தர்பூசணி குறித்து சமூக வலைத்தள தகவல்கள்: விவசாயிகள் மீதான தாக்குதல்!

“பிஞ்சு தர்பூசணி பழத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் இடம் தருகின்றோம். அவர் அதில் ஊசி போட்டு எப்படி ரசாயனம் பரவுகிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.

தர்பூசணி பழங்களின் ஊசி செலுத்த முற்படும்போது பழங்களின் தன்மை இழந்து உடனடியாக கெட்டுவிடும். எனவே பழங்களில் எந்தவிதமான கலப்படமும் செய்யப்படுவதில்லை

ந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும். வெயிற்காலத்தில் சூட்டை தணித்துக்கொள்ள இளநீர், தர்பூசணிப்பழம், நுங்கு, நீர் மோர்  போன்றவற்றை மக்கள் பயன்படுத்துவது வழக்கம்.

”இந்தியாவின் வெப்பத்திற்கு இளநீர்க் குடி, அதில் இளைப்பாறும் தொழிலாளர் எத்தனைக் கோடி” என்று மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கடுமையான வெப்பநிலை ஏறிக்கொண்டே செல்கிறது. ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகள், கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் நிறுவனங்களினால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றத்தினால் வெப்பமண்டல நாடுகளில் வெப்பம் அதிகரித்து பல்வேறு விதமான கொடூரமான நோய்களையும், தாக்குதல்களையும் மக்கள் மீது தொடுத்து வருகிறது.

இந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு இயற்கை முறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. அதில் ஒன்றுதான் தர்பூசணி என்று அழைக்கப்படும் தண்ணீர் பழம் ஆகும்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தர்பூசணி உற்பத்தியாகிறது. இந்த ஆண்டில் (2024-2025) திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் 4455 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணியை சாகுபடி செய்துள்ளதாக   வேளாண்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பூண்டி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், சோழவரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் தர்பூசணி பழங்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

சமூக வலைதளங்களில் தர்பூசணி சிவப்பாக இருக்க ஊசி போன்ற மருந்துகள் செலுத்தப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனால்  தர்பூசணி விவசாயிகளும் சிறு வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.  உண்மையில் தர்பூசணியில் லைகோபீன் என்ற நிறமி உள்ளதால் அதன் நிறம் சிவப்பு கலரில் உள்ளது என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை.

சமூக ஊடகங்களில் வருகின்ற வதந்திகளை நம்பி நேரடியாகவே விளைவிக்கப்படும் இடத்திற்குச் சென்று அதனை அறுத்து டிஷ்யூ பேப்பரில் துடைத்து அதன் நிறமே சிவப்பு கலரில் உள்ளது சமூக ஆர்வலர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

தர்பூசணி விளைக்க ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. விற்பனைகாலத்தில் இதுபோன்ற வதந்திகளால் ஒரு டன் 16 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த தர்பூசணி தற்போது  வாங்கும் விலை குறைந்து 3000 அல்லது 4000 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

“உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தவறான தகவலை பரப்பியதால் தமிழகம் முழுவதும் 50,000 ஏக்கர் தர்பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.  பழங்கள் வியாபாரிகள் வாங்காத காரணத்தால் பழங்கள் செடியிலேயே அழுகிப் போகின்றன”  என்று செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

படிக்க:

  இனிப்பில்லா கரும்பு விவசாயம் கசக்கும் தமிழர் திருநாள்.
  கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம்! தொடரும் மக்கள் திரள் போராட்டம்!

மேலும் விவசாயிகள் வேதனையுடன் “பிஞ்சு தர்ப்பூசணி பழத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் இடம் தருகின்றோம். அவர் அதில் ஊசி போட்டு எப்படி ரசாயனம் பரவுகிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தர்ப்பூசணி பற்றி கூறிய விஷயத்தை தவறு என்று வாபஸ் பெறவேண்டும். அது மட்டும் இன்றி அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்.”  என்று முன் வைத்துள்ளனர்.

இந்த பிரச்சனை காரணமாக தர்பூசணி விற்பனை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தவறான தகவல் பரப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீது செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சமூக செயல்பாட்டாளரான வழக்கறிஞர் கேசவன் இந்த வழக்கை ஏற்று நடத்துகிறார்.

தோட்டக்கலை துணை இயக்குனர் துணை இயக்குனர் ஜெபக்குமார் வதந்திகளை  நம்ப வேண்டாம்.  ’தர்பூசணி பழங்களின் ஊசி செலுத்த முற்படும்போது பழங்களின் தன்மை இழந்து உடனடியாக கெட்டுவிடும். எனவே பழங்களில் எந்தவிதமான கலப்படமும் செய்யப்படுவதில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி பல்வேறு விதமான நன்மைகளையும் தரும் தர்பூசணி பழங்களை எந்தவித பயமும் இன்றி சாப்பிடலாம்”  என்று தெரிவித்துள்ளார். இந்த செய்திகள் நாளேடுகளில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் குளிர்பான சந்தையை குறிவைத்து பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு பிராண்டுகளின் மூலம் விற்பனையை குவித்து வருகின்றனர். சினிமா நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரையும் வைத்து பல்லாயிரம் கோடி விளம்பரம் செய்து தனது பிராண்டுகளை பிரபலப்படுத்துகின்றனர். இதன் மூலமாக 2023 ஆண்டில் மட்டும் 12,725 கோடி வருவாயாக கொள்ளையடித்துள்ளனர்.

தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பெப்சியை குடி, கோலாவை குடி என்று பிரச்சாரம் செய்கின்ற அளவிற்கு இவர்களின் லாபவெறி தலைவிரித்தாடுகிறது.  இந்தக் கேடுகெட்ட கார்ப்பரேட் கொள்ளையர்கள் பை ஒன் கெட் ஒன்  (buyone getone) என்று கூவி விற்கும் கார்பரேட் குளிர்பான கம்பெனி விற்பனை தரகர்கள் இதுபோன்ற வதந்திகளை திட்டமிட்டே பரப்புகின்றனர். விவசாயிகளை போண்டியாக்கி  விவசாயத்தை விட்டு வெளியேற்றும் கார்ப்பரேட் நலன் இதன் பின்னால் ஒளிந்துள்ளது என்பதையும் உணர்ந்தது விவசாயிகள் போராட வேண்டும். ஜனநாயக சக்திகள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

  • வீரையன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. தற்போதைய வதந்திக்கு சரியான பதிலடியை, அரசியல் ரீதியில் விளக்கமாக கொடுப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here