“ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியும்” என்ற லெனினிச சகாப்தத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கின்ற கொடூரமான சுரண்டல் கொள்கைகளை எதிர்த்து முறியடித்து சுயசார்பு பொருளாதாரம் ஒன்றை சரியாக முன் வைக்க வேண்டும்.
அவ்வாறு ஒரு பொருளாதாரக் கொள்கையை முன்வைக்காமல் தாராளவாத அணுகுமுறையுடன் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டு சில்லறை சீர்திருத்தங்களை முன்வைக்கின்ற ஆட்சி முறையை 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச பாதை என்று விதந்தோதி வருகிறார்கள் உலகம் முழுவதும் உள்ள போலி கம்யூனிச ஆதரவாளர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள்.
சீனாவில் தோழர் மாவோ மறைவுக்குப் பிறகு உலகில் சோசலிச முகாம் மற்றும் சோசலிச நாடுகள் என்று எதுவும் இல்லை. ஆனால் மக்கள் சோசலிசத்தை விரும்புகிறார்கள். சோசலிச பாதையை திருத்தல் வாதத்திற்கும், வலது சந்தர்ப்பவாதத்திற்கும் கொண்டு செல்கின்ற ஆபத்தான போலி சோசலிசவாதிகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் பெற்று வருவதை தொடர்ச்சியாக புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அம்பலப்படுத்தி வருகின்றது.
இந்த வரிசையில் தற்போது பிரேசிலில் வெற்றி பெற்றுள்ள லூசிஸம் என்ற பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து செயல்பட்டு வருகின்ற லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வெற்றி குறித்து இந்தியாவில் உள்ள பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
படிக்க: பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !
“பிரேசிலில் லூலாவின் வெற்றியுடன் லத்தீன் அமெரிக்க அரசியல் வரைபடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. வலதுசாரிகள் ஆட்சி செய்யும் பகுதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், நிலப்பரப்பின் அடிப்படையில் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் பகுதிகள்தான் மிகவும் அதிகமானவை ஆகும்.”. என்று முன் வைத்துள்ளது நாடாளுமன்ற இடதுசாரிகளில் ஒரு பிரிவான தமிழகத்தின் சிபிஎம் கட்சி.
“உலகளவில் தீவிர வலதுசாரி பாசிச சக்திகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி வரும் நிலையில் லூலாவின் இவ்வெற்றி முக்கியத்துவமுடையதாகும்.
முக்கியமாக, தீவிர வலதுசாரி சக்திகள் மீது லூலா ஒடுக்குமுறை செலுத்தியது இவ்வெற்றிக்கு முக்கியமான காரணமாகும்”. என்றும் முன் வைத்துள்ளது தங்களை ‘ அதிதீவிர இடதுசாரிகளாக’ காட்டிக் கொள்ளும் வினவு கும்பல்.
பிரேசிலில் தற்போது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லூலா வின் 2003 முதல் 2011 வரையிலான முதல் ஜனாதிபதி பதவி காலகட்டங்களில் நடைபெற்ற சோசலிசத்திற்கு மாற்று என்று முன்வைக்கக்கூடிய தாராளவாத முதலாளித்துவ தன்மை கொண்ட சீர்திருத்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் விமர்சித்து வந்தோம்.
குறிப்பாக, ஏகாதிபத்தியங்கள் தனக்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டங்கள் மற்றும் ஆயுதப் போராட்டங்களை நீர்த்து போக செய்வதற்கு உருவாக்கிய தன்னார்வக் குழுக்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களின் கூட்டமைப்பான உலக சமூக மாமன்றம் போன்றவற்றை 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலக சமூக மாமன்ற கூட்டத்தை அம்பலப்படுத்தி இயக்கங்களை நடத்தினோம்.
படிக்க: தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம் || மீள்பதிவு
இந்தக் கண்ணோட்டத்தில் லூலா வெற்றி குறித்து புதிய ஜனநாயகம் இதழில் பின்வருமாறு எழுதியிருந்தோம்.
“தொழிலாளர் கட்சி (பி.டி.), சோசலிச சுதந்திரக் கட்சி (பி.ஓ.எஸ்.எல்.), பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (பி.சி.பி.), சுதந்திரத் தாயகக் கட்சி (பி.பி.எல்.), ஐக்கிய சோசலிசத் தொழிலாளர் கட்சி (பி.எஸ்.டி.யு.), தொழிலாளர்களுக்கான கட்சி (பி.சி.ஓ.) – என பிரேசிலில் உள்ள பல வண்ண போலி சோசலிசக் கட்சிகள், தனியார்மய – தாராளமயமாக்கலுக்கு எதிரான மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் வெற்றியைச் சாதித்து, நாடாளுமன்றத்திலும் செனட்டிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றின. இடதுசாரி சாயல் கொண்ட மையவாத பி.எம்.டி. போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தன. இக்கட்சிகளும் அவற்றின் கூட்டணி அரசாங்கமும் ஆளும் வர்க்கத்துடன் இணக்கமாகவே நடந்து கொண்டன.
போலி சோசலிசத் தொழிற்சங்கத் தலைவராக இருந்து, பின்னர் பிரேசிலின் அதிபரான தொழிலாளர் கட்சியைச் (பி.டி.) சேர்ந்த லூலா, ஐ.எம்.எஃப். கட்டளையிடும் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாக உத்திரவாதம் அளித்த பின்னரே அரசுத் தலைவராக்கப்பட்டார். கீழிருந்து வரும் மக்களின் அதிருப்திக்கு ஒரு வடிகாலாகவும், புரட்சிக்கு எதிரான பாதுகாப்புக் கவசமாகவும் பி.டி. கட்சி மாறிப் போனது.
பிரேசிலில் போலி சோசலிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் நோக்கத்திற்காகவே ஏகாதிபத்தியங்களும் தன்னார்வக் குழுக்களும் “உலக சமூக மன்றம்” (WSF) என்ற அமைப்பை உருவாக்கின.
ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கங்களிலிருந்து முகிழ்ந்த முன்னணியாகச் சித்தரிக்கப்பட்ட உலக சமூக மன்றத்தில் பிரேசில் தொழிலாளர் கட்சியும் அப்போதைய பிரேசில் அதிபர் லூலாவும் தலைமைப் பாத்திரமாற்றினர். “இன்னொரு உலகம் சாத்தியமே”, “மாற்றுகள் இருக்கின்றன” – என்று இப்போலி சோசலிசப் பித்தலாட்டத்தையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் சித்தரித்தனர். ஆனால், எந்த நாட்டில் கருவாகி உருவாகி உலக சமூக மன்றம் வளர்ந்ததோ, அந்த நாட்டிலேயே அது குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டுள்ளதை தற்போதைய மக்களின் எழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.
என்று ஆகஸ்ட் 2013 புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம்.
லூலாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் பிரேசில் மக்கள் மத்தியில் தோற்றுவித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு மற்றும் சோசலிச பொருளாதாரத்தை நோக்கிய சிந்தனைகள் ஆகியவற்றுக்கு பதிலாக நிலவுகின்ற கட்டமைப்புக்குள்ளேயே சில சீர்திருத்தங்கள் மூலம் நாம் வாழ்க்கையை நடத்திவிட முடியும் என்ற கண்ணோட்டத்தையே உருவாக்கியது.
இதனால் ஜெய்ர் போல்சோனாரோ போன்ற தீவிர வலதுசாரி கொள்கையை பேசிய பாசிச கும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் உதவியது. இரண்டாவது முறையாக 2021 ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றிய லூலா மீண்டும் தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ட்ரம்ப், இஸ்ரேலின் நெதன்யாகு உள்ளிட்ட பாசிச கும்பல் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆதரித்த போதும் அதனை எதிர்த்து முறியடித்து லூலா வெற்றி பெற்றுள்ளார் என்பதை சோசலிசத்தை நோக்கிய வெற்றி என்றோ அல்லது பாசிசத்திற்கு எதிரான சோசலிச பாதையை நோக்கி முன்னேறுகின்ற வெற்றி என்றோ எடுத்துக் கொள்ளவே முடியாது.
ஏனென்றால், பிரேசிலில் நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டமானது பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கும் நிரந்தரமாக முடிவு கட்டுகின்ற வகையிலோ அல்லது பாசிஸ்டுகள் மீண்டும் தலையெடுக்காத வண்ணம் திருத்தப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படவில்லை.
படிக்க: புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 மாத இதழ்
சர்வதேச பாசிச எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவு, பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தாராளவாத முதலாளித்துவத்தையும், தாராளவாத ஜனநாயகத்தையும் முன்வைக்கின்ற நாடாளுமன்ற இடதுசாரிகள், போலி கம்யூனிஸ்டுகள் ஆகியவர்களின் நடைமுறையில் இருந்து இந்தியாவின் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கு புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முன்வைத்துள்ள ஜனநாயக கூட்டரசு சில நிபந்தனைகளை முன்வைக்கின்றது.
பாசிசத்தை வீழ்த்திய பிறகு உருவாக்கப்படும் ஜனநாயக கூட்டரசானது மீண்டும் பாசிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர முடியாத அளவிற்கு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பாசிசம் தோன்றுவதற்கு பொருளியல் அடித்தளமான தரகு முதலாளிகளின் மேல்மட்ட பிரிவான தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும், இந்தியாவில் பாசிசத்திற்கு மிகப்பெரும் அரணாக விளங்குகின்ற பிற்போக்கு சக்திகளான நிலப்பிரபுத்துவ பொருளியல் அடித்தளத்தை உடைக்கின்ற வகையில் மிகப்பெரிய அளவில் நிலங்களை கைப்பற்றி வைத்துள்ள ஆதீனங்கள், மடங்கள், கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஆகிய நிபந்தனைகளை முன்வைத்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை முன்வைக்கின்றது புதிய ஜனநாயகம்.
இதெல்லாம் சாத்தியம் இல்லை நிலவுகின்ற அரசு கட்டமைப்பிற்குள் சீர்திருத்தத்தை முன்வைத்து கட்சிகளுடன் ஐக்கியமாக ஐக்கிய முன்னணி கட்டுவது அல்லது பாசிச எதிர்ப்பு பேசுகின்ற ஊசலாடுகின்ற கட்சிகளுடன் சேர்ந்தாலே நாமும் சீரழிந்து போய் விடுவோம் என்ற அச்சத்தில் ‘தூய்மைவாதிகளாக’ காட்டிக் கொள்வதற்கு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சாத்தியம் இல்லை என்பது போன்ற பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான திருத்தல்வாத கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை நிராகரிக்கின்றோம்.
படிக்க: ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை | மீள்பதிவு
பொத்தாம் பொதுவாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைக்க வேண்டும். பொதுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, சோசலிச ஆதரவு என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது கற்பனவாத தன்மையில் செயல்படுவதற்கும், தேர்தலை ஆதரிக்கவும், இல்லை புறக்கணிக்கவும் இல்லை லூலாவை ஆதரிக்கவும் இல்லை, அதே சமயத்தில் எதிர்க்கவும் இல்லை போன்ற இரட்டை நிலைப்பாடுகள் எடுப்பதற்கு தான் உதவும்.
இத்தகைய போக்குகளுக்கு எதிராக மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் இருந்து பிரேசிலில் லூலாவின் வெற்றி ட்ரோஜன் குதிரையில் பயணம் செய்வதைப் போன்ற ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
மாற்று ஏகாதிபத்திய எதிர்ப்பு சுயசார்பு பொருளாதாரத்தை முன்வைக்கின்ற சோசலிசத்தை தனது திட்டமாக கொண்டு செயல்படுகின்ற பாசிச எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபட்டு அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
இதனை நிராகரிப்பவர்கள் ஒன்று ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்களாகவோ அல்லது மார்க்சிய லெனினியத்திற்கு எதிராக சந்தர்ப்பவாத, சமரச வழிமுறைகளில் மூலம் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற பச்சையான திருத்தல்வாதத்தை ஆதரிப்பவர்களாகவோ தான் இருக்க முடியும்.
- முகம்மது அலி.
புதிய ஜனநாயகம் தினசரி






