இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், அதன் நான்காவது தூணாக ஊடகத்துறை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் ஊடகத் துறைக்கு கருத்து சுதந்திரம் என்பது மிகவும் அவசியமல்லவா? இன்று பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் ஆளுங்கட்சி அளிக்கும் விளம்பரத்திற்காகவும், மற்ற சலுகைகளுக்காகவும் விலை போய்விட்டன. அப்படியும் படியாத ஒரு சில ஊடகங்கள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுகின்றன. பல வகைகளில் அடக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றன.
இந்த நிலையில் சமூக ஊடகங்களின் பங்களிப்பை நாம் மறுக்க முடியாது. அவை ஒரு புறம் மக்களிடம் பொய் செய்திகளை பரப்ப உதவுகின்றன என்றாலும், உண்மை நிகழ்வுகளை வெளிக்காட்டுவதில் விடிவெள்ளியாகவும் திகழ்கின்றன. அப்படி உள்ள சமூக ஊடகங்களை ஒடுக்குவதில் பாசிச பாஜக இப்போது முன் எப்போதையும் விட அதிக முனைப்பு காட்டி வருகிறது. எதிர் அணியினர் மீதான அவதூறுகள், பொய்கள், வதந்திகளை கட்டுப்பாடின்றி அனுமதிக்கும் ஒன்றிய பாஜக அரசு, அரசின் மீது விமர்சனங்களை வைக்கும், அதன் போலி முகத்தை அம்பலப்படுத்தும், அதன் அராஜகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவுகளை நீக்குவதில் அதீத தீவிரம் காட்டுகிறது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் தங்களது பதிவுகள் முடக்கப்படுவதாக அல்லது நீக்கப்படுவதாக பயனர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். அத்தகைய பதிவுகளை பார்க்கும் போது “உங்கள் பதிவு இந்தியாவில் கிடைக்கவில்லை” என்பதான அறிவிப்புகள் தான் வருகின்றன. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவை நீக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், இத்தகைய சமூக ஊடக முடக்கத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அக்டோபர் 8 மற்றும் 10 ஆதிய தேதிகளில் வெளியிட்ட இரண்டு அறிவுரைகளைத் தொடர்ந்து இத்தகைய முடக்க நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
படிக்க: பொய்யின் மூலம் சமூக பதற்றத்தை உருவாக்கும் சங்கிகள்!
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைய சட்டப்பிரிவால் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு உரிமையாளரான மெட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அறிவுரையில், நடைபெற்று வரும் பொது நிகழ்வுகள் தொடர்பான உள்ளடக்கத்தின் மீது “மேம்படுத்தப்பட்ட கவனத்தை” செலுத்துமாறும், அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய அல்லது பிற சட்ட விரோத செயல்களை தூண்டக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பரவலான மக்களை சென்றடையும் உள்ளடக்கத்தை விரைவாகக் கண்டறிந்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒத்துழைக்கவும் அது கேட்டுக் கொள்ளப்பட்டது. உரிய அரசு அமைப்பின் அறிவுறுத்தல் வந்தவுடன் சமூக ஊடக நிறுவனங்கள் 3 மணி நேரத்திற்குள் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிக்க: ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை! ’கருத்துரிமைக் காவலன்’ எலான் மஸ்க் எரிச்சல்!
டெல்லி காவல் துறையின் புலனாய்வு ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசார் செயல்பாடுகள் (IFSO) பிரிவின் அதிகாரி ஒருவரது கூற்றின்படி, தானியங்கி நீக்கங்கள் அதிகரித்ததால், அக்டோபர் மாதத்தில் அப்பிரிவால் வழங்கப்பட்ட நீக்க அறிவிப்புகளின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த மூன்று மாதங்களில் டெல்லி காவல்துறை சுமார் 300 நீக்க கோரிக்கைகளை விடுத்துள்ளது. இத்தகைய கோரிக்கைகளின் மூலம் மோலிடிக்ஸ் மற்றும் ஜெர்னோ மிரரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன.
அக்டோபர் 11 அன்று ஒரு பெண் போராட்டக்காரரை காவல்துறை கைது செய்வதைக் காட்டும் மாத்ருபூமியின் காணொளி ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சென்ற நிலையில், இந்திய அரசு/சட்ட அமலாக்கத் துறையிடம் இருந்து வந்த அறிவிப்பு எனக் காரணம் காட்டி அப்பதிவு நீக்கப்பட்டது. சுயாதீன பத்திகையாளர்களான சுபாங்கி தாஸ் குப்தா, முஸ்கான் அகர்வால் மற்றும் ஷியாம் மீரா சிங் ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டன. போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக குறைந்தது 17 பயனர்களின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் குறித்த சதீஷ் ஆச்சார்யா மற்றும் மஞ்சுல் ஆகியோரின் கேலிச்சித்திரங்களும் நீக்கப்பட்டன.
வழக்கறிஞர் ரிஷவ் ரஞ்சன், “மெட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் நேரடி விளைவினால் பதிவுகள் நீக்கப்படுகின்றன. அந்த அறிவுறுத்தல்கள் மெட்டாவின் சமூகத் தர நிலைகளில் இணைக்கப்பட்டு, நிறுவனத்தின் சொந்த கொள்கைகளின் கீழ் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுப்பதாகத் தெரிகிறது” என்கிறார். பயனர்களின் பதிவுகள் முடக்கப்படும் போது அவர்கள் பிரிவு 69 A மற்றும் 79 (3) (b) ஆகிய விதிகளின் கீழ் கேள்விக்கு உட்படுத்தலாம்.
படிக்க: சமூக ஊடகம் & மைய ஊடகப் போராளிகளின் ’தேசபக்தி-போர்வெறி’!
இருப்பினும் ஒரு தளத்தின் உள்ளடக்கம் கட்டுப்படுத்தப்பட்டால், பயனர்கள் முதலில் அந்தத் தளத்தின் குறை தீர்ப்பு அதிகாரியை அணுக வேண்டும். அதன் பிறகே அரசாங்கத்தின் குறை தீர்ப்பு மேல்முறையீட்டு குழுவிடம் முறையீடு செய்ய முடியும். இத்தகைய மாற்றம் பயனர்கள் உரிய நேரத்தில் நிவாரணம் பெறுவதை மேலும் கடினமாக்கி உள்ளது. குறை தீர்ப்பு அதிகாரிக்கு கடிதம் எழுதினால் பெரும்பாலும் ஒரு தானியங்கி ஒப்புகை மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு முடிவுக்காக 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேல் முறையீட்டிற்கு மேலும் 60 முதல் 90 நாட்கள் ஆகும். அதுவரை பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கும். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரமும், நம்பகத் தன்மையையுமே பாதிக்கப் படும்.
மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு, தமக்கு எதிராக விமர்சனங்களை முன் வைக்கும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களின் மீதும் ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. நமது முகநூல் பக்கங்களே பலமுறை முடக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் சிஜேபியின் இன்ஸ்டாகிராமை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பாஜக-வினரின் எண்ணிக்கையை விஞ்சிய சில மணி நேரங்களிலேயே இந்தியாவில் சிஜேபி யின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது. இன்ஸ்டா பக்கமும் பலமுறை கட்டுப்படுத்தப் பட்டது. இத்தகைய பாசிச ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் இடதுசாரி அமைப்புகளும் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்து ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பலை அம்பலப்படுத்தி வீழ்த்துவதைத் தவிர வேறு தீர்வு இல்லை.
குரு







