ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு போட்டிகளுக்கான – வீரர்களுக்கான ஏலம் களைகட்டி முடிந்துள்ளது. ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் தமக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்க சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் கூடினர்.
நவம்பரில் களை கட்டிய இந்த ஏலத்தில் 10 அணிகளும் தமக்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆடுவதற்கு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். ரிஷப் பந்த் 27 கோடிக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 26.75 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடிக்கும் ஏலம் போயினர்.
அடிமைகள் ஏலம் எடுக்கப்படும் முறை!
ஒரு திருவிழாவாக கிரிக்கெட் சூதாடிகளால் முன்னிறுத்தப்படும் இதில் மொத்தம் 577 விளையாட்டு வீரர்கள் ஏலத்துக்கு பரிசீலிக்கப்பட்டனர்.
ஏலம் எடுக்கப்பட்டவர்களில் 367 இந்திய கிரிக்கெட் வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். இதில் குறைந்த பட்ச தொகையாக 30 லட்சமும் அதிகபட்ச அடிப்படை விலையாக இரண்டு கோடியும் வைத்து ஏலம் ஆரம்பிக்கப்பட்டது. “என்ன இது ஆடு மாடுகளை போலவா ஏலம் விடுவது” என எந்த வீரரும் தன்மானத்துடன் கேள்வி கேட்கவில்லை.
2025 க்கான இந்த ஏலத்தில் 13 வயதான ஒளிரும் நட்சத்திரமாக பார்க்கப்படும் பீகாரின் வைபவ் சூர்யவன்சி 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்சால் தக்கவைக்கப்பட்டார்.
அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரராக ரிஷப் பந்த் 27 கோடியைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரராக ஜாஸ் பட்லர் 15.75 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒவ்வொரு அணியும் 120 கோடிகளை ஒதுக்கி தமக்கான வீரர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 18 ஆட்டக்காரர்களையும் அதிகபட்சமாக 25 ஆட்டக்காரர்களையும் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு . இதில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை எட்டை தாண்டக்கூடாது. மேலும் Retention, Right To Match என பல விதிகள் உண்டு.
கார்ப்பரேட்டுகளே உரிமையாளர்கள்!
ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்திருக்கும் நபர்கள் தான் ஒரு மாநிலத்தின் பெயரில் அணியை உரிமை பெற்று நடத்த முடியும். அப்படி பத்து கார்ப்பரேட் அணிகள் களத்தில் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணையின் உரிமையாளராக இந்தியா சிமெண்ட்டின் ஸ்ரீனிவாசனும், டெல்லி கேப்பிட்டல் உரிமையாளராக GMR குழுமத்தின் பார்க் ஜிண்டாலும், பஞ்சாப் கிங்கின் உரிமையாளராக சினிமா நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், மும்பை இந்தியன்ஸ் இன் உரிமையாளராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் முகேஷ் அம்பானியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணையின் உரிமையாளராக நடிகர் சாருக் கானும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக சன் டிவியின் கலாநிதி மாறனும் உள்ளனர்.
படிக்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒழிப்பது எப்போது?
வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த இவர்கள் எதற்காக கிரிக்கெட் அணிக்கு உரிமையாளர்களாக மாறியுள்ளனர்? மல்டி மில்லினியர்களான இவர்கள் நம்மிடமிருந்து மேலும் பல்லாயிரம் கோடிகளை கறப்பதற்காகவே களமிறங்கியுள்ளார்கள். இதில் உழைக்கும் மக்கள் கொண்டாட எதுவும் இல்லை.
ஐபிஎல் சோம்பேறிகளின் விளையாட்டா?
நேற்று வரை கிரிக்கெட் என்பது சோம்பேறிகளின் விளையாட்டாக கருதப்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் மேட்ச்கள் அப்படித்தான் இருந்தன. அதன் பின்னர் வந்த ஒரு நாள் போட்டிகள் சற்று சூடு பிடிக்க செய்தன. ஆனால் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகள் இதற்கு நேர் எதிரானவையாக உள்ளன. வீரர்கள் இந்த ஆட்டத்திற்கு ஏற்ப திடமான உடல்வாகை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தமே 20 ஓவர் தான் ஒரு அணிக்கு வீசப்படும் நிலையில், அதிலும் பவர் பிளே என சிறப்பு வாய்ப்புகள் தரப்பட்டு ஆட்டத்தில் அனல் பறக்கிறது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் எடுக்கப்படும் ரன்களை விடவும் அதிகமாக 20 ஓவர்களிலேயே நொறுக்கி தள்ளுகின்றனர். இதனால் தான் இன்றைய இளம் தலைமுறையினரையும் கிரிக்கெட் கவ்வி பிடித்துள்ளது.
திசை திருப்பும் வலிமையான ஆயுதம்!
கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளின் காட்டாட்சியில் கொடூரமாக நசுக்கப்படும் இளைய சமுதாயத்தினரை சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கவும் வெறியேற்றவும் ஐபிஎல் திருவிழாக்கள் பெரிதும் கை கொடுக்கின்றன.
வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி நேரில் மைதானத்திற்கு வந்து பரவசப் பேரானந்தத்தை அனுபவிக்க கொடுத்து வைக்காதவர்கள், மீடியாக்களின் லைவ் ஒளிபரப்பை பார்த்து மகிழ்கிறார்கள். ஒரு கிரிக்கெட் ரசிகனின் வாழ்க்கைத் தரம் எதுவாக இருந்தாலும், அவர்களிடமிருந்து கறக்க முடியும் அதிகபட்ச தொகையை ஏதாவது ஒரு வழியில் கறந்தே விடுகின்றனர்.
படிக்க: நீ படிக்க மாட்டாய் தான் என்ன செய்வது? எழுதாமல் இருக்க முடியுமா?
மிகப்பெரும் நுகர்பொருள் சந்தையான இந்தியாவில் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி கல்லா கட்ட, கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்க பெரும் தொகையை செலவிடுகின்றன.
நுகர் பொருள் விளம்பரங்களில் மாடல்களாக நடிப்பதற்கும் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதன் மூலமும் வீரர்களுக்கு பணமழை கொட்டுகிறது. உலகின் பிற நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் தனது நாட்டு அணிக்காக மட்டும் விளையாடி தமது வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத பெரும் தொகையை இந்தியாவில் நடக்கும் ஒரு சீசனில் பெற முடிகிறது.
அதிகரிக்கும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பறிபோகும் தொழிற்சங்க உரிமை, எதிர்த்து கேள்வி கேட்டால் பாசிச அடக்குமுறை என இளைஞர்களின் எதிர்காலமே சூனியமாகி வருகிறது. ஆனால், அப்படிப்பட்ட இளைஞர்களை ஐபிஎல் மேட்ச்கள் திசை திருப்பி வெறியேற்றுகின்றன. ரசிகர்கள் என்ற பெயரில் வெறிகொண்டு மற்ற அணியின் ரசிகர்கள் மீது தரம் தாழ்ந்த வார்த்தைகளை வீசுகின்றனர். சில இடங்களில் அது கைகலப்பாகவும் மாறியுள்ளது.
கிளாடியேட்டர் – கிரிக்கெட் வீரர்!
ரோமானிய அடிமை வியாபாரத்தில் விற்கப்படுபவர்களைப் போல தம்மையே விற்றுக் கொண்டு சில கோடிகளை சம்பாதிப்பவர்களான விளையாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல்-லை திருவிழாவாக கொண்டாடலாம்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளை விலைக்கு வாங்கி ஆயுதப் பயிற்சி தந்து கிளாடியேட்டர்களாக உருவாக்கினர். சீமான்கள் கண்டுகளிக்க மனிதர்கள் வெட்டிக்கொண்டு சாகும் போட்டியையும் நடத்தினர் ரோமானியர்கள். அவர்களின் வழியில் இன்று ஐபிஎல் டீம்கள். கொலை கருவிகளான வாள், கேடயம், ஈட்டிகளுக்கு பதிலாக விளையாட்டுப் பொருட்களான பேட், பால், கால் கை தடுப்பு கவசங்கள்.
ஐபிஎல் மேட்சும் பிரம்மாண்டமான மைதானத்தில் தான் நடக்கிறது. கழுத்து நரம்பு புடைக்க வெற்றி முழக்கங்களை எழுப்புகின்றனர். துல்லியமான பந்துவீச்சால் ஸ்டம்ப்புகள் எகிரும் போதும், சரியான விளாசலால் சிக்சர்கள் பறக்கும் போதும் மைதானத்தில் மட்டுமின்றி, பேருந்து ரயிலில் பயணிப்பவர்கள் கூட ஆன்ட்ராய்டு போன் வழியாக பார்த்து பரவசத்தில் கத்துகின்றனர்.
ஐபிஎல் மேட்ச்களில் ரோமானிய கிளாடியேட்டர் சண்டைகளில் வெட்டி சாய்க்கப்படும் வீரனுக்கு பதிலாக, ஒரு ஊரின் பெயரிலான கிரிக்கெட் அணியை மற்றோர் அணி வீழ்த்துகிறது.
நூற்றுக்கணக்கான கோடிகளை ஏலம் எடுக்க மட்டுமே ஒதுக்கி, பல மடங்காக கல்லாக்கட்டும் கார்ப்பரேட் முதலாளிகள் இதை தமக்கான திருவிழாவாக கொண்டாடலாம்தான். உழைக்கும் மக்களான நாம் கொண்டாட இதில் என்ன இருக்கிறது?
- இளமாறன்