மேகமலையின் மலைகளில் வீசும் காற்று வெறும் இயற்கையின் குரல் அல்ல; அது பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த மக்களின் உழைப்பின் நினைவுகளையும் சுமந்து வருகிறது. இந்த மலைகளின் பாதைகளை உருவாக்கியவர்கள், தேயிலைத் தோட்டங்களை வளர்த்தவர்கள், காடுகளின் இயற்கைச் சூழலோடு வாழ்ந்தவர்கள் இன்று தங்களின் இருப்பிடத்தைப் பற்றிய அச்சத்தில் நிற்கின்றனர். ஒரு காலத்தில் காடு என்று கருதப்பட்ட நிலம், காலனிய ஆட்சியின் கீழ் வருவாய் தரும் வளமாக மாற்றப்பட்டது. தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களுக்குத் தேவையான உழைப்பை வழங்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களின் வியர்வையாலும் உழைப்பாலும் மலைப்பகுதி ஒரு பொருளாதார மண்டலமாக மாறியது.
ஆனால், வரலாற்றின் முரண்பாடு என்னவென்றால், உற்பத்தியை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு அந்த உற்பத்தி அமைப்பின் மீது உரிமை கிடைக்கவில்லை. நிலத்தைப் பயன்படுத்தியவர்கள் வேறு; நிலத்தின் மீது அதிகாரம் கொண்டவர்கள் வேறு என்ற முரண்பாடு தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்தது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனச் சட்டங்கள், புலிகள் காப்பகப் பாதுகாப்பு ஆகியவற்றின் பெயரில் மேகமலையில் வாழும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இயற்கையைப் பாதுகாப்பது அவசியமானது என்றாலும், அந்த இயற்கையோடு பல நூற்றாண்டுகளாக உறவு கொண்ட மக்களின் வரலாற்றையும் வாழ்வுரிமையையும் புறக்கணிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் பிரச்சினை வெறும் நிலப் பிரச்சினை அல்ல. இது உற்பத்தி உறவுகள், வர்க்க உறவுகள் மற்றும் உழைப்புக்கும் உரிமைக்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாக பார்க்க வேண்டும்.
காலனிய காலம்: காடு முதல் எஸ்டேட் வரை!
மேகமலையில் காலனிய ஆட்சிக்கு முன்பே அங்கு பளியர் (Paliyar), முதுவர்கள் (சில பகுதிகளில்), பிற வனவாழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வேட்டையாடுதல், கிழங்கு சேகரித்தல், தேன் எடுத்தல், சிறிய அளவிலான இடம்பெயரும் விவசாயம் ஆகியவற்றை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்கள் தேயிலை எஸ்டேட்டுக்காக வந்தவர்கள் அல்ல. இவர்கள் தான் மேகமலையின் முதன்மையான பூர்வ குடிகள்.
1890–1950 காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் எஸ்டேட்டுகளைத் தொடங்கிய பிறகு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவையல்லாமல் 1950–1970 பகுதியில் மேல் மணலாறு, கீழ் மணலாறு, இரவங்கலாறு, சுருளியாறு போன்ற நீர் மின் திட்டங்கள் வந்த போது PWD, TNEB பணிகளுக்காகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்தனர். அவர்களில் பலர் பணிகள் முடிந்த பிறகும் அங்கேயே குடியேறினர். 1960 களுக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு கடைகள், சிறு விவசாயம், மாடு வளர்ப்பு, சிறு வியாபாரம் உள்ளிட்டவற்றை செய்வதற்காக சில குடும்பங்கள் குடியேறின.

1850–1880 காலகட்டத்தில், பிரிட்டிஷ் காலனிய ஆட்சி மதராஸ் மாகாணத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை வெறும் இயற்கை வளமாக அல்லாமல், உலகச் சந்தைக்கு இலாபம் ஈட்டும் பொருளாதார வளமாகக் கருதத் தொடங்கியது. 1865 மற்றும் 1878ஆம் ஆண்டுகளின் வனச் சட்டங்களின் மூலம் பரந்த காடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் நீண்டகால குத்தகை முறையின் கீழ் ஐரோப்பிய தோட்ட நிறுவனங்களுக்கும் தனியார் முதலாளிகளுக்கும் மலைப் பகுதிகள் ஒப்படைக்கப்பட்டன.
1880–1920 காலத்தில் மேகமலை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காடுகள் வெட்டப்பட்டு தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற ஏற்றுமதி பயிர்களை மையமாகக் கொண்ட தோட்டப் பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. இயற்கை வளங்களை மூலதனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலக முதலாளித்துவச் சந்தையுடன் இணைத்த காலனிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
படிக்க:
♦ அகத்தியமலை வெளியேற்ற உத்தரவுகள் வன உரிமை சட்டத்தை மௌனிக்க செய்கிறது – சி.ஆர் பிஜாய்
♦ கார்ப்பரேட்டுகளின் ஆக்கிரமிப்பில் வனங்கள்! ஊருக்குள் சுற்றும் வனவிலங்குகள்!
Highwavys, Manalar, Cloudlands, Venniar போன்ற எஸ்டேட்டுகளுக்கு 30, 50 அல்லது 99 ஆண்டு குத்தகைகள் வழங்கப்பட்டன. 1922 ஆம் ஆண்டு மேகமலையின் சுற்றுப்பட்டு 64 கிராமங்கள் மட்டுமல்ல, வருசநாடு மேகமலை காடுகளில் கேரள எல்லை வரைக்கும் உள்ள நிலம் அனைத்தும் வருஷநாடு (கண்டமனூர்) ஜமீனுக்குச் சொந்தமானது. எல்லா ஜமீன்களையும் போலவும் ஆடம்பரச் செலவு, ஊதாரியான வாழ்க்கை என்று சிக்கி சொத்தை எல்லாம் இழந்தார்கள் ஜமீன் குடும்பத்தார்(இந்த சொத்துக்கள் அவர்களுக்கு எப்படி வந்தது என்பது வேறு கதை). கடைசி காலத்தில் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட முடியாத அளவுக்கு கடன்பட்டார்கள்.
இதனால், ஜமீனையே ஏலம் விட முடிவு செய்தது ஆங்கிலேய அரசு. இந்தியாவின் விலைமதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தொழிலாக வைத்திருந்த ரஸ்டன்சிபாய் பட்டேலும் அவரது சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து ஜமீன் காட்டை ஏலம் பெற்றனர். பல லட்சம் ஏக்கர் பரப்புள்ள வனத்தை அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்கள் தெரியுமா? வெறும் ஐந்தரை லட்ச ரூபாய்க்கு! (இந்து தமிழ் திசை (23.01.2018) வெளியிட்ட வரலாற்றுக் குறிப்பின்படி…)
1890–1950 காலகட்டத்தில் தோட்ட உற்பத்தி விரிவடைந்தபோது, அதற்குத் தேவையான உழைப்புச் சக்தியை உருவாக்க கங்காணி முறை பயன்படுத்தப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்ந்த நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் மேகமலை எஸ்டேட்டுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். பெண்கள் தேயிலை இலைப் பறிப்பிலும், ஆண்கள் காடு அழித்தல், சாலை அமைத்தல், தொழிற்சாலை மற்றும் தோட்டப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களின் உழைப்பால்தான் மலைப்பகுதி உலகச் சந்தைக்கான தேயிலை உற்பத்தி மையமாக மாற்றப்பட்டது.
ஆனால் உற்பத்தியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கும், தலைமுறைகளாக அந்தக் காடுகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கும் நிலத்தின் மீதான உரிமை வழங்கப்படவில்லை; நிலம், உற்பத்திச் சாதனங்கள் மற்றும் இலாபத்தின் மீது கட்டுப்பாடு ஆகியவை காலனிய அரசு மற்றும் தோட்ட முதலாளிகளிடமே இருந்தது. மேகமலையின் இந்த வரலாறு இயற்கை வளங்களையும் உழைப்பையும் தனது மூலதனத் திரட்சிக்காக பயன்படுத்திய பிரிட்டன் காலனிய முதலாளித்துவத்தின் வெளிப்பாடாகும்; அதன் சமூக முரண்பாடுகளே இன்றும் நில உரிமை, வாழ்வுரிமை மற்றும் வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளாகத் தொடர்கின்றன.
அற்ப தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்ட காடும்,
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட சுரண்டலும்!
மேலே கூறியவாறு, கங்காணிகள் மூலம் அற்ப கூலிக்கு ஏமாற்றி அழைத்துவரப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் தேயிலைத் தோட்டங்களில் வேலைப் பார்த்தனர். தேயிலைத் தொழிலின் உண்மையான அடித்தளம் பெண்கள்தான். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குடும்பத்திற்குச் சமைத்து வைத்துவிட்டு, குழந்தைகளைப் பார்த்துவிட்டு, மலைச்சரிவுகளில் நாள் முழுவதும் இலை பறிப்பார்கள். ஒரு மொட்டு, இரண்டு இலைகள் என்ற தரத்தைப் பின்பற்றியே பறிக்க வேண்டும். மழையோ, பனியோ, வெயிலோ—வேலை நிற்காது.

மாலை திரும்பிய பிறகும் ஓய்வு இல்லை. தண்ணீர் எடுப்பது, சமையல், குழந்தைகளைப் பராமரிப்பது என இன்னொரு வேலைநாள் தொடங்கும். தேயிலை உலகச் சந்தையை அடைய, பெண்களின் இந்த இரட்டை உழைப்பே அடித்தளமாக இருந்தது.
தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட “லைன் ரூம்கள்” ஒரு அறை கொண்ட நீண்ட வரிசை வீடுகள். ஒரு அறைக்குள் ஒரு குடும்பத்தின் பிறப்பு, வளர்ச்சி, நோய், திருமணம், முதுமை—எல்லாமே அடங்கியிருந்தது. அந்த வீடு தொழிலாளியின் சொத்து அல்ல. அது வேலைக்கு இணைக்கப்பட்ட குடியிருப்பு. வேலை இருந்தால் வீடு இருக்கும். வேலை போனால் வீடும் போகும். அதனால், தொழிலாளியின் உழைப்பும், வாழ்வும், இருப்பிடமும் ஒரே கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் இருந்தன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த வாழ்விடக் கொடுமைகளை தனது “எரியும் பனிக்காடு” நாவலில் பி.எச்.டேனியல் பதிவு செய்திருப்பார். எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் தீக்கொழுந்து என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு மேகமலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது.
1947இல் இந்தியாவின் அதிகாரம் ஆங்கிலேய காலனி ஆதிக்க கும்பலிடமிருந்து தரகு முதலாளித்துவ கும்பலுக்கு கைமாற்றப்பட்டது. அதாவது இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மேகமலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் உடனடியாகப் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. 1951ஆம் ஆண்டு Plantation Labour Act கொண்டு வரப்பட்டபோது, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, மருத்துவம், குடிநீர், கல்வி போன்ற வசதிகளை வழங்குவது சட்டப்பூர்வமான பொறுப்பாக அறிவிக்கப்பட்டது. 1960-களிலிருந்து தொழிற்சங்கங்கள் உருவாகின. கூலி உயர்வு, போனஸ், மருத்துவ வசதி, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடந்தன. ஆனால் ஒரு கேள்வி மட்டும் மாறவில்லை. இந்த நிலத்தின் மீது உழைத்தவர்களுக்கு, அந்த நிலத்தின் மீது உரிமை உண்டா?
2006 ஆம் ஆண்டில், பழங்குடிகளின் வன உரிமையை மீட்டெடுப்பதாகக் கூறி வன உரிமைச் சட்டம் (Forest Rights Act 2006) நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் 2021-ல் அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை முன்னுரிமை பெற்றன. இன்று நீதிமன்ற உத்தரவுகள், வனச் சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மத்தியில் ஒரு புதிய கேள்வி எழுந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேய அரசு அவர்களை இந்த மலைக்குக் கொண்டு வந்தது. அவர்கள் உழைத்துத் தோட்டங்களை உருவாக்கினர். அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இங்கேயே வாழ்ந்தனர். இன்று அவர்கள் வாழும் நிலம் குறித்து மீண்டும் கேள்வி எழுகிறது.
மேகமலையில் தற்போது என்ன பிரச்சினை?
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயமும், மேகமலை வனவிலங்கு சரணாலயமும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி, விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் 1,01,657.13 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் பின்னணியில், தேனி மாவட்டத்தின் கண்டமனூர், வருசநாடு மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூர் உள்ளிட்ட வனச்சரகங்களில் சுமார் 5,000 ஹெக்டேர் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், வனத்துறையின் அனுமதியின்றி சுற்றுலா விடுதிகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் இயங்குவதாகக் கூறி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2025 மார்ச் மாதத்தில் அகத்தியமலை உயிர்க்கோளப் பகுதி முழுவதையும் ஆய்வு செய்ய மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவுக்கு (CEC) உத்தரவிட்டது. அந்தக் குழு 2025 ஜூலை மற்றும் 2026 ஜனவரியில் தாக்கல் செய்த அறிக்கைகளில், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்புகள் மூலம் 5,072.653 ஹெக்டேர் வன நிலங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், பல இடங்களில் வனச் சட்டங்களும் மலைப்பகுதி மரங்கள் பாதுகாப்புச் சட்டமும் மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
படிக்க:
♦ சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!
♦ காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக
மேலும், 2022ஆம் ஆண்டிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 2026 மே 29ஆம் தேதி உச்சநீதிமன்றம் வன நிலங்களை மீட்கவும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதேவேளையில், மாநில அரசே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஆக்கிரமிப்பாளர்களில் பலர் நிலமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டிருப்பது, வனப் பாதுகாப்புக்கும் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வுரிமைக்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் கூர்மையாக்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை டிரோன் ஆய்வு மூலம் வரைபடமிடுதல், எல்லை வரையறை செய்தல், மறுகுடியமர்வுத் திட்டம் தயாரித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் வசிப்பவர்களை அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு அடிப்படையில் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, குறிப்பாக நிரந்தரமாக வசிப்பவர்களை வனப்பகுதிக்கு வெளியே மறுகுடியமர்த்தும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டத்தை சமர்ப்பிக்கவும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதையும் மறுவாழ்வு நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப் பாதுகாப்பை தாமதப்படுத்தக் கூடாது என்பதையும், அதே நேரத்தில் மனிதநேய அடிப்படையில் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. மாநில அரசு உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக துணை ராணுவப் படையை ஈடுபடுத்த மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC) பரிந்துரைக்கலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது ஒரு நிர்வாக உத்தரவு மட்டுமல்ல; வனப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு தனது கட்டாயப்படுத்தும் அதிகாரத்தை எந்த அளவுக்கு பயன்படுத்தத் தயாராக உள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
மார்க்சியக் கண்ணோட்டத்தில், அரசு என்பது எப்போதுமே வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான அமைப்பு அல்ல; சமூகத்தில் நிலவும் சொத்துடைமை உறவுகளையும், அதிகார அமைப்புகளையும் பாதுகாக்கும் அரசியல் கருவியாகும். மேகமலை மக்களின் போராட்டத்தின் நியாயத்தை இந்த கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும்.
எனவே, பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வுரிமை, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உள்ள உரிமைக் கோரிக்கைகள் மற்றும் மறுவாழ்வு நடைமுறைகள் முழுமையாகத் தீர்மானிக்கப்படுவதற்கு முன்பே, வெளியேற்றத்தை உறுதிப்படுத்த அரசின் அடக்குமுறை இயந்திரங்களைக் கூட பயன்படுத்தும் வாய்ப்பைத் திறந்துவைப்பது ஒரு தீவிரமான அரசியல் கேள்வியை எழுப்புகிறது.
இந்த பிரச்சினையின் மையத்தில் உள்ள அடிப்படைச் சிக்கல் இன்னும் தீர்க்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம், 13 டிசம்பர் 2005க்கு முன்பே வனப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடியினருக்கும், குறைந்தது மூன்று தலைமுறைகளாக (75 ஆண்டுகள்) வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த பிற பாரம்பரிய வனவாழ் மக்களுக்கும் உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டமாகும். அந்தச் சட்டத்தின்படி, உரிமைக் கோரிக்கைகள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை யாரையும் கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மேகமலையின் பிரச்சினை வெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் நிர்வாக நடவடிக்கை மட்டுமல்ல. அம்மக்களை வெளியேற்றுவதில் பாசிச மோடி அரசின் டாடா போன்ற உள்நாட்டு கார்ப்பரேட் நலனும், அந்நிய கார்ப்பரேட்டுகளான நெஸ்லே, யுனிலீவர், லிப்டன் போன்ற கொள்ளையர்களின் நலனும் அடங்கியுள்ளது..
மேகமலையின் மக்களின் போராட்டம் ஒரு கிராமத்தின் பிரச்சினையோ, ஒரு மாவட்டத்தின் பிரச்சினையோ அல்ல. உழைப்பால் உருவாக்கப்பட்ட நிலத்தின் மீது யாருக்கு உரிமை என்ற கேள்வியை எழுப்பும் போராட்டமாக அது மாறியுள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை; காடுகளோடும் மலைகளோடும் இணைந்து வாழ்ந்த மக்கள் அதனை அழிக்க எப்போதும் விரும்ப மாட்டார்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மலைகளின் காடுகளை வெட்டி தோட்டங்களாக மாற்றியது அரசின் கொள்கையும், முதலாளித்துவத்தின் தேவையும் தான்.
அந்த மாற்றத்தின் சுமையைத் தங்கள் உழைப்பால் சுமந்தவர்கள் இன்று அந்த நிலத்தில் தங்களின் இருப்பை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மேகமலையின் கேள்வி, “யார் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்?” என்பதல்ல; “யாருக்காக காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்?” என்பதே அடிப்படையான கேள்வியாகும்.
◾மாரிமுத்து.
புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
2026 ஆகஸ்ட் இதழ்







