ஒன்றிய மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கடைபிடித்து வருகிறது. தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மசூதிகள் அறக்கட்டளை, சொத்துக்களை அபகரிக்க வழி வகுக்கிறது. இந்த சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (01.04.2025) மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரத்தின் மூத்த தோழர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றியபோது ஒன்றிய மோடி அரசு இன்னும் சில நாட்களில் வக்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. இஸ்லாமியர்களை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரானவர்களைப் போலவும் இந்துக்களுக்கு எதிரானவர்களைப் போலவும் சித்தரித்து நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிரந்தர பகை உணர்ச்சியை உருவாக்கி வருவதை நாம் அறிவோம்.
இந்தி பேசும் மாநிலங்களில் இஸ்லாமியர்களாக வாழ்வதே பெரும் அபாயத்திற்குள்ளான நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்தின் நலனுக்காக அளித்த நன்கொடைகளை நிர்வகிக்கும் வக்ப் போர்டு சட்டத்தை முழுமையாகக் திருத்தி அதன் நோக்கத்தையே சீர்குலைத்து வக்ப் சொத்துக்களை கையாளும் அதிகாரத்தை இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சதித்திட்டமே இந்த சட்டத் திருத்தம்.

இது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுடைய அறக்கொடை. சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் அச்சொத்துக்களை அபகரிக்கும் சதிச்செயலுமாகும்.
இந்து அறநிலையத்துறை சொத்துக்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஆங்காங்கே கலவரம் செய்யும் இந்தப் பாசிச கும்பல் கொஞ்சமும் கூட குற்ற உணர்ச்சியின்றி இஸ்லாமியர்களுடைய அறக்கொடை சொத்துக்களை அபகரிக்க சட்டம் இயற்றி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது இஸ்லாமியர்களுடைய சிக்கல் என்று ஒதுங்கி விடாமல் ஜனநாயகத்திற்கு விரோதமானது, மத சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் செயல் என்ற வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடி இதை தடுக்க வேண்டும் என்று பேசினார்.
இதுபோல் தமிழ்நாடு முழுவதும் கடலூர், திருவள்ளூர், சென்னை, கரூர், ஆம்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய பாசிச மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9597138959