தேர்தல் காலங்களில் அல்லது அரசியல்வாதிகளுக்கு நேரமில்லாத பொழுது டீக்கடையில் எளிமையாக டீ குடித்தார். தலித் வீட்டில் உணவருந்தினார். ஓட்டலில் தோசை சுட்டார். இப்படி பலவிதமான செய்திகளை, பலவிதமான கோணங்களில் நியூஸ் சேனல்கள் ஒளிப்பரப்புவதை பார்த்திருப்போம். அப்படி மோடி ஒரு வீட்டிற்கு சென்று டீ அருந்தியதும் அதன்பின் அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பது தான் இந்த கட்டுரை பேசுகிறது.
2023 டிசம்பர் 30 அன்று, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள மீரா மாஞ்சியின் வீட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். உஜ்வலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி என்பதால் மீரா மாஞ்சியின் குடும்பம் அப்போது நாடு முழுவதும் கவனம் பெற்றது. மோடி வருவதற்கு ஏற்ப சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கேசுவலாக பிரதமர் வருவதாக ஒளிபரப்பின கோதி மீடியாக்கள்.
அவரது வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி, குடும்பத்தினருடன் உரையாடினார். 5 லட்சம் மதிப்புள்ள காளான் சாப்பிடும் ‘ஏழை’ மோடி தானும் ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக பழம்பெருமை பேசினார். இந்த நிகழ்வு ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. அரசின் நலத்திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றி வருவதாகப் பிரதமரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
பிரதமர் பயன்படுத்திய தேநீர் கோப்பையைக்கூட மீராவின் குடும்பத்தினர் வீட்டில் பத்திரமாக வைத்திருந்தனர். அந்த அளவிற்குப் பிரதமரின் வருகையை அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். ஆனால், அந்தச் சந்திப்புக்குப் பிறகு குடும்பத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிவிட்டு கடன் வழங்கிய அதிகாரிகள்
பிரதமர் சென்ற பிறகு, மாவட்ட ஆட்சியர், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மீராவின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவரது குடும்பத்தின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலை குறித்து விசாரித்தனர். ஏதோ நாளைக்கே அவர்களின் வாழ்க்கையை மாற்றுவது போல் பரபரப்பாக இயங்கினர். மீரா மாஞ்சிக்கு பூ விற்பனை செய்ய நிரந்தர இடம் ஏற்பாடு செய்து தருவதாகவும், அவரது கணவர் சுராஜ் குமார் மாஞ்சிக்கு நதியில் படகு ஓட்டுவதற்குப் படகு கட்ட உதவி செய்வதாகவும் உறுதியளித்தனர்.
மோடி வந்த பிறகு வரிசையாக வந்து மோடியை போன்றே வாக்குறுதிகள் அளித்துவிட்டு சென்ற அதிகாரிகள் அதன் பின் தலைகாட்டவுவில்லை, கண்டுக் கொள்ளவுமில்லை. சில மாதங்களுக்குப் பிறகு உதவி கேட்டு மாஞ்சி குடும்பத்தினர் அதிகாரிகளைச் சந்தித்தபோது, அவர்கள் தங்களை அடையாளம் தெரியாதது போல நடந்துகொண்டதாக மீரா குற்றம்சாட்டுகிறார். பின்னர், வேரறு வழியில்லாமல் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமான PMEGP மூலம் அவரது கணவருக்குப் படகு கட்டுவதற்காக வங்கிக் கடன் வழங்கப்பட்டது.
படிக்க: அயோத்தியில் உயர்ந்த காவிக் கொடி! மதச்சார்பற்ற இந்தியாவின் அவமானச் சின்னம்!
இதுகுறித்து மீரா மாஞ்சி கூறுகையில்: “நாங்கள் அரசிடம் பணம் கேட்கவில்லை. எங்கள் கணவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகக் கூறினார்கள். அந்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றக் கேட்டோம். நாங்கள் கடன் கேட்கவில்லை” என்றார். செய்தி அறிக்கைகளின்படி, அவரது குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ. 2,61,250-ம், இரண்டாவது கட்டமாக ரூ. 23,750-ம் கடனாக வழங்கப்பட்டது. இந்தப் பணத்தில் (மேலும் கடன் பெற்று) படகு கட்டப்பட்டாலும், அதன்மூலம் குடும்பத்திற்குத் தொடர்ந்து வருமானம் கிடைக்கவில்லை.
வருமானம் இல்லாமல் அதிகரித்த கடன் சுமை
மீரா மாஞ்சியின் குடும்பம் கடன் நெருக்கடியில் சிக்குவதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. மீரா மாஞ்சிக்கு பூ விற்பனை செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் வியாபாரம் செய்ய ரூ. 5,000 கேட்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் பூ வியாபாரத்தையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. (மோடியின் ராசி அப்படி என நீங்கள் நினைத்தால் அதற்கு இணையதளம் பொறுப்பல்ல.)
சுராஜ் குமார் மாஞ்சி வங்கிக் கொடுத்த கடனின் மூலம் படகு கட்டி நதியில் போக்குவரத்துத் தொழில் செய்யத் தொடங்கினார். ஆனால், நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அயோத்தி முதல் வாரணாசி வரை இயக்கப்படும் பெரிய சொகுசுக் கப்பல்கள், மோட்டார் படகுகள் ஆகியவற்றால் சிறிய படகுகளுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவரது தொழிலும் எதிர்பார்த்த அளவுக்கு வருமானத்தைத் தரவில்லை.
வருமானம் குறைந்ததால் சுராஜ் குமார் மாஞ்சியால் வங்கிக் கடனை முறையாகச் செலுத்த முடியவில்லை. இதனால் கடன் நிலுவை ரூ. 2,04,616 ஆக உயர்ந்தது. இதையடுத்து வங்கி அந்தக் கடனை வாராக்கடன் (NPA) என அறிவித்தது(தள்ளுபடி செய்யவில்லை). 2026 ஜூலை 5 அன்று வங்கியிலிருந்து இதுகுறித்த அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
மூன்று குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம், அன்றாட உணவுக்கே சிரமப்படும் நிலையில் கடன் வசூலிப்பவர்களின் நெருக்கடியையும் சந்தித்து வருகின்றனர். தங்களுக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சருக்குப் பல மாதங்களாகக் கடிதங்கள் எழுதியும் பதில் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் விமர்சனமும் மேயரின் விளக்கமும்
2026 அக்டோபர் 28 அன்று உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரத் சுக்லா ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் மீரா மாஞ்சியும் அவரது கணவரும் தங்களது குடும்ப நிலையைப் பற்றிப் பேசினர். பிரதமருக்கு தேநீர் வழங்கிய குடும்பம் இன்று உணவுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இது பிரதமர் மோடி கூறும் வளர்ச்சி மாதிரியின் உண்மையான நிலையை வெளிப்படுத்துவதாகவும் அக்கட்சி தெரிவித்தது.
இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே அந்தக் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கினார். அயோத்தி மேயரும் பாஜகவைச் சேர்ந்தவருமான கிரீஷ் பதி திரிபாதி ரூ. 60,000 வழங்கினார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மேயர் திரிபாதி, அந்தக் குடும்பத்திற்கு ஏற்கெனவே பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு, உஜ்வலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு, PM ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் படகு பழுதுபார்க்க ரூ. 25,000 கடன், PMEGP திட்டத்தின் கீழ் ரூ. 75,000 மானியத்துடன் ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாமே அந்த குடும்பத்தின் செலவை அதிகரித்திருந்ததே தவிர குடும்பத்தின் நிலையை உயர்த்தவில்லை.
படிக்க: அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்தில் மதுரை!
மாஞ்சியின் குடும்ப நிலை தான் இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களின் அவலநிலை. வெற்று விளம்பரத்திற்காக அப்பாவி மக்களின் வீட்டிற்குள் நுழைந்து அதை இந்திய அளவில் பேசு பொருளாக்கி “பிரதமர் மோடி ஏழையின் வீட்டில் டீ குடித்தார்” என்று மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களின் மூலம் விளம்பரம்படுத்தி கேவலமான ஓட்டரசியலுக்கு பயன்படுத்துகிறது பாசிச பாஜக. அரியாமையில் மூழ்கியிருக்கும் மாஞ்சி போன்ற அப்பாவி உழைக்கும் மக்கள், மோடி நம் வீட்டிற்கு வந்ததனால் அரசு அதிகாரிகள் நமக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போவதுடன் மேலும் பொருளாதார சுமையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதானி, அம்பானி உள்ளிட்ட மோடியின் நெருங்கிய நண்பர்களும் முதலாளிகளும் வாங்கிய பல லட்சம் கோடி கடன்கள் கடந்த 10 ஆண்டுகளின் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாஞ்சி வாங்கிய 2 லட்சம் கடனை கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். மாஞ்சி போன்ற ஏழைகளுக்கு கடனை அடைக்க வழியில்லாததை அறிந்திருந்தும் வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதன் மூலம் அவர்களை கந்து வட்டிக் காரர்களை நோக்கித் தள்ளுகிறார்கள். அதே நேரம் பல லட்சம் கோடி சொத்துக் குவித்துவைத்துள்ள ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் உள்ள அதானி, அம்பானியின் கடன்களை சத்தமில்லாமல் ரத்து செய்கிறார்கள். இந்த உண்மையை அறியாமல் விழிப்புணர்வு கொள்ளாமல் பாசிச பாஜகவின் அரசியலை புரிந்துக் கொள்ள முடியாது.
நலன்
ஆதாரம்: தி வயர்






