மேற்கு வங்கத்தில் பாசிச பாஜகவின் பயங்கரவாத வெறியாட்டங்கள்!
சட்டபூர்வமாக மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படை போலீஸ் மூலமாகவும், போலீசுக்கும் ராணுவத்திற்கும் இணையாக தாங்கள் உருவாக்கி வைத்துள்ள பாசிச குண்டர் படையையும் வைத்துக்கொண்டு மேற்கு வங்கத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் மீது இனி தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்துவார்கள்.

மிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்றான மேற்குவங்க தேர்தலில் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தான் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக பாசிச பாஜக கொக்கரித்து வருகிறது.

கொல்கத்தாவில் பாஜக சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றிய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித் ஷா தாகூரை மேற்கோள் காட்டினார். நோபல் பரிசு பெற்றவரின் ‘எங்கு மனம் அச்சமின்றி இருக்கிறதோ’ என்ற புகழ்பெற்ற கவிதையைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் அமையவிருக்கும் பாஜக அரசு, மக்கள் “அச்சமின்றி மனம் கொண்டு, தலை நிமிர்ந்து” வாழ வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

ஆனால் இதற்கு நேர் மாறாக கடந்த ஐந்து தினங்களாக மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டங்கள் தலை விரித்து ஆடி வருகிறது. மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

பாசிச பாஜகவின் குண்டர் படையினர் மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வணிக வளாகங்கள்; குடியிருப்புகள்; வீடுகள் ஆகியவற்றின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமன்றி வரலாற்று ரீதியிலான முக்கியமான நினைவுச் சின்னங்களையும் தகர்த்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகிறது. அதாவது இதற்கு முன் ஆண்ட கட்சிகளின் அடையாளங்களை முற்றாக அழிக்கும் வேலையை செய்துவருகிறது. அதன் ஒரு பகுதிதான் தோழர் லெனின் சிலை உடைப்பும்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகஞ்ச் (Jiaganj) பகுதியில் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் சிலையை உடைத்து எறிந்து தனது சித்தாந்த ரீதியிலான கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டி உள்ளனர். அது மட்டுமின்றி இடதுசாரிகளின் அலுவலகங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் மீதான தாக்குதல்களையும் வெறித்தனமாக நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் இடதுசாரி இயக்கங்களின் தொண்டர்கள் குறிப்பாக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் வீதியில் இறங்கி மக்களுடன் ஒன்றிணைந்து தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான ஆட்சி நடந்து வருகிறது என்று மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வந்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் யோக்கியதையை பாருங்கள்.

மேற்குவங்கத்தில் பதவியேற்றுள்ள பாசிச பாஜகவின் அமைச்சரவையில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி பல்வேறு கிரிமினல் குற்ற செயல்களை புரிந்த பலரும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ‘மைநேதா’ திட்டத்தின்படி, தற்போது மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதுகலைப் பட்டதாரியான சுவேந்து அதிகாரி, பகைமையைத் தூண்டுதல், குற்றவியல் மிரட்டல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், திருட்டு, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட 29 குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்; இருப்பினும், அந்தப் பிரமாணப் பத்திரத்தில் எந்தவொரு தண்டனைத் தீர்ப்பும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற கட்சிகளில் இருந்து தனது கட்சிக்கு வருகின்ற கிரிமினல்கள், கொலைகாரர்கள், மோசடியாக சொத்து சேர்த்தவர்கள் என பலரையும் தனது வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்து உத்தமர்களாக மாற்றி வருகின்ற பாசிச பாஜக கும்பல், தனது கட்சியைச் சார்ந்த சுவேந்து அதிகாரியை மிக விரைவில் மிஸ்டர் கிளீனாக மாற்றி விடுவார்கள்.

படிக்க:

 மேற்கு வங்கம்: 33 லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்த SIR! 

 ”SIR எனும் பாசிச தாக்குதல்! பீகாரை அடுத்து மேற்கு வங்கம், தமிழ்நாடு!

வங்கதேச அகதிகள் குடியேறிவிட்டார்கள்; நாட்டுக்கு சொந்தமில்லாத இஸ்லாமியர்கள் ஊடுருவி விட்டார்கள்; இந்த ஊடுருவல் காரர்களை எதிர்த்து மேற்கு வங்கத்தின் மக்கள் எங்களுக்கு வாக்குகளை அளித்துள்ளனர்; இது தேசத்தின் வெற்றி! அதாவது தேசத்தின் பாதுகாப்பின் வெற்றி! என்றெல்லாம் பலவாறாக குதியாட்டம் போட்டு வருகின்ற உள்துறை அமைச்சரான அமித்ஷா மேற்குவங்கத்தில் நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்களை பற்றி வாயை திறக்கவில்லை.

இடதுசாரிகளின் அரசியல் மையமாகவும் குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கங்களின் முன்னோடி மாநிலமாகவும் திகழ்ந்த மேற்கு வங்கத்தில் சொல்லிக் கொள்ளப்படும் இடதுசாரிகள் முற்றாக துடைத்தெறியப்பட்டிருப்பதும், தேர்தல் அரசியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதும் இதன் தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளை ஒழித்தது போல, நகர்ப்புற நக்சல்களை ஒழிப்போம் என்று அமித்ஷா கொக்கரித்து வருவதும் கவனிக்கத்தக்க அம்சங்கள் ஆகும்.

சட்டபூர்வமாக மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படை போலீஸ் மூலமாகவும், போலீசுக்கும் ராணுவத்திற்கும் இணையாக தாங்கள் உருவாக்கி வைத்துள்ள பாசிச குண்டர் படையையும் வைத்துக்கொண்டு மேற்கு வங்கத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் மீது இனி தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்துவார்கள்.

கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி சமூக ஜனநாயக சக்திகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலை இலக்கியவாதிகள், சமூக அக்கறை கொண்டவர்கள் சுருக்கமாகச் சொன்னால் பாசிச பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகின்ற அனைவரையும் சிறையில் அடைப்பது; படுகொலை செய்வது; கடுமையாக ஒடுக்குவது; என்ற பல்வேறு வழிமுறைகளை கையாளுவார்கள் என்பதன் துலக்கமான எச்சரிக்கை தான் தற்போது நடந்து வரும் மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்கள்.

பாசிஸ்டுகளை வெறும் சித்தாந்த ரீதியாகவும் பிரச்சாரங்களின் மூலமாகவும் மட்டுமே வீழ்த்த முடியாது அதுபோல தேர்தலில் மட்டும் அவர்களை வீழ்த்தி விடலாம் என்பது பகல் கனவு தான். எனவே பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு தெருவில் இறங்கி பொருத்தமான எதிர்த்தாக்குதல் தொடுப்பதன் மூலம்தான் நிரந்தரமாக அவர்களை விரட்டியடிக்க முடியும். அத்தகைய ஒரு மக்கள் எழுச்சிக்கு மேற்குவங்கம் தயாராக வேண்டும் என்பதுதான் காலத்தின் தேவையாக உள்ளது.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here