நாகாலாந்து சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற‌ இராணுவத்தினர் மீது நடவடிக்கையை முடக்கும் மோடி அரசு.

இராணுவம் என்பது மக்கள் கண்காணிப்பில் இல்லாத, வரம்பற்ற அதிகாரம் கொண்ட ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அக்னிபத் வீரர்கள் சேர்ந்தால் அது கான்ட்ராக்ட் கூலிப்படையாகவே மாறிவிடும்.

டந்த டிசம்பர் 4, 2021 அன்று டிரு- ஒகிட் பகுதியில் சுரங்க வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்த தொழிலாளிகள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் இறந்தனர்.  14 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாகாலாந்து மாநில அரசு இந்த படுகொலையை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது.  அந்த புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இராணுவத்தினர் சாதாரண மக்கள் என தெரிந்தே சுட்டுக் கொன்றது அம்பலமாகியுள்ளது. நாகாலாந்து தேசிய சோசலிச சபை (K-YA) என்ற தடை செய்யப்பட்ட கட்சியின் ஆயுதந்தாங்கிய குழு நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒகிட் பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சுரங்க வேலைக்குச் சென்றுவிட்டு ஜீப்பில் வந்த கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவ பிரிவின் தலைவர் ‘தவறான’ பகுதிக்கு வந்துவிட்டோம் என தகவல் தெரியவந்த பிறகும் 50 நிமிடங்கள் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தவில்லை என சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது. அதனால் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட கமாண்டர் உட்பட 30 இராணுவத்தினர் மீதும் 302 (கொலை), 307 (கொலை செய்ய முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 2022 ஏப்ரல் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. மே மாத ஆரம்பத்திலேயே முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்துவிட்டது. இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த இராணுவத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்க அனுமதிக்கவில்லை.

இன்னொருபுறம் இந்த துப்பாக்கிச்சூடு நாகாலாந்து மக்களின் கோபத்தை தணிக்க கடந்த மார்ச் 31 ந்தேதி  நாகாலாந்து மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள  பகுதியை குறைப்பதாக ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.


இதையும் படியுங்கள்: நாகலாந்தில் அரச படுகொலை | மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி


நாகாலாந்து மாநிலத்திலும் பிற வடகிழக்கு மாநிலங்களிலும் சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமலில் உள்ள இடங்களில் இராணுவத்தினர்  பல ஆண்டுகளாக பல்வேறு அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் நடத்தியுள்ளனர். அவற்றுக்கு எல்லாம் பெரும்பாலும் இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டதில்லை. இந்த வழக்கிலும் இராணுவத்தினரை காப்பாற்ற அந்த கொல்லப்பட்ட மக்கள் துப்பாக்கிகள் வைத்திருந்ததால் தான் இந்த பிரச்சினை. தீவிரவாதிகளுக்கும் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதாக கதையளந்தனர். நாகாலாந்து  பழங்குடி மக்களிடம் விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கிகள் வைத்திருப்பது இயல்பானது. அந்த துப்பாக்கிக்கும் ஆயுதப்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிக்கும் உள்ள வேறுபாட்டை இராணுவத்தினர் நன்கு அறிவர். அதை அறிந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பதே இராணுவத்தின் குரூரத் தன்மையை விளக்கும். இராணுவம் என்பது மக்கள் கண்காணிப்பில் இல்லாத, வரம்பற்ற அதிகாரம் கொண்ட ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அக்னிபத் வீரர்கள் சேர்ந்தால் அது கான்ட்ராக்ட் கூலிப்படையாகவே மாறிவிடும். இத்தகைய இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி இராணுவ அமைச்சகத்துக்கும் நாகாலாந்து போலிஸ் அறிக்கையை அனுப்பியதற்கும் தற்போது வரை பதில் இல்லை. இதனை கண்டிக்கும் PUDR அமைப்பு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.


 இதையும் படியுங்கள்: கண்ணீரை வற்ற வைக்கும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன?


  1. சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை முழுமையாக வெளியிடுவது.
  2. டிசம்பர் 4, 2021 அன்று பொதுமக்களை கொன்ற இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க இராணுவமும் ஒன்றிய அரசும் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளோடு AFSPA என்ற இராணுவத்தினருக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டத்தையும் நீக்க ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்‌.

  • திருமுருகன்

ஆதாரம்: https://m.thewire.in/article/rights/nagaland-killings-army-sanction-prosecution-pudr

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here