
இந்தியாவை ‘முன்னேற்றியே தீர வேண்டும்’ என்ற ‘வெறியுடன்’ செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில், கார்ப்பரேட்டுகள் கட்ட வேண்டிய வரித்தொகையில் ரூ.3.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கு முன்புவரை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை வியாபாரம்(annual turnover) செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30% க்கும் அதிகமாக இருந்தது. அதன் பிறகு இந்த வரியை திருவாளர் மோடி 22% என்ற அளவிற்கு குறைத்தார். இப்பொழுது 2024ல் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வரியை 21.2% என்ற அளவிற்கு மேலும் குறைத்து விட்டார்.
இப்படி வரிக்குறைப்பு செய்ததன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிலேயே மிகப்பெரியதாக உள்ள 10% நிறுவனங்கள் மூன்று லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிப்பதற்கு சட்டபூர்வமான ஏற்பாட்டை திருவாளர் மோடி செய்து இருக்கிறார்.
கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி தீனி போடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை எப்படி வளம் பெரும் என்று தேசவிரோதிகள் (Anti Indian) கேட்கக்கூடும்.
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு, ‘மாடுகள் வேலை செய்கிறது என்பதற்காக மாடுகளுக்கு யாரும் கூலி கொடுப்பதில்லை; மாறாக, மாட்டின் உரிமையாளருக்கு தானே கூலி கொடுக்கிறோம்? அதுபோலத்தான் மாடுகளைப் போல் உழைத்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களுக்கு வரிச்சலுகை கொடுக்கவில்லை; மாறாக, மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடி வரிச்சலுகை கொடுத்திருக்கிறார்’ என்ற விளக்கெண்ணெய் விளக்கத்தை சங்கிகள் கொடுப்பார்கள்.
கார்ப்பரேட்டுகளை வளர்க்கும் மோடியின் வேலை இத்துடன் நிற்கவில்லை. கட்சிகளுக்கு தேர்தல் நிதி பத்திரங்களின் மூலம் அளிக்கப்படும் நன்கொடைகள், வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் அறக்கட்டளைகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள் போன்றவற்றிற்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கொடுத்ததன் மூலம் 2013 ஆம் ஆண்டில் (13 நிதியாண்டு) இருந்து 2022 ஆம் ஆண்டு (22ம் நிதியாண்டு) வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ரூ. 8.22 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது.
படிக்க: இந்தியாவில் அதிக வரிகள் செலுத்துவது யார்? சாதாரண மக்களா? கார்ப்பரேட்டுகளா?
இப்படி, மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டிய வரியை தள்ளுபடி செய்ததன் மூலம் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 11 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையுடன் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்த 24 லட்சம் கோடி ரூபாயையும் சேர்த்துப் பார்த்தால் மோடி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கிய தொகை 35 லட்சத்து 36 ஆயிரம் கோடி என்பது தெரியவரும்.
படிக்க: மக்களிடம் பறிக்கும் வரியை குறை! கார்ப்பரேட்டுகளிடம் வரியை உயர்த்து!
கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி வாரி வழங்கும் மோடி, மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியை விதித்து ஏழை உழைக்கும் மக்களை அரை பட்டினி – கால் பட்டினியில் தள்ளி, கொன்று கொண்டிருக்கிறார். இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது ஏழை மக்களை சட்டபூர்வமாக கொள்ளையடிப்பதற்கான வழியாக பாஜகவால் பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
அதனால் தான், கடந்த மாதத்தை விட இந்த மாதம் ஜிஎஸ்டி வரிவசூல் இவ்வளவு ஆயிரம் அதிகரித்துள்ளது; அவ்வளவு ஆயிரம் அதிகரித்துள்ளது என்று ஒவ்வொரு மாதத்திலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமையாக கூவிக்கொண்டிருக்கிறார்.
கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள், கடன் தள்ளுபடிகளை மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளுடன் ஒப்பிட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற அம்பலப்படுத்தல்கள் மூலம் தான் பிஜேபியின் அரசு என்பது கார்ப்பரேட்டுகளின் அரசு என்பதை மக்களுக்கு புரிய வைக்க முடியும். இம்மாதிரியான நடவடிக்கைகளின் வழியாகத்தான் இந்த பாசிசத்தை முறியடிப்பதற்கு மக்களை தயார் படுத்த முடியும்.
- தங்கசாமி
செய்தி ஆதாரம்: Thewire