மக்கள் கல்விக் கூட்டியக்கம்
அறிக்கை
தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையைத் தாமதமின்றி வெளியிடுக!
நடுவண் அரசு தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை எதிர்த்துத் தமிழ்நாட்டிற்கெனத் தனிப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க முடிவு செய்து, நீதியரசர் முருகேசன் அவர்கள் தலைமையில் அமைத்த குழுவின் கல்விக் கொள்கை அறிக்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு வெகு நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் அரசு இதுவரை அதை வெளியிடவில்லை.
மாறாகக் கல்வித் தளத்தில் பல்வகைப் புதிய திட்டங்களை வேகமாகத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையை இந்தி / சமஸ்கிருத மொழித் திணிப்பிற்காக எதிர்ப்பது வரவேற்கத் தக்கது. ஆனால் அதுமட்டும் போதுமானதல்ல.
மாறாக அதில் மக்கள் விரோத அம்சங்கள் பல உள்ளன. தேசியக் கல்விக் கொள்கையின் பல திட்டங்களை மாநில அரசு மறைமுகமாக வெவ்வேறு பெயர்களில் நடை முறைப்படுத்தி வருவதாகப் பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் வேளையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். எனவே அதற்காகத் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை அரசு உடனே வெளியிட வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்துகிறது.
தமிழ்ப் பல்கலைகழக ஊழல், ஆளுநரின் தலையீடு குறித்த தமிழ்நாடு அரசின் மெளனம் ஏற்கத்தக்கதல்ல!
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது பற்றிய விசாரணைக்கு அதன் துணை வேந்தர் பேரா.திருவள்ளுவன் தனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்பதால் அவரைத் தமிழக ஆளுநர் பல்கலையின் வேந்தர் என்ற தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்திப் பணி இடை நீக்கம் செய்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக் கழக ஊழல் பற்றி மட்டுமல்ல, தமிழகத்தின் பல் வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடை பெற்றுள்ளதைப் பல ஆண்டுகளாகப் பல இயக்கங்களும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது பற்றி ஆளுநர் இது வரை எந்தக் கவலையும் கொண்டதாகத் தெரியவில்லை. திடீரென்று தமிழ்ப் பல்கலைக் கழக ஊழலை மட்டும் தட்டிக் கேட்க அவர் களம் இறங்கியுள்ளார். அதே போலத் தமிழ் நாடு அரசும் உயர்கல்விப் பரப்பில் உள்ள ஊழல்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்த அவலம் இன்றும் தொடர அனுமதித்து வருகின்றது. பல்கலைக் கழகங்களிலும், அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் காலிப் பணியிடங்கள் வந்துவிட்டால் அது நிர்வாகங்களுக்கு ஓர் அறுவடைக் காலமாக ஆகிவிடுகிறது. பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அதிகாரத்தை ஆளுநர் பயன் படுத்தி அரசால் நியமிக்கப்பட்டத் துணை வேந்தரைப் பணி இடை நீக்கம் செய்துள்ளது சரியா என்பது பற்றியும் தமிழ்நாடு அரசு கவலை கொள்ளவில்லை. பல்கலைக் கழக ஊழல்கள் பற்றி அரசு இப்படிக் கனத்த மெளனம் சாதிப்பதை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதே நேரத்தில் ஆளுநர் தன் விருப்பப்படும் போது மட்டும் தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுப்பதை அரசு அனுமதிக்கலாகாது. ஆளுநரிடம் இத்தகைய அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, அரசு ஒதுங்கியிருப்பது ஏன் என்ற வினா எழுகின்றது. தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பணி நியமனங்களில் நிகழும் முறைகேடுகள் மீது அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கல்விக் கூட்டியக்கம் வேண்டுகின்றது.
அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக!
அரசுப் பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கெனவே மக்கள் கல்விக் கூட்டியக்கம் அரசுக்கு இது குறித்துக் கடிதம் அனுப்பியுள்ளது. டிசம்பர் மாதம் வந்துவிட்டது. அரையாண்டுத் தேர்வுக் கால அட்டவணையை அரசு வெளியிட்டு ஒரு வார காலமும் ஆகி விட்டது. பொதுத் தேர்வு நடைபெறும் வகுப்புகளுக்குப் பாடப்பகுதிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையிலும் கூட, நிரந்தர ஆசிரியர் நியமனம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வழியாகப் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணியாற்றும் அவலநிலையே நீடிக்கிறது. அதுமட்டுமின்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமை ஆசிரியர்கள் இல்லாமலேயே பள்ளிகள் இயங்குவது வேதனை. கல்வித் துறையில் நாள் தோறும் புதிய திட்டங்களை நிறைவேற்றும் வேலையை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். கற்பித்தல் பணிகள் முழுமையாக நடைபெறாமல் தரமான கல்வி என்பது எட்டாக் கனியாகத்தான் இன்னும் இருக்கிறது. அளவில்லாத எண்ணிக்கையில் போட்டிகளை நடத்தச் சுற்றறிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.அன்றாடம் கற்பித்தல் பணி என்பது சவாலாக இருக்கிறது. எவ்விதச் சிரமுமின்றி இயல்பாக மாணவர்கள் கற்றலில் ஈடுபடத் தக்க சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.காலிப் பணியிடங்களை உடனடியாக முறையாக நிரப்ப வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியாளர்களை தினக் கூலிகளாக நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்திடுக!
தமிழ்நாடு அரசின் அண்ணா பல்கலைக்கழகம் 20/11/24 அன்று புறத்திறனீட்டம் (OUTSOURCING) திட்டப்படி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பேராசிரியர்களையும், ஆசிரியரல்லாத ஊழியர்களையும் தினக்கூலி அடிப்படையில் மனித வள நிறுவனங்கள் மூலம் நியமிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது எதிர்ப்பு கிளம்பியவுடன் , மறுநாள் 21/11/24 அன்று ஆசிரியர் பணியிடங்களைத் தவிர்த்து ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனைத்தும் புறத்திறனீட்டம் திட்டப்படி, தினக்கூலி அடிப்படையில் மனிதவள நிறுவனங்கள் மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று மறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தூய்மைப் பணியாளர்கள், தோட்டக்காரர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகிய ஊழியர்கள் அனைவரையும் இத்திட்டப்படியே இனி அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் நியமிக்க வேண்டும், இத்தகைய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய முடிவை எடுக்கப் பல்கலைக்கழகத்தை நிர்ப்பந்திக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் நிதிக் குழு தன்னுடைய 149வது கூட்டத்தில் பேராசிரியர்களை, ஊழியர்களை தினக்கூலிகளாக நடத்த நிர்ப்பந்தித்ததை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கற்பிக்கும் பேராசிரியர்களைப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கும் முறையை ஒழித்துக்கட்டி வெளிச்சந்தையில் உள்ள மனிதவளக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் தினக்கூலிகளாக நியமிக்க முடிவெடுத்த நிதிக்குழுவில் உள்ள தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகளையும் மக்கள் கல்விக் கூட்டியக்கம் கண்டிக்கிறது.
ஒப்பந்த ஊழியர்களை, ஒப்பந்தப் பேராசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தரமாக்கும் வரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் என ஊழியர்கள் சங்கங்களும் ஒப்பந்த ஆசிரியர், கவுரவ விரிவுரையாளர் சங்கங்களும் தமிழ்நாடு அரசிடம் முறையிட்டுள்ளதை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பேரா. இரா.முரளி
பேரா. வீ. அரசு
பேரா. ப.சிவகுமார், கல்வியாளர்
கண. குறிஞ்சி
– (ஒருங்கிணைப்பளர்கள்)