிவம் தான் இந்திய வகைப்பட்ட கார்ப்பரேட் காவி பாசிசம் என்பதை முன்வைத்து மக்களை திரட்டுவோம். பாசிசத்திற்கு எதிராக நேரடியாக போராடாமல் ஆர்எஸ்எஸ் பாஜகவை பிற கட்சிகளை போல கையாளுகின்ற நாடாளுமன்ற இடதுசாரிகள் உள்ளிட்ட திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள் தலைமையை தூக்கி எறிவோம்.
திமாகி நக்சல்கள் தான் அடுத்த தாக்குதல் என்று சவால் விடுத்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவின் கூடாரத்தின் முகமூடியை கிழித்தெறிந்து நாட்டின் மிகப்பெரிய அபாயம் பார்ப்பன பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் தான். இவை இணைந்து கார்ப்பரேட் காவி பாசிசமாக பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருகிறது என்பதை அம்பலப்படுத்தி தக்க பதிலடி கொடுப்போம்.
◾தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







