நீ படிக்க மாட்டாய் தான் என்ன செய்வது?

எழுதாமல் இருக்க
முடியுமா?

கண்மூடி சகித்துக் கொள்ளும் அராஜகம்!


ஜனாதிபதி, ஆளுநர், நீலகிரி வருகை என்று அனைத்து அரசு இயந்திரமும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
பிரதான சாலையில் குண்டும் குழியுமான ரோடுகள் உடனடியாக சீரமைக்கப்படுகின்றன…

வேகத்தடைகள் உடனடியாக அகற்றப்படுகின்றன…

சாலைகளின் குரல்வளைகள் (போக்குவரத்து) நெறிக்கப்பட்டு நான்கு மணி நேரம் கழித்து விடுவிக்கப்படுகின்றன..

சாலைகள் எங்கும் கிருமி நாசினிகள் (சுண்ணாம்பு) தெளிக்கபடுகின்றன…

தூய்மை பணியாளர்கள் கண் கவரும் சீருடை, கையுறைகள் (தற்காலிகமாக) அணிவித்து வேலை செய்ய வைக்கபடுகின்றனர்..

அனைத்தும் நாடகம் அல்லது “தற்காலிக ஏற்பாடு”!

ஆனால்…

உண்மையோ என்ன?

  • தூய்மை பணியாளர்கள் பெரும்பான்மையினர் ஒப்பந்த பணியாளர்கள்..(தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகள் இவர்களுக்கு பொருந்தாது- அற்ப கூலி முறை)
  • கையுறை தூரத்துக்கு ஒன்றாக வழங்கப்படுகிறது (அதன் தரம் விலை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்)..
  • குப்பைகள் அள்ளுவதற்கு எந்தவித நவீன கருவிகளும் கொடுக்கப்படுவதில்லை… (குறிப்பாக அது பற்றி அதிகாரிகளுக்கு தெரிந்தும் வழங்கப்படுவதில்லை- அராஜகம் – அவர்களை குப்பை அள்ள சொன்னால் உடனடியாக வாங்கப்படும்)
  • மழைக் காலங்களில் ரெயின் கோட், ஷூ வழங்கப்படுவதில்லை…
  • கழிப்பறைகள் தூய்மைப்படுத்த கைகளால் (துடைப்பம் கொண்டு நேரடியாக) கட்டாயப் படுத்தி செய்ய வைக்கப்படுகின்றனர்…. (மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நாகரிகமற்ற கொடுமை செயல்).
  • குடியிருப்புகள் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சந்தைகள் என எங்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்கப்படுவதில்லை .
  • இதில் நாப்கின் முதல் மலம் வரை.. இறைச்சி கழிவுகள் முதல் உடல் எச்சங்கள் வரை ஒன்றாக கலக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன.
  • அதை குப்பை பிரிக்கும் இடத்தில் கையால்(மனித கழிவுகளை கையால் அள்ள தடைச் சட்டம் 2015 க்கு எதிரானது) தொழிலாளர்கள் பிரிக்கும் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது .
  • பணி செய்யும் இடங்களுக்கு செல்ல குப்பை வண்டிகளில் கொண்டு செல்லப்படுகின்றனர் (பாதுகாப்பான பயணமோ பேருந்துகளில் செல்வதற்கு இலவசமாகவோ இல்லை)…
  • தூய்மை பணியாளர்கள் பணி புரியும் அலுவலகங்களில் ஓய்வு அறை என்பதுஇல்லை(கொண்டுவந்த உணவை வெட்ட வெளியிலோ ஏதாவது ஒரு கடையிலோ உண்ணும் அவலம்) ..
  • மின்சார ஆட்டோக்கள் வாங்கப்பட்டிருந்தும் அவை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை…(குறுகிய தெருக்களில் சாக்கு பைகளில் இழுத்து செல்லும் கொடுமை)
  • தூய்மை பணியாளர்களுக்கு என்று மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவதில்லை …
  • வேலை பகுதி பிரித்து அனுப்பப்படும் “ரோல்” களில் அலுவலகத்தின் வெட்ட வெளியில் (மழையானாலும் வெயில் ஆனாலும்) வைத்து தான் சொல்லப்படுகிறது…
  • எந்த ஊரு பிரமுகர் அவர்களும் வரும் போதும் அவர்களுக்கு இந்த நகரம் இந்த நகராட்சி மாநகராட்சி தூய்மையாக இருப்பதை போல காட்டிக் கொள்ள நடித்துக் கொள்ள- பதக்கம் வாங்கிக்கொள்ள தூய்மை பணியாளர்கள் மீது உழைப்பு சுரண்டல் ஏவப்பட்டு அற்ப கூலியில் அதிக வேலை வாங்க வைக்கப்படுகின்றனர். (அசிங்கம்)எந்தவித காப்பீடு- மருத்துவ காப்பீடு, உயிர் காப்பீடு எதுவும் வழங்கப்படுவதில்லை…
  • சாலையோரம் தூய்மை பணி செய்யும் பணியாளர்கள் அதிவேகமாக செல்லக்கூடிய ஊதாரிகளால் வாகனங்களால் இடிக்கப்பட்டு உயிர் இழப்பும்,
    உடல் நிரந்தர ஊனங்களும் தினசரி நடக்கின்றன.(சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உயிர் இழப்பில் ஐந்து லட்சம் மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டது)
  • பகுதி நேர தூய்மை பணியாளர்களுக்கு இன்றும் ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் மாத சம்பளமாக கொடுக்கப்பட்டு முழு நேரம் கடுமையான வேலை வாங்க படுத்தப்படுகின்றனர்…
  • அல்லகை முதல், மேட்டுக்குடி கும்பல் வரை யார் நிர்வாகத்திற்கு போன் செய்தாலும் உடனே தூய்மை பணியாளர்கள் எந்த வித பாதுகாப்பு கருவிகளோ மாஸ்க்,கையுறை,காலணி உள்ளிட்ட) நவீன கருவி உபகரணங்களோ இல்லாமல் ஒரு மண் வெட்டி, கூடையோடு அனுப்பப்பட்டு சாக்கடைகள், புல் புதர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்த வைக்கப்படுகின்றனர்…( இதில் பெருமை, அருமை, புகழ் எல்லாம் உழைக்காத அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் தான். கேவலம்)
  • கண்ணாடி பாட்டில் துண்டுகள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தாக்கியும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழப்பது தான் யதார்த்தம்…

உண்மை இப்படி இருக்க எந்த பிரமுகர்கள் வந்தாலும் பகடைக்காய் உழைக்கும் மக்களான தூய்மை பணியாளர்கள் தான்.

ஆகையால்..

முகநூலில் வாட்ஸ் அப்பில் மட்டும் உரிமைகள் பேசும் சமூக ஆர்வலர்களே!

“அறிவு ஜீவி”களே!

நடிகை, கிரிக்கெட் வீரர், அம்பானி, அதானி தடுக்கி விழுந்தாலும் பல நாள் செய்தி போடும் பத்திரிக்கையாளர்களே!

முற்போக்கு, சமூக நீதி பேசும் ஜனநாயகவாதிகளே!

நிலாவுக்கு குடி போகும் அளவுக்கு வளர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் அறிவியல் துறையினரே!

உயர்தொழில்நுட்பங்களில், நுகர்ந்து திளைக்கும், பயன்படுத்தும் இளைய தலமுறையினரே!

புகழ் விரும்பி கலைஞர்களே!

மேடைக்கு மேடை வாய்க்கிழிய பேசும் வெத்துவேட்டு அரசியல்வாதிகளே!

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை (சடங்குகளை) நடத்திக் கொண்டு பதிவு காட்டும் அதிகாரிகளே!

இன்னபிற கனவான்களே!

தூய்மை பணியாளர்களின் கண்ணியம், உரிமைகள் (தொழில் முறை இழிவோடும்- சாதிய ஒடுக்கு முறையோடும்) காற்றில் பறக்க விட அனுமதிக்கப்படுகின்ற உங்கள் மௌனங்கள் அட ச்சீ… சந்தர்ப்ப வாதங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், உங்கள் முகமூடிகள் கிழிக்க படுவதும் சரி தானே? இல்லை யென்றால் குரல் கொடுங்கள்

அரசுகளே!

■ தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் (நிரந்தர தொழிலாளர்) செய்து பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!

■ மாத சம்பளமாக ரூபாய் 60 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்பட வேண்டும்!

■ உயிர் இழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்!

■ தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வியும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்!

■ தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான நவீன கருவிகள் வழங்கப்பட வேண்டும்!

■மருத்துவ முகாம்கள், ஓய்வுஅறைகள், குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்!

■ தூய்மை பணியில் அனைத்து சமூகத்தினரையும் ஈடுபடுத்தப்பட வேண்டும்!

■ தூய்மை பணியாளர்கள் மீது ஏவப்படும் அனைத்து வகையான சுரண்டல்களுக்கும், வன்முறைகளுக்கும் அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்!

ராஜா
மக்கள் அதிகாரம், நீலகிரி மாவட்டம்.

1 COMMENT

  1. நகராட்சி மாநகராட்சி முதற்கொண்டு அனைத்து துறைகளும் தனியார் மயமாகி வருகிறது, இதில் அரசு எங்கு இவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கண்ணியத்துடன் தொழில் செய்ய விட போகிறது,
    தமிழக முழுவதும் இருக்கின்ற தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராடும் போது மட்டும் தான் சாத்தியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here