மிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இப்பயணத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் கலந்துகொண்டு, அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்ய அழைப்புவிடுத்தும் வருகிறார். அந்த வகையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் வருகின்றன.

போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

எடுத்துக்காட்டாக, செப்டம்பர்  6-ல் லிங்கன் எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களுடன் 850 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ட்ரில்லியன் நிறுவனத்துடன் 2000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங்  சர்வீசஸ், மைக்ரோசிப், இன்பிக்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல் ஆகிய 6 முன்னணி உலக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதன் மூலம் 4,100 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸின் செய்தி தெரிவிக்கிறது.

செப்டம்பர் 9ஆம் தேதி சிகாகோ நகரில் 266 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஐபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷனுடன் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,365 பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பார்ச்சூன் 500 நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், திருச்சியில் 2000 கோடி முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான யூனிட் அமைக்க உள்ளதாகவும், இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிகிறது.

இந்த முதலீடுகள்- உத்திரவாதமான வேலையை உருவாக்குமா?

இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் சிறந்த கல்வி கட்டமைப்பு உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் சிறப்பாக பள்ளி கல்வியை முடித்து, கல்லூரி அல்லது தொழில்நுட்ப, பொறியியல் படிப்பையும் முடிக்கிறார்கள்.

இதே போல் தொழில்துறையை எடுத்துக் கொண்டால், இந்திய அளவில் தமிழகம் முன்னேறியே உள்ளது.

எனவே இங்கு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் முதல் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் வரை பலவும் ஆலைகளை தொடங்கியுள்ளன. மேலும் தொடங்கியும் வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் உலகின் முன்னணி பிராண்டுகளாக உலகச் சந்தையை நிரப்பியும் வருகின்றன.

எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் மேலும் அந்நிய முதலீடுகள் வருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இத்தகைய முதலீடுகளால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு என்பது வரவேற்கத்தக்கனவாக இருந்துள்ளதா? இருக்கப் போகிறதா? உழைக்கும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் இக்கேள்விக்கான பதிலை கண்டுபிடித்தாக வேண்டும்.

நாம் மலிவாக நிலத்தை தந்து, சாலைகள், துறைமுகங்கள், இருப்புப் பாதைகள், மின்சார வசதி, அவர்கள் துறை சார்ந்த படித்த தொழிலாளிகள் முதல் ஊழியர்கள் வரை என அனைத்தையும் தயார் நிலையில் ஏற்பாடு செய்து தருகிறோம்.இப்படி சகலத்தையும் அனுபவித்துக் கொண்டு தொழில் தொடங்கும் கார்ப்பரேட்டுகள் கோடிகளில் லாபத்தை குவித்தும் வருகிறார்கள். போதிய அளவு லாபத்தை குவித்த பின்னர் நோக்கியா, போர்டு போன்ற சிலர் பாதியிலேயே ஓடியும் விடுகின்றனர். இவர்களையும் தான் முதல்வர் சந்தித்து மீண்டும் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு வரும் கார்ப்பரேட் கம்பெனிகள் கோடிகளை குவிப்பது உத்தரவாதமாக நடக்கிறது. ஆனால், இந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் பெற்று, சட்டபூர்வ உரிமைகளை பயன்படுத்துவர்களாக வளர முடிகிறதா?

30 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஓரளவு சாத்தியமாக இருந்தது. ஆனால், தற்போது படித்த இளைஞர்கள், துறை சார்ந்த  தகுதி வாய்ந்த இளைஞர்கள், கடும் உழைப்பிற்கு தயங்காத ஆற்றல் உடைய இளைஞர்கள் எவ்வளவு உழைத்தாலும், பணி நிரந்தரத்தையோ, உத்தரவாதமான சம்பளத்தையோ, பிற சட்ட பூர்வ உரிமைகளையோ அனுபவிக்கவே முடிவதில்லை.

முதல்வர் கவனிக்க வேண்டியது எதை?

ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள மோடி அரசானது, தொழிலாளர்களை இலவசமாக கார்ப்பரேட்டுகளுக்கு சப்ளை செய்யும் கேடான முறைகளை புகுத்தி அமலாக்கி வருகிறது. சட்டபூர்வமாகவே நிரந்தரமான உற்பத்திக்கு, தற்காலிகமான பயிற்சி பணியாளர்களையும், ஒப்பந்த பணியாளர்களையும் காலம் முழுக்கவும் பயன்படுத்திக் கொண்டு கொழுக்க வழியமைத்து தந்திருக்கிறது.

படிக்க:

♦ தேசத்தின் சொத்துகள் விற்பனை- தேசத்துரோகிகள் அட்டகாசம்! அனுமதிக்காதே! போராடு!!
♦ ஃபோர்டு: பன்னாட்டு நிறுவனமும், பலியாகும் தொழிலாளர்களும்!

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளை முதலீடாக கொண்டு வந்தாலும், அதன் மூலம் எத்தனை லட்சம் கோடிகளுக்கு இங்கே உற்பத்தி நடந்தாலும், அதன் பலன் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதைத்தான் நாம் வலியுறுத்த வேண்டும். தமிழகஅரசு அதை சாதிக்க வேண்டும்  என்றால், மோடி அரசு தொழில்துறையில் கொண்டு வந்துள்ள கேடான சட்ட திருத்தங்களை முறியடித்தாக வேண்டும். காலனிய காலத்தில் இருந்து போராடிப் பெற்ற சட்டபூர்வ உரிமைகளை தட்டிப்பறித்துள்ள மோடியிடம் இருந்து மீட்டு எடுத்தாக வேண்டும். கார்ப்பரேட்டுகளின் ஒரே இலக்காக கொள்ளை லாபம் என்பது எப்படி உள்ளதோ, அது போல், அந்த கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி தந்து, தேவையான வசதிகளை செய்து தரும் அரசாங்கங்கள் தன்னாட்டு குடிமக்களுக்கான உத்திரவாதமான வேலையையும், வேலைக்கேற்ற ஊதியத்தையும், பிற உரிமைகளையும் வாங்கித் தருவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இதை செய்யும் போது தான், அது மக்கள் நல அரசாக மதிக்கப்படும்.

கிள்ளுக்கீரைகளான வட மாநில தொழிலாளர்கள்!

தமிழகத்தில் தொழில் தொடங்கி வரும் முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில்லை. ஏனென்றால் உள்ளூர்காரர்கள் உரிமை கேட்பார்கள்; சங்கம் வைப்பார்கள்; போராடுவார்கள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் விருப்பத் தேர்வு மாவட்டம் விட்டு மாவட்டமோ, அல்லது மாநிலம் விட்டு மாநிலமோ புலம்பெயரும் தொழிலாளர்கள் தான்.

பெரும்பாலும் நிர்வாக வேலைகளுக்கு தமிழக இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் கார்ப்பரேட்டுகள் உற்பத்திப் பிரிவு என்று வரும்போது, வட மாநில இளைஞர்களையே பெரிதும் விரும்புகின்றனர். அதுவும் நேரடியாக அல்லாமல், ஒப்பந்த பணி மூலம் உற்பத்தியில் ஈடுபடுத்துவதையே விரும்பிச் செய்கிறார்கள். கேட்க நாதியற்றவர்களாகவே சுரண்டப்படும் வடமாநிலத்துகாரர்கள் உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களால் காலவரையறை இன்றி கசக்கி பிழியப்படுகிறார்கள்.

சம வேலை சம ஊதியம் என்ற வகையில், உற்பத்தியில் ஈடுபடுவது எந்த மாநில தொழிலாளியாக இருந்தாலும், எந்த மொழி பேசும் தொழிலாளியாக இருந்தாலும், அவரின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பும் கடமையும் அரசுகளுக்கு உண்டு. அதில் இதுவரை தவறிழைத்து வந்துள்ளது தமிழக அரசு.

நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் செய்து வரும் வேலைகளிலேயே இந்த பாகுபாடு அமலில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை .

நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பொசியுமா?

தற்போது, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை ஈர்த்து கொண்டு வரும் வேலையில் தமிழக முதல்வர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். இவரால் கொண்டுவரப்படும் நிறுவனங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? நிரந்தரமான உற்பத்திக்கு நிரந்தரமான பணியாளர்கள், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? அப்போது தான்  ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அப்போதுதான் அந்நிய முதலீடுகள் என வரவேற்கப்படும் சர்வதேச நிதி மூலதன பாய்ச்சலின் பலன்  சிறிது புல்லுக்கும் புசியும்.

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here