ந்தியக் கல்வித்துறையில் நிலவும் கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், வறுமையின் பிடியில் சிக்கும் மாணவர்களின் நிலையையும் நிதி ஆயோக்கின் அண்மைய அறிக்கை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.

இந்தியாவில் 10 குழந்தைகளில் 4 பேர் (40%) மேல்நிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்” என்ற அதிர்ச்சிகரமான தகவலை இந்த அறிக்கை முன்வைக்கிறது.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிதி ஆயோக் சொல்லும் தீர்வுகளும், எதார்த்தமான கள நிலவரங்களும் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

இடைநிற்றலுக்கான காரணங்கள்

நிதி ஆயோக் சுட்டிக்காட்டும் ‘பிரமிடு சிக்கல்’ (Pyramid Problem) இந்தியக் கல்வி முறையின் தோல்விக்கு முக்கிய சான்றாகும். நாட்டில் 7.3 லட்சம் தொடக்கப் பள்ளிகள் இருக்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 1.64 லட்சமாகச் சுருங்குகிறது .

இந்தியாவில் வெறும் 5.4% பள்ளிகள் மட்டுமே 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியான கல்வியை வழங்குகின்றன. மாணவர்கள் 5, 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்குப் பிறகு வேறு பள்ளிகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே இடைநிற்றலுக்கு முக்கிய காரணியாகிறது.

14 வயது வரை மட்டுமே இலவசக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) அமலில் உள்ளது. அதற்குப் பிறகு புத்தகங்கள், சீருடை மற்றும் போக்குவரத்துச் செலவுகளை வறிய குடும்பங்களால் சுமக்க முடிவதில்லை. இதன் விளைவாக, மாணவர்கள் மிகச் சிறிய வயதிலேயே வேலைக்குச் செல்லத் தள்ளப்படுகிறார்கள் என நிதி ஆயோக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் பரிந்துரைகளும் முரண்பாடுகளும்

நிதி ஆயோக் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க புதியக் கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைக்கும் ‘பள்ளி வளாகங்கள்’ (School Complexes) மற்றும் ‘உருளை வடிவக் கல்வி’ (Cylindrical Schooling) மாதிரியை முன்வைக்கிறது. அதாவது, சிதறிக் கிடக்கும் பள்ளிகளை ஒருங்கிணைத்து பெரிய வளாகங்களாக மாற்றுவது இடைநிற்றலைக் குறைக்கும் என்பது அவர்களின் வாதம்.

இருப்பினும், புள்ளிவிவரங்கள் இதற்கு நேரெதிரான உண்மையை உணர்த்துகின்றன.

NEP-ஐ எதிர்க்கும் மாநிலங்களில் இடைநிற்றல் குறைவு

நிதி ஆயோக்கின் அறிக்கையிலுள்ள தரவுகள் அடிப்படையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் கல்வி அளவீடுகளில் பின்தங்கியுள்ளன. குறிப்பாக, புதியக் கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்தும் இந்த மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் அதிகமாகவும், மாணவர் சேர்க்கை விகிதம் குறைவாகவும் இருப்பது ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது.

2024-25 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, அசாம்: 17.5%, குஜராத்: 16.9%, மத்தியப் பிரதேசம்: 16.8%, சத்தீஸ்கர்: 15.3% என பாஜக ஆளும் மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிக இடைநிற்றலைக் கொண்டுள்ளன. புதியக் கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்க்கும் கேரளா (4.8%) மற்றும் தமிழ்நாடு (8.5%) ஆகிய மாநிலங்கள், தேசிய சராசரியான 11.5%-ஐ விட மிகக் குறைவான இடைநிற்றல் விகிதத்தைக் கொண்டுள்ளன.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. பீகாரில் மட்டும் தொடக்கப் பள்ளிகளில் 2.08 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பெருமளவு ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்தத் தரவுகள், புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினாலே கல்வித்தரம் உயரும் என்ற ஒன்றிய அரசின் வாதத்திற்கு மாறாக, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் பின்பற்றும் ஓரளவு சமூக நலன் சார்ந்த கல்வி முறையே பரவாயில்லை என்ற நிலைக்கு நம்மை தள்ளுகின்றன.

படிக்க

 பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மாணவர் பேரவை தேர்தல்கள் உதவும்!

 உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்!

நிதி ஆயோக் பரிந்துரைக்கும் ‘தொழில்நுட்பத் தீர்வுகள்’ (AI மற்றும் AI கல்வி) வறுமையின் பிடியில் இருக்கும் மாணவர்களுக்குத் தீர்வாகாது. வறுமையில் வாடும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது என்பது வெறும் ‘பள்ளிச் சேர்க்கை’ சார்ந்தது மட்டுமல்ல.

வறுமை ஒழிப்பா? கல்வி ஏற்பாடா?

மாணவன் வறுமையில் இருக்கும்போதே அவனுக்குக் கல்விக்கான ஏற்பாட்டைச் செய்வது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான கருவி. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாழ்விடத்திலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, நியாயமான ஊதியம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தரமான அரசுப் பள்ளிகளை உறுதி செய்வதே நிரந்தரத் தீர்வாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் முன்புபோல் தான்மட்டும் வெளிமாநிலங்களுக்கு பிழைப்புக்கு செல்வது என்றநிலை மாறி “குடும்பத்துடன் புலம்பெயர்வு” என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதுவும் 3 அல்லது 6 மாதங்கள் ஒரு மாநிலத்தில் தொடர்ந்து வேலைபார்த்தால் ஆச்சரியம் தான். இதனால் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது குழந்தைகளின் கல்வி தான். இதுவும் முதலாளித்துவ சுரண்டலினால் ஏற்படும் விளைவு. இந்த பிரச்சினையை நிதிஆயோக் மூடிமறைத்துள்ளது.

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை (RTE) 18 வயது வரை நீட்டிக்க வேண்டும். வறுமை காரணமாக ஒரு மாணவன் கூட வேலைக்குச் செல்லக் கூடாது என்பதை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களை தள்ளும் அளவிற்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை குறைத்தும் மாணவர்களுக்கான சலுகைகளை இல்லாமல் செய்கிறது பாஜக ஆளும் மாநில அரசுகள்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கல்வியறிவில் முன்னேறியிருக்கிறது. அதே நேரத்தில் இங்குதான் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகம். தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சில சீர்திருத்த திட்டங்களை அறிமுகப் படுத்தினாலும் தனியார் மயத்திற்கு சேவை செய்வதிலும் சுணக்கம் காட்டுவதில்லை.

தனியார் பள்ளிகளை நோக்கி ஏழைகள் தள்ளப்படுவதைத் தடுத்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை (மின்சாரம், ஆய்வகங்கள், குடிநீர்) போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும்.

புதியக் கல்விக் கொள்கை என்பது கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் ஒரு முயற்சியே அன்றி, கடைக்கோடி மாணவனின் இடைநிற்றலைத் தடுப்பதற்கான நேர்மையான முயற்சி அல்ல. ஆகையால் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க மக்கள் நலனில் இருந்து சிந்திக்க வேண்டும். அப்படியான அரசும் அதிகார வர்க்கமும் இல்லை. அதற்கான மக்கள் போராட்டங்கள் மாணவர்களையும் இணைத்து நடத்தப்பட வேண்டும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here