சமூக ஊடகம் & மைய ஊடகப் போராளிகளின் ’தேசபக்தி-போர்வெறி’!

இந்து குழுமத்தின் இயக்குநர் மாலினி பார்த்தசாரதி விழுந்தடித்து ஓடிவந்து அதே ட்விட்டரில் தன் எடிட்டர்களுக்கு தேசப்பற்று இல்லை என‌ கண்டித்து, மன்னிப்பு கேட்டார்.

0
இந்தியா,பாகிஸ்தான் ராணுவங்களின் தளவாடங்களை பட்டியலிட்டு திகில் ஊட்டுகிறார்கள்.

த்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது: “தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து ஊடகங்களும், சட்ட விதிகளை பின்பற்றி அதிகபட்ச பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டுகிறோம். குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ராணுவத்தின் நகர்வுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம். வீடியோ, புகைப்படங்களை கண்டிப்பாக வெளியிடக்கூடாது. ராணுவ நடவடிக்கைகள் குறித்த செய்திகள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும்.

கார்கில் போர், மும்பை தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களின்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செய்திகள் வெளியாகின. இவை நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தின. நாட்டின் பாதுகாப்பில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம். ராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் நேரலையாக ஒளிபரப்பு செய்யக்கூடாது”. என்று உத்தரவிட்டுள்ளது.

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா-அட்டாரி எல்லையை மூடியுள்ளனர். வாகா எல்லை பகுதியில் இரண்டு நாட்டு ராணுவமும் பூட்ஸ் காலுடன் நடத்துகின்ற வீர தீர சாகசங்களை பார்ப்பதற்கு கூடுகின்ற மக்களிடம் சுற்றுலா வருமானமாக கிடைத்த தொகை இனி கிடைக்காது.
இதனை ஒரு சாகச நடவடிக்கையை போல் அன்றாடம் ஒளிபரப்பி வந்த ஊடகங்கள் எல்லை மூடிவிட்டதை பற்றியும், அங்கே இராணுவத்தினர் குவிக்கப்படுவது பற்றியும் செய்தியாக வெளியிட்டால் அது தேசத் துரோகம் என்கிறது இந்திய ஒன்றிய அரசாங்கம்.

ஆனால் இணையதளத்திலும், முகநூல் பக்கங்களிலும் ’இணையப் போராளிகள்’ பாகிஸ்தானுக்கு எதிராக வாய் கூசாமலும், கை கூசாமலும், நா கூசாமலும் எழுப்புகின்ற பல்வேறு அவதூறுகள், வசவுகள், இழிவான சொல்லாடல்கள் மட்டுமின்றி, பாசிச மோடியின் ’தேசபக்தி போர் வெறிக்கு’ பலியாகி பாகிஸ்தான் மீது உடனடியாக தாக்குதல் நடத்துங்கள் என்று கூச்சலிடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவையெல்லாம் ’கருத்துரிமை காவலர்களான’ வாட்சப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை இயக்குகின்ற கார்ப்பரேட் முதலாளிகளான மார்க் சூகன் பெர்க்குக்கோ, எலான் மஸ்கிற்கோ கண்களில் படுவதில்லை அல்லது கண்டு கொள்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய இணையப் போராளிகளை உண்மையான போர் வீரர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வீட்டுக்கு ஒருவரை ராணுவத்தில் இணைக்க வேண்டும் என்று நாமும் கோரிக்கை விடுக்கலாம். அதற்கான ஆட்களை அக்ரகாரத்திலிருந்து அதிக சதவீதத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து பெயரளவுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கலாம்.

பஹல்காம் பகுதியில் பாக் ஆதரவு தீவிரவாதிகள் குழு தாக்கிவிட்டது என்று செய்திகள் வெளியானது. தற்போது அந்த குழுவினரே எங்களது இணைய பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டனர். நாங்கள் தாக்கியதாக செய்தியை வெளியிட்டுள்ளனர் என்றும், தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

படிக்க:

 காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை கோருகிறவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாசிச மோடி.

  இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட 3 காஷ்மீர் பழங்குடிகள்

இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும், ஃபேக் ஐடியில் இருந்து தேசபக்தி கூச்சல் போடுபவர்கள் இருக்கட்டும் ஆனால் மைய ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுகின்ற இந்து, தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிகைகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் போன்றவை அனைத்தும் தேசபக்தி கூச்சலிட்டு வருவதை வேதனையுடன் தெரிவித்துள்ளனர் நேர்மையான வாசகர்கள் சிலர்.

” 25ம் தேதி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் தலைப்புசெய்தி “ Pak shuts airspace, Snaps trade relations with India “ இப்படி வெளியானது. துக்ளக் குருமூர்த்தி இதை கண்டித்து பாகிஸ்தான் ‘டான்’ நியூஸ்பேப்பரை வாசிப்பதுபோல் இருக்கிறது என ட்விட்டரில் பகிர்ந்தார். உடனே இந்து குழுமத்தின் இயக்குநர் மாலினி பார்த்தசாரதி விழுந்தடித்து ஓடிவந்து அதே ட்விட்டரில் தன் எடிட்டர்களுக்கு தேசப்பற்று இல்லை என‌ கண்டித்து, மன்னிப்பு கேட்டார். பாகிஸ்தான் நியூஸ் பேப்பர்களை இணையத்தில் வாசிக்கமுடியும். மேலோட்டமாக பார்த்தால் கூட இந்திய ஊடகங்களின் வெறித்தனத்தை பார்க்கமுடியாது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைகள் பயிலும் சொற்களை கவனிக்க வேண்டும். Attack, Protest, crossfire, escalation, Blood boiling, National unity, Targeted firing………………

பாகிஸ்தான் நியூஸ் பேப்பர்கள் டான்(Dawn), பாகிஸ்தான் டுடே(Pakistan Today), பாகிஸ்தான் ட்ரிப்யூன்(Pakistan Tribune) இணையத்தில் வாசிக்கலாம். பஹல்ஹாம் தீவிரவாதிகள் தாக்குதலைப் பற்றி செய்திகள் வெளிவந்தாலும் அதில் நிதானத்தை பார்க்கமுடியும். மேலும் வேறு உள்நாடு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஏறத்தாழ லட்சம் லாரிகள் பாகிஸ்தானில் ஓடவில்லை. இண்டஸ் நதியில் ஏதோ கால்வாய் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். ஆஃப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை கண்டித்து எழுதுகிறார்கள். பஹல்ஹாம் குரூரத்தைப்பற்றி எழுதும்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐநா-வுக்கு பாகிஸ்தான் தூதராக இருந்த மலேஹா லோதி, ”A backchannel must be re-established to avoid Pak-India tensions from spinning out of control” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

In search of Peace Lobby, Ease Tension Diplomatically, Regional Peace, De escalation என வார்த்தைகளை கவனமாகவும் பொறுப்பாகவும் கையாள்கிறார்கள்.

எந்தளவுக்கு இந்திய ஊடகங்கள் பொறுப்பற்று இருக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள். போதாக்குறைக்கு இந்தியா,பாகிஸ்தான் ராணுவங்களின் தளவாடங்களை பட்டியலிட்டு திகில் ஊட்டுகிறார்கள். இதையெல்லாம்விட, இன்று தினமலரின் தலைப்புச்செய்தி “ அணு ஆயுத போர்”. என்று எழுதியுள்ளார் வாசுதேவன் என்ற நேர்மையான வாசகர்.

இதுதான் நேரடியாக களத்திற்கு செல்லாமல் பத்திரிகை ஆசிரியர்கள் என்ற பெயரிலும் செய்தியாளர்கள் என்ற பெயரிலும் பார்ப்பனக் கும்பலும் ஆதிக்க சாதி வெறியர்களும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் மனதில் வன்மத்துடன், இஸ்லாமிய வெறுப்பேறி செய்தி வெளியிடுகின்ற ஊடகங்களின் யோக்கியதை.

தகவல் தொழில் நுட்பமும், செயற்கை நுண்ணறிவுத் திறனும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் செய்திகளை சேகரிப்பதற்கு நேரடியாக களத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமல்ல. மயிலாப்பூரில் இருக்கின்ற ஒருவர் மந்தைவெளிக்கு செல்லாமலேயே பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்க முடியும்.

”சொல்லாடல்களை ரசனையுடன் எந்த இடத்தில் எதைப் போடுவது என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதுமானது; தான் எழுதுகின்ற எழுத்திற்கும், அது ஏற்படுத்துகின்ற சமூக விளைவுகளுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை” என்ற கேடுகெட்ட ஊடகக் கொள்கை இன்று தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.

செய்திகளை எழுதி பேப்பரில் மையைத் தடவி செய்தியாக வெளியிட்டால் அதுதான் உண்மை என்று ஆகிவிடும் என்று அந்த காலத்தில் கூறுகின்ற அதே நடைமுறைதான் இன்றைய டிஜிட்டல் உலகிலும் நடந்து கொண்டுள்ளது.

பல்வேறு செய்திகளையும், வெவ்வேறு ஊடகங்களில் வருகின்ற செய்திகளையும், சமூக ஊடகங்களில் ஒரு பொருளை பற்றி பலர் எழுதுகின்ற செய்திகளையும் ஆற அமர உட்கார்ந்து படிப்பதற்கு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாய்ப்பே கிடையாது.

அடிக்கின்ற அக்கினி வெயிலில் அன்றாடம் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்துக் கொண்டு, ரத்த வியர்வையை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி மக்களுக்கு, சமூக வலைதளங்களில் வருகின்ற செய்திகள், துண்டு துக்காணியாக பரப்பப்படுகின்ற செய்திகள், இடையிடையே வருகின்ற தேசபக்தி கூச்சல்கள் போன்றவை அனைத்தும் ஒரு சில வினாடிக்குள் படிக்கப்பட்டு விடுகிறது. முக்கியமான சில அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற அளவிற்கு வாழ்க்கை நெருக்கடி துரத்திக் கொண்டுள்ளது.

இத்தகைய அவலங்களுக்கு மத்தியில் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து இந்திய ஒன்றிய அரசாங்கம் வெளியிடுகின்ற செய்திகளையும், அதனை அப்படியே பரப்புகின்ற மைய நீரோட்ட ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை தற்போது உருவாக்கி வருகின்ற ’தேசபக்தி – போர் வெறி’ போன்ற வெறித்தனங்களுக்கு பலியாகக் கூடாது என்பதையே முன்னிறுத்த வேண்டியுள்ளது.

  • சீராளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here