டிசாவின் ராயகடா மற்றும் காலஹாண்டி மாவட்டங்களில் உள்ள திஜிமாலி மலைத்தொடர், அங்கு வாழும் தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அவர்களின் கலாச்சார அடையாளமும் கூட. ஆனால், வேதாந்தா போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்காக, இந்த மக்களின் நிலங்களும் காடுகளும் பறிக்கப்படுகின்றன. இந்த நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது அரசும் நீதித்துறையும் ஏவும் ஒடுக்குமுறைகள், இன்றைய ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் நவீன நிலப்பிரபுத்துவத்தின் முகத்தையே காட்டுகின்றன.

சாதிய மேலாதிக்கத்தின் கருவியாக நீதித்துறை

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய பழங்குடி மற்றும் தலித் மக்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குப் பிணை வழங்கப்படும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அதிர்ச்சியளிக்கின்றன. ராயகடா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஒடிசா உயர்நீதிமன்றம், போராட்டக்காரர்கள் காவல் நிலையங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளன.

ஒடிசா: கார்ப்பரேட் சுரண்டலும், நீதித்துறையின் சாதிய ஒடுக்குமுறையும்
நீதித்துறையின் சாதிய வன்ம உத்தரவு.

இது வெறும் சட்ட நடைமுறை அல்ல; இது உழைக்கும் வர்க்கத்தின் மீதும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதும் திணிக்கப்படும் சாதிய இழிவு. பழங்குடி மற்றும் தலித் மக்களைக் குறிவைத்து, அவர்களை வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ‘தூய்மைப் பணி’ செய்யச் சொல்வது, நீதித்துறைக்குள் புதைந்துள்ள சாதிய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

உயர்சாதி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள், ஒரு உயர்சாதித் தலைவரை ஒருபோதும் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது சமூகச் செயல்பாட்டாளர்களின் வலுவான வாதமாகும்.

எங்கள் லட்சியம் இந்த இழிவான உத்தரவை விட மேலானது!

ஒடிசா உயர்நீதிமன்றம் போராட்டக்காரர் குமேஸ்வர் நாயக்கிற்கு 2025 மே 28 அன்று இந்த நிபந்தனையுடன் பிணை வழங்கியது. அதனைத் தொடர்ந்து, ராயகடா மாவட்ட நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் 2025 ஆகஸ்ட் முதல் 2026 ஜனவரி வரை இது போன்ற ஏழு பிணை ஆணைகளை வழங்கினர். மிக சமீபத்தில், 2026 பிப்ரவரி 18 அன்று நாரிங் தேய் மாஜி உள்ளிட்ட மூன்று போராட்டக்காரர்களுக்கு இதே நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

இந்த உத்தரவு தங்களை அவமானப்படுத்துவதற்காகவே பிறப்பிக்கப்பட்டது என்று கூறுகிறார் குமேஸ்வர் நாயக்.

“இந்த இழிவான வேலையைச் செய்யப் போகிறோம் என்று தெரிந்தே காவல் நிலையத்திற்கு நடக்கும்போது, இந்த லட்சியம் (போராட்டம்) இந்த சிறிய உத்தரவை விட மேலானது என்று என் இதயத்திடம் சொல்லிக்கொண்டேன்”

என அவர் தனது மனவேதனையைப் பகிர்ந்துள்ளார். மேலும், நீதித்துறையே இத்தகைய சாதிய உத்தரவை (Casteist order) பிறப்பித்துள்ளது தங்களை வியப்படைய வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது போன்ற செயல்கள் எங்களை போராட்டத்திலிருந்து தடுத்துவிடும் என்று அவர்கள் நினைத்தால் அது தவறு” என்று அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் உமாகாந்த் நாயக். தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

படிக்க:

 வேதாந்தாவை விரட்டி அடித்த அரிட்டாபட்டியின் மக்கள் போராட்டம்!

 விடியல் வேதாந்தாவுக்கா? | தோழர் லஜபதிராய்

நாரிங் தேய் மாஜி, ஏழு பொய் வழக்குகளைச் சந்தித்து வரும் இவர், இந்த ஒடுக்குமுறைகளால் சோர்வடைந்திருந்தாலும், “நான் போராட்டத்தை நிறுத்த மாட்டேன்” என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

காவல்துறையில் பணியாற்றும் தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த காவலர்களே இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த சங்கடப்பட்டதாகவும், சில சமயங்களில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

கார்ப்பரேட் சேவையில் அரசு இயந்திரம்

ஒருபுறம், ஏழை மக்கள் தங்களின் நிலத்தைக் காக்கப் போராடினால், அவர்கள் மீது ‘கொலை முயற்சி’ மற்றும் ‘கலவரம்’ போன்ற கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதியப்படுகின்றன.

மறுபுறம், வேதாந்தா நிறுவனம் ஒடிசாவின் பீடன் (Bheden) நதியிலிருந்து உரிய அனுமதியின்றி நாளொன்றுக்கு 1,03,680 கன மீட்டர் தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி எடுத்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு 233 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும், அது அந்த நிறுவனத்தின் லாபத்தோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியதே. பழங்குடி மக்களுக்கு ஒரு ‘நீதி’. கார்ப்பரேட் கொள்ளைக் கும்பலுக்கு ஒரு ‘நீதி’. அதே நீதிபதிகள் வேதாந்தா நிறுவனம் செய்த தண்ணீர் திருட்டிற்காக தலித் மற்றும் பழங்குடி மக்களின் காலைக் கழுவிக் குடிக்க உத்தரவிடுமா? இந்த கேள்வி உழைக்கும் மக்களின் விடுதலையின் மீது விருப்பம் கொண்ட நம் ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டும். இது அந்த சாதிய எண்ணம் கொண்ட நீதிபதிகளின் செவிப்பறையில் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

சட்டவிரோதமாக இயற்கை வளங்களைச் சுரண்டும் முதலாளித்துவ நிறுவனங்களுக்குத் துணை நிற்கும் அரசு இயந்திரம், நேர்மையாகப் போராடும் மக்களைக் காவல் நிலையத்தைக் கூட்டச் சொல்லி அவமானப்படுத்துவது, அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

மக்களின் உறுதியும் போராட்டமும்

கிராம சபைகளின் போலி ஒப்புதல் ஆவணங்களைத் தயாரித்து, மக்களின் நிலங்களைப் பறிக்க முனையும் வேதாந்தா மற்றும் அரசு அதிகாரிகளின் சதித்திட்டங்களை மக்கள் முறியடித்து வருகின்றனர்.

காவல்துறையின் பாலியல் அச்சுறுத்தல்கள், பொய் வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தின் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி, திஜிமாலி மலைப்பகுதி பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.

ஒடிசாவில் நடப்பது வெறும் நிலப்பறிப்பு அல்ல; இது கார்ப்பரேட் முதலாளித்துவமும் சாதிய மேலாதிக்கமும் கைகோர்த்துக்கொண்டு நடத்தும் ஒரு வர்க்கப் போர். உழைக்கும் மக்களையும் அவர்களின் இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நீதித்துறை பண்ணையார்களைப் போலச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நிலமே எங்களின் உயிர் எனக் கருதும் பழங்குடி மக்களின் இந்த வீரமிக்கப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்திற்குத் துணை நிற்பது நம் அனைவரின் கடமை.

  • நலன்

ஆதாரம்: https://article-14.com/post/after-state-crackdown-on-anti-mining-protests-odisha-courts-order-adivasi-dalit-protesters-to-clean-police-stations-69eed7b73b1ec

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here