ஆட்சித் தலைமை சரியில்லை என்றால் நாடு என்னவாகும்?
அரிசி விலையேற்றமும் ஆட்சியாளர்களின் அலட்சியமும்!
குடும்பம் முதல் நாடு வரை—தலைமை சரியில்லை என்றால் அந்த அமைப்பு அதோகதிதான் என்பதற்கு நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளே சாட்சி.
- குடும்பத் தலைவன் – தலைவி சரியாகக் கண்காணிக்கவில்லை என்றால் பிள்ளைகள் நல்வழிப்பட மாட்டார்கள்.
- ஒரு தொழிற்சாலையில் முதலாளி சரியில்லை என்றால் அந்தத் தொழிற்சாலை விளங்காது.
- ஒரு சங்கத்தின் தலைவன் சரியில்லை என்றால் அந்தச் சங்கத்தின் கதி ‘அதோகதி’தான்.
- கட்சித் தலைவன் சரியில்லை என்றால் தொண்டர்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வர மாட்டார்கள்.
நான்கு பேர் கொண்ட குடும்பமோ, நூறு பேர் கொண்ட சங்கமோ, சில நூறு தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமோ—அங்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தகுதியற்றவர்களாக மாறும்போது அந்த அமைப்பு எப்படிச் சீரழியும் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதே விதிதான் ஒரு நாட்டுக்கும் பொருந்தும்! நாட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரு தலைமைப் பொறுப்பில் உள்ளவரைத்தான் நம்புகிறார்கள். ஆனால், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் திறமையற்றவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் மாறினால், நாட்டில் அவரவர்கள் விருப்பம் போல் காரியம் சாதிப்பார்கள்; வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிப்பார்கள். அப்படித்தான் இன்று தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு, கடைகளில் நாம் வாங்கும் அரிசி விலையேற்றமே சாட்சி.
ஐந்து மாதத்தில் 500 ரூபாய் உயர்ந்த அரிசி விலை!
இன்று வழக்கமான அரிசிக் கடைக்குச் சென்றபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சாமான்ய மக்களின் இன்றைய துயரத்தை அச்சு அசலாக வெளிப்படுத்தியது. நான்கு மாதங்களுக்கு முன்பு ₹1,400-க்கு விற்ற 26 கிலோ அரிசி மூட்டை, இன்று ₹1,900-ஆக உயர்ந்துள்ளது.
விலையைக் கேட்டவுடன் வாங்குவதா வேண்டாமா என்று மனம் ஊசலாடியது. சொற்பமான ஓய்வூதியத்தையும் வங்கி சேமிப்பு வட்டியையும் நம்பி வாழும் எம்மைப் போன்ற முதியவர்களுக்கு இந்த விலை உயர்வு மரண அடி. கடைக்காரரிடம் கேட்டேன்:
“என்னங்க… நாலு மாசத்துக்கு முன்னாடி 1,400, அடுத்த மாசம் 1,500, இப்போ 1,900-ன்னு நாலு மாசத்துல 500 ரூபாய் ஏத்துனா நாங்க என்னதான் செய்றது?”
அதற்கு அந்தக் கடைக்காரர் சொன்ன பதில் நம்மை உலுக்கியது:
“இது இன்றைய விலை. இதுவே நாளைக்கு 2,000, அடுத்த வாரம் 2,500 என்றுதான் உயருமே தவிர விலை குறையாது சார். ஒரு கிலோ 100 ரூபாய் என்றால் மூட்டை எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்”
என்றார். அதாவது 26 கிலோ அரிசி மூட்டை விரைவில் 2,500 ரூபாயைத் தொடும் என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்கிறார்.
விளைச்சல் குறையவில்லை; இருப்பு குறையவில்லை — பின் ஏன் இந்த விலையேற்றம்?
ஏன் இந்தத் திடீர் விலை ஏற்றம்? தமிழ்நாட்டில் அப்படி ஒன்றும் கடும் வறட்சியோ பஞ்சமோ வந்துவிடவில்லை. கடந்த ஆண்டுவரை தமிழ்நாட்டில் நல்ல மழை பொழிவும் இருந்தது; நீர் வளமும் இருந்தது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சற்றுக் குறைவு என்பது உண்மைதான். ஆனால், இந்த பருவமழை குறைவுக்கும் இன்று சந்தைக்கு வரும் நெல்லுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இன்று சந்தைக்கு வரும் நெல், கடந்த ஆண்டு பெய்த மழை மற்றும் நீர் வளத்தால் விளைந்தவை.
படிக்க: அரிசி ஏற்றுமதிக்குத்தடை: உண்மையும்-விளைவுகளும்.
போதாக்குறைக்கு, அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் மேலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது:
- தமிழகத்தின் உற்பத்தி: தமிழ்நாட்டின் ஆண்டு அரிசி உற்பத்தி சராசரியாக 45 லட்சம் முதல் 70 லட்சம் மெட்ரிக் டன்கள் (4.5 to 7 Million Metric Tonnes) வரை சீராக உள்ளது.
- அண்டை மாநில இறக்குமதி: இது தவிர, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து மாதம் தோறும் லட்சக்கணக்கான டன் அரிசி வணிக ரீதியாகத் தமிழகத்திற்குள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
- மாநில அரசு இருப்பு (TNCSC): தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் மட்டும் எப்போதும் ரேஷன் விநியோகத்திற்காகச் சராசரியாக 5 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் அரிசி இருப்பில் வைக்கப்படுகிறது.
- மத்திய அரசு இருப்பு (FCI): இந்திய உணவுக் கழகத்தின் (FCI) கிடங்குகளில் தேசிய அளவில் பல கோடி மெட்ரிக் டன்கள் அரிசி அவசரகாலச் சேமிப்பாகவும் பஃபர் ஸ்டாக்காகவும் முடங்கிக் கிடக்கிறது.
நாட்டிலும் மாநிலத்திலும் அரிசி உற்பத்திக்கும் பஞ்சமில்லை; கிடங்குகளில் இருப்புக்கும் பஞ்சமில்லை. அப்படியென்றால், இந்த திடீர் விலையேற்றத்திற்கு ஒரே காரணம் — செயற்கையாக உருவாக்கப்படும் பதுக்கலும் சந்தைக் கொள்ளையும்தான்!
கார்ப்பரேட் பதுக்கலும் தகுதியற்ற ஆட்சியின் பரிதாபக் கோலமும்!
ஆட்சித் தலைமையில் தகுதியற்றவர்கள் அமரும்போது, சட்டத்தின் பிடி தளர்ந்து போகிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதுக்கலாம், எப்படி வேண்டுமானாலும் விலை ஏற்றலாம் என்ற நிலை உருவாகிறது.
படிக்க: 25 கிலோவுக்கு பதில் 26 கிலோ அரிசி மூட்டை! அற்புதம்! திருப்பி அடி!
இன்றைக்கு பெருநிறுவனங்களும், மெகா அரிசி ஆலை உரிமையாளர்களும் (Millers & Corporate Traders Cartel) ஒன்று சேர்ந்து, நெல் அறுவடைக் காலத்தில் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி, அதைத் தங்களது மாபெரும் தனியார்க்கிடங்குகளில் (Private Warehouses) பதுக்கி வைக்கின்றனர். சந்தையில் அரிசியே இல்லாதது போன்ற ஒரு ‘செயற்கைத் தட்டுப்பாட்டை’ உருவாக்கி, ஒரே மூட்டையில் 400 முதல் 500 ரூபாய் வரை விலையேற்றி மக்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவோ, குடிமைப் பொருள் பறக்கும் படைகளோ இந்த கார்ப்பரேட் குடோன்களைச் சோதனையிடுவதோ, பதுக்கல்காரர்களைக் கைது செய்வதோ இல்லை.
தகுதி அற்றவர்கள் நாட்டை ஆளத் தொடங்கினால் சாமானிய மக்களின் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதற்கு கடந்த சில மாதங்களாக நாம் காணும் விலைவாசி உயர்வே சாட்சி. “இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ?” என்ற அச்சத்திலேயே மக்கள் வரும் நாட்களை எண்ணி கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைமை பலவீனமாகும்போது சந்தை பலமாகிறது; அந்தச் சந்தை சாமானியனின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இதற்கான விலையைத் தகுதியற்ற ஆட்சியாளர்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும்!
— தமிழ்மணி






