பினான்ஸ் கிரிப்டோ நிறுவனத்தின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கோவிந்தா! படித்த முட்டாள் கூட்டத்திற்கு அதிர்ச்சி!

“கிரிப்டோ கரன்சியில் வர்த்தகம் எப்படி நடக்கிறது?

ஒரு கணினி வலைப் பின்னல் (Computer network) மூலமாக, அதன் பரிமாற்ற ஊடகமாக வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் நாணயம்தான் (காகிதப் பணமோ, உலோக நாணயமோ அல்ல) கிரிப்டோவில் பயன்படுத்தப்படுகிறது.இந்த மெய்நிகர்  (கற்பனை) நாணயங்களை வாங்கலாம், விற்கலாம் மற்றும் அதில் முதலீடும் செய்யலாம். ஆனால் இதற்கு சட்டப்படியான மதிப்போ அல்லது பாதுகாப்போ கிடையாது.

கிரிப்டோவில் பல்வேறு வகையான நாணயங்கள் உலா வருகின்றன. அதில் பிட்காயின், எத்ரியம் போன்றவை பிரபலமானவை. இந்த மெய்நிகர் நாணயங்களில் நடக்கும் வர்த்தகத்திற்கு 30 சதம் வரி போடப்படுகிறது.  இந்த வர்த்தகம் முழுவதும் பிளாக் செயின் எனும் பொதுத் தளத்தில் பதிவாகிறது. இந்த வர்த்தகத்திலும் பங்குச் சந்தையை போலவே ஒருவரின் இழப்பு மற்றவருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது.

இப்படியான கிரிப்டோ எனும் புதிய உலகத்தில் இந்தியாவின் இளம் வயதினர் அதிகம் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. புதிய கிரிப்டோ பயனர்களில் பலர் 35 வயதிற்கும் உட்பட்டவர்கள். இதில் முதலீடு செய்வதில் பெரும்பாலானோர் பொறியாளர்களாகவும், எம்பிஏ பட்டதாரிகளாகவும், ஐடி துறை ஊழியர்களாகவும் உள்ளனர். 2021 ஆம் ஆண்டில் மட்டும் 30 முதல் 40 சதம் பெண்கள் புதிதாக இந்த வர்த்தகத்தில் நுழைந்துள்ளனர். முந்தைய ஆண்டில் இது 15 சதவீதமாக இருந்தது” கிரிப்டோ கரன்சி தூண்டிலில் சிக்கும் இளம் இந்தியர்கள் என்று 2024 மார்ச் மாத வாக்கிலேயே  எமது தோழமை இணையதளமான மக்கள் அதிகாரம் இணையதளத்தில் தோழர் குரு எழுதியிருந்தார்.

சமீபத்தில் பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனமான பினான்ஸ் என்ற நிறுவனத்தின் கணக்கிலிருந்து 6.3 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ சொத்துக்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாகரீகமான மொழியில் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும்  பெரும் தொகை திருடப்பட்டுள்ளது என்பதுதான் உண்மையான பொருளாகும்.

கிரிப்டோ கரன்சி நாணயங்களில் முதலீடு செய்வது ஒரு மோசடி என்பதை பல முறை விளக்கி கூறினாலும் படித்த முட்டாள் கூட்டம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக ஜென்சி இளைஞர்களிடம் ஒரு புதிய வகையான போக்கு உருவாகியுள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அசையும் சொத்துக்களில் முதலீடு போடுவது மற்றும் அசையா சொத்துக்களில் முதலீடு போடுவது என்ற இரு வகைகளில் நிலங்களை வாங்கி வைப்பது, வீடு கட்டி வைத்துக் கொள்வது போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதை இந்த தலைமுறை விரும்புவதில்லை.

ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல ஆண்டுகாலம் தங்குவதற்கான வேலை வாய்ப்பு வசதிகள், சூழ்நிலை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்பதால் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லக்கூடிய நிலைமையில் சொத்துக்களை ஓரிடத்தில் வைத்துக்கொண்டு பராமரிப்பது; வீடுகளை கட்டி அதனை பத்திரமாக பாதுகாப்பது போன்றவற்றை தொல்லை பிடித்த வேலையாக இந்த தலைமுறை கருதுகிறது.

படிக்க: கிரிப்டோ கரன்சி தூண்டிலில் சிக்கும் இளம் இந்தியர்கள்!

இதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது, உடனடியாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்கின்ற வசதி படைத்த முதலீட்டு தன்மை கொண்ட அம்சங்களில் மட்டும் தனது முதலீடுகளை குவிப்பது என்பதே சரியானது என்று கருதுகிறது இந்த தலைமுறை.

அதில் ஒன்றுதான் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது, இந்த கிரிப்டோ நிழல் பொருளாதாரத்தை உருவாக்குகிறது என்பது மட்டுமின்றி மெய் நிகர் பொருளாதாரத்திற்கு சவால் விடுகின்ற வகையில் கருப்பு பணத்தையும், கள்ள சந்தையில் பல கோடி ரூபாயை பதுக்கி வைக்கின்ற சட்டவிரோத பரிமாற்ற முறையையும் ஊக்குவிக்கிறது.

ஆனால் கிரிப்டோ கரன்சி என்பது சட்டவிரோத பரிவர்த்தனை முறை அல்ல. அது மிக மிக பாதுகாப்பற்ற முதலீட்டு முறை என்பது போன்ற கருத்துக்களை பல கோணங்களில் எடுத்து விளக்கி, அதாவது அவர்களிடம் ஆசையை தூண்டி இளம் பட்டதாரிகளையும், இளம் தொழிலாளர்களின் வருவாயையும் கவர்வதற்கு மூளையை கழுவுகின்றது ஒரு கும்பல்.

இந்த வகையில் பலவிதமான கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் தற்போது பினான்ஸ் என்ற கிரிப்டோ நிறுவனத்தில் நடந்துள்ள திருட்டு மிகப்பெரிய அதிர்ச்சியை இந்த வர்க்கத்திற்கு உருவாக்கியுள்ளது..

சமீபத்தில் நடைபெற்ற ஜியோவின் பங்குச்சந்தை வெளியீடு இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ சாதனையைப் படைத்துள்ளது.

இந்தப் பங்கு சந்தை விற்பனைக்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 1.3 கோடிக்கும் (1.38 கோடி) அதிகமாகும். இவ்வாறு குறுகிய காலத்தில் கையில் பணம் வைத்துள்ள சிறு சதவீதம் கொண்ட பிரிவினர் விண்ணப்பித்து உலக சாதனை படைத்துள்ளனர். ஜியோ பிளாட்பார்ம் பங்கு விற்பனைகள் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை: ₹30,213 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியுள்ளது.

படிக்க: கிரிப்டோகரன்சி: கருப்புப் பணத்தின் தேவதை!

ஆங்கர் முதலீட்டாளர்கள் (Anchor Investors): ஐபிஓ தொடங்குவதற்கு முன்பே பிளாக்ராக் (BlackRock), எல்.ஐ.சி (LIC), ஜேபி மார்கன் போன்ற 212 முன்னணி ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும் ஜியோ நிறுவனம் ₹8,109.84 கோடி முதலீட்டைப் பெற்றது

சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகள் குவிந்துள்ளது என்றும், இந்தியாவில் மிகப் பெரிய நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை இந்த ஜியோ பிளாட்பார்ம் பெற்றுள்ளது என்றும் செய்திகள் வெளியாகிறது.

142 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஒரு சதவீதத்திற்கு கீழானவர்கள் மட்டும்தான் இவ்வாறு பணத்தை கையில் வைத்துக் கொண்டு “எதை தின்றால் பித்தம் தெளியும்” என்று அலைந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவு சட்டபூர்வமாக ஜியோ பிளாட்பார்ம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதும், மற்றொரு பிரிவு குறுக்கு வழியில் கிடுகிடுவென்று பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்தில்  கிரிப்டோ  கரன்சியில் முதலீடு செய்வதும் ஒரு போக்காகவே மாறி உள்ளது.

அன்றாடம் ஆயிரம் ரூபாய் கூலி பெறுவதற்கு காலையிலிருந்து இரவு வரை 12 மணி நேரம் ரத்த வேர்வையை சிந்தி உழைக்க வேண்டிய கொடுமையான நிலைமை தான் நமது நாட்டில் பொதுவான நிலைமையாக நீடிக்கிறது.

படிக்க: பங்குச்சந்தையில், மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க உதவிய மோடி அமித்ஷா கும்பல்!

கடைசி சவாரி கிடைத்தால் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி செல்லலாமே என்று பத்து மணிக்கு மேல் காத்திருக்கின்ற ஆட்டோ தொழிலாளர்கள் முதல் தொடர்ச்சியாக 36 மணி நேரம் வாகனங்களை இயக்குவதன் மூலம் ஏதாவது வருவாய் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள், வேலை நேரம் 12 மணி நேரம் 13 மணி நேரம் என்று அதிகரித்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் இந்த வேலையாவது கிடைக்கிறதே என்று தனது உழைப்பு சக்தியை விற்று பிழைக்கின்ற கோடிக்கணக்கான இளம் தொழிலாளர்கள், தனது உழைப்பு சக்தியை குறுகிய காலத்திற்குள் பல மடங்கு திறனுடன் வேலை செய்து முடிக்கின்ற ஒப்பந்த முறை வேளையில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் என்று பல்வேறு பிரிவு உழைப்பாளி மக்கள் 8 மணி நேர வேலை என்பதை மறந்து ஏறக்குறைய ஒரு பத்தாண்டு காலமாகிறது.

சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும், தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்ற விலைவாசி உயர்வு வாழ்க்கை நடத்துவதற்கே கடுமையான நெருக்கடிகளை தரும்போது இந்த உழைப்பாளி மக்களுக்கு தெரிந்த ஒரே தீர்வு அதிக நேரம் உழைத்து பணத்தை ஈட்டுவது என்ற வழிமுறைதான்.

8 மணி நேர வேலை; 8 மணி நேர ஓய்வு; 8 மணி நேர உறக்கம் போன்ற கொள்கைகள் அனைத்தும் சாத்தியமில்லாதது. நாம் வாழ வேண்டுமென்றால் கூடுதலான நேரம் உழைத்து வருவாயை ஈட்டி பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற மனநிலைக்கு பெரும்பான்மை உழைப்பாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அடுத்த தலைமுறை என்று அவர்கள் கூறிக் கொள்கின்ற தங்களது குழந்தைகளை கூட தினமும் முகத்தைப் பார்த்து கொஞ்ச முடியாத அவல நிலையில்தான் அவர்களது வாழ்க்கை கழிந்து கொண்டு உள்ளது.

பெரும்பான்மை உழைப்பாளி மக்களை கொண்ட இந்திய சமூகம் இவ்வாறு தனது உழைப்பு சக்தியை கொடூரமாக விற்பனை செய்து வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு சதவீதமே உள்ள ஒரு சிறு கும்பல் தனது பணத்தை எதில் குவிப்பது; சொத்துக்களை எவ்வாறு சேமித்து வைத்துக் கொள்வது என்பதற்கு பல்வேறு கோணங்களில் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது அருவருக்கத் தக்க ஒன்றாக உள்ளது.

இது பண்டிகை காலம் என்பதால் நடுத்தர வர்க்கம் என்று கூறிக் கொள்ளக்கூடிய மேற்கண்ட ஒரு சிறு சதவீதமான மக்கள் புதிய ரக ஆடைகள் முதல் புதிய வகை பொருள்களை வாங்குவது, நகைகளை வாங்கி குவிப்பது என்பதற்கு கடை வீதிகளை ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

படிக்க: ஏழை மக்களின் நகைகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க வழி வகுத்துள்ள ரிசர்வ் வங்கி!

பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் முதல் பெரிய பெரிய துணிக்கடைகள், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், தெருவுக்கு இரண்டு என்று பெருக்கெடுத்துள்ள தங்க நகை விற்பனை கடைகள் ஆகியவை அனைத்தும் தற்போது நிரம்பி வழிந்து கொண்டுள்ளது.

இதுபோல வெளி உலகத்திற்கு பகட்டாக தெரிகின்ற அம்சங்களை வைத்துக்கொண்டு இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்பதை போலவும் முதலீடுகளை அதாவது தனது தேவைக்கு போக அதிகமாக கையில் உள்ள பணத்தை எதிலாவது முதலீடு செய்து சேகரித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள அளவிற்கு அவர்களிடம் பொருளாதாரம் நிரம்பி வழிவதாக தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் பாஜக ஊது குழல்களும், அறிவுத்துறை பிழைப்புவாதிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதனை நியாயப்படுத்துவதற்கு கிரிப்டோ கரன்சி போன்ற சட்டவிரோத பணப்பரிவர்தனை முறைகளில் பணத்தை முடக்குவது அல்லது முதலீடு செய்வது ஆகியவற்றை கௌரவமான முதலீடு வழிமுறையாகவும், நியாயமான வழிமுறையாகவும் முன் வைக்கின்றனர்.

இதனால் பினான்ஸ் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் திருட்டு என்பது போன்ற செய்திகளை படிக்கும் போது பெரும்பான்மை மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் ஆழம் போது இவ்வாறு இதில் முதலீடு செய்கின்ற படித்த முட்டாள் கூட்டத்தை கடுமையாக விமர்சிக்கத் தோன்றுகிறது. அவர்களின் சமூக பொறுப்பற்ற பொருளாதாரத்தின் அரிச்சுவடி பற்றி புரிந்து கொள்ள விரும்பாத முட்டாள்தனத்தை விமர்சிக்க வேண்டும் என்பதே நிலைமையாக மாறியுள்ளது.

  • தமிழ்ச்செல்வன்.

புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. நல்ல கட்டுரை

    இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது பெரும்பான்மை மக்கள் வறுமையிலும் துயரத்திலும்
    அழும் போது என்பது ஆழம் போது என்று உள்ளது அதனை திருத்தவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here