சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தியா உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்று பீற்றிக்கொண்டாலும் இங்கு விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ, சிறு வணிகர்களுக்கோ தங்களது நியாயத்தை கேட்கவோ போராடவோ உரிமை இல்லாத ‘ஜனநாயக’ நாடாக தான் இந்தியா உள்ளது.

தொழில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் முதலாளிகளின் ஆட்சியே நடைபெறுகிறது. எத்தனை ஆயிரம் கோடிகள் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்தாலும் அதில் தமிழ்நாட்டு மக்களுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எந்த பயனும் இல்லை.

கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகளுக்கு நிலம், நீர், வரிச்சலுகை கொடுப்பதோடு தொழிலாளர்களின் உழைப்பை அத்துகூலிக்கு சுரண்டவும் சேர்த்து தான் ஒப்பந்தம் போடுகிறது அரசு. ஆட்டோமொபைல், கனரக வாகன உற்பத்தி, மின்சாதன பொருட்கள் தயாரிப்பு என முதலாளிகள் கொள்ளை இலாபத்தை ஈட்டுகிறார்கள். நோக்கியா நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு ஓடும் பொழுது வைத்த வரி பாக்கியே 21,150 கோடி என்றால் எவ்வளவு லாபமீட்டிருக்கும் என்று பாருங்கள். நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான் அதன் பின்பு பாஸ்கான், ஃபோர்டு என பல ஆலைகள் மூடப்பட்டன. இந்த ஆலைகள் மூடப்பட்டதற்கு எந்த தொழிற்சங்கமும் காரணம் அல்ல சுரண்டியது போதும் என கிளம்பிவிட்டது நிறுவனங்கள்.

உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்கள்!

கடந்த பத்து நாட்களாக ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளுக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சங்கத்தை கலைக்க வேண்டும் அல்லது உடைத்து நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில் சேர தொழிலாளர்களை நிர்பந்தித்துள்ளது சாம்சங். இதனை எதிர்க்கும் தொழிலாளர்களை தனி அறையில் காக்க வைத்து சித்திரவதை செய்வதாக கூறுகிறார்கள்.

மேலும் எட்டு மணி நேர வேலையை மாற்றி 11 மணி நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குகிறது சாம்சங் நிர்வாகம். கட்டாயத்தின் பேரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இரண்டு மடங்கு சம்பளத்தையும் வழங்க மறுக்கிறது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக செல்ல இருந்த தொழிலாளர்கள் 120 பேரை கைது செய்துள்ளது திமுக அரசின் காவல்துறை. அதற்கு முன்பாகவே காலையில் சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமாரையும் சிஐடியு அலுவலகத்தில் கைது செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பேரணி செல்ல முயன்ற தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.  தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார், நிர்வாகி சசிகுமார், ரவிக்குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராடுவது குற்றம் என்கிறது காவல்துறை. சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமல்ல அனைத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ஆதரவாக வேலை செய்கிறது தமிழக போலீஸ். போராடுவது குற்றம், முழக்கம் போடுவது குற்றம், பேரணி செல்வது குற்றம், உரிமைகளைக் கேட்க ஒன்று கூடுவது குற்றம். ஆனால் முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவது குற்றமாகாது. தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது குற்றமாகாது. தொழிலாளர் சட்டத்தை மதிக்காதது குற்றமாகது. இதுதான் ‘இந்திய ஜனநாயகம்’ என்கிறது அரசு.

பாஜகவின் கார்ப்பரேட் விசுவாசம்!

“…கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலின் பேரில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், தொழிற்சங்கம் என்ற போர்வையில் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளது. இதனால் அந்நிய முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும் என்றும்”  தனது முதலாளிக்கு விசுவாசத்தை காட்டியுள்ளார்  பாஜகவின் நாராயணன் திருப்பதி.

தொழிலாளர்களுக்கு என  இருந்த குறைந்தபட்ச சட்டத்தை நீர்த்துப் போக செய்த பெருமை பாஜகவை சாரும். 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றியது பாஜக தான். இருக்கும் குறைந்தபட்ச உரிமையும் பறித்துவிட்டு சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக ஊளையிடுகிறது ‘பார்ப்பன நரி’.

சாம்சங் இந்தியா நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் 99 ஆயிரம் கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகம். அப்படி இருந்தும் தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில்லை. கிள்ளி கொடுக்கவே  மறுக்கிறது. உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை நவீன அடிமையாக பார்க்கிறது, சுரண்டுகிறது, அடக்குமுறையை செலுத்துகிறது.

படிக்க:

 8 மணிநேர வேலையை ஒழித்து கட்ட ஒன்றுகூடும் கார்ப்பரேட்டு முதலாளிகள்!

♦ தெற்கு உலகை சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிதி மூலதனம்! உட்சா பட்நாயக்.

இதே சாம்சங் நிறுவனம் தனது நாட்டில் அதாவது தென்கொரியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாத   சம்பளமாக 4,50,000 கொடுக்கிறது. ஆனால் இந்தியாவிலோ குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் சாம்சங் நிறுவனமோ 15,000-லிருந்து அதிகபட்சம் 32,000 வரை மட்டுமே சம்பளம் கொடுக்கிறது. குறைந்த அளவில் முதலீடு செய்து அதிக அளவில் லாபத்தை குவிக்கின்றன இந்தியாவில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள். அதனாலேயே இந்தியா தொழில் உற்பத்திக்கு சிறந்த இடமாக கார்ப்பரேட் நிறுவனங்களால் பார்க்கப்படுகிறது.

திமுகவின் முதலாளித்துவ பாசம்!

15 நாள் பயணமாக அமெரிக்கா சென்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில ஆயிரம் கோடிகளை முதலீடுகளாக ஈர்த்துள்ளார் என ஆளும் வர்க்க ஊடகங்கள் பெருமை பேசுகின்றன.

ஆனால் அப்படி வரும் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மதிக்குமா என்பதை சாம்சங் நிறுவனத்தின் அடாவடித்தனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 80 நாட்களை கடந்தும் தொழிலாளர்துறை பதிவு செய்யாமல் தாமதிக்கிறது. காவல்துறையோ சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களை மிரட்டுகிறது. சங்கத்தில் இருந்து வெளியேறி நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியில் இணைந்தால் சம்பளம் அதிகம் கிடைக்கும் என தொழிலாளர் குடும்பத்தை சந்தித்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறது, மிரட்டுகிறது.

சாம்சங் நிர்வாகமே ஆச்சர்யபடும் வகையில் போராட்டத்திற்கு முன்னதாகவே தொழிலாளர்களை கைது செய்வது, கடத்துவது என தீயாய் வேலை செய்கிறது திமுக அரசின் காவல்துறை.

திமுக அரசின் இந்த தொழிலாளர் விரோத போக்கு ஏற்கனவே 10 மணி நேர வேலையை அமல்படுத்திய போதே அம்பலப்பட்டது. ஆனாலும் கார்ப்பரேட் விசுவாசத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்று கருதுகிறது திமுக.

சாம்சங் அப்பட்டமாக தொழிலாளர் சட்டத்தை மீறி செயல்படுகிறது. அதை கேட்கவோ, கண்டிக்கவோ செய்யாமல் தொழிலாளர்கள் மீது காவல்துறையை ஏவுவது கார்ப்பரேட் சேவையில் பாஜகவை ஒத்தே செயல்படுகிறது திமுக.

தற்போதைய நிலையில்  சாம்சங் பகாசுர கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மக்களிடம் கொண்டு சென்று பன்னாட்டு கம்பெனியின் சுரண்டலை, மூலதன கொள்ளையை  அம்பலப்படுத்த வேண்டும். CITU இந்தியா முழுவதும் சாம்சங்கின் அடக்குமுறையை கண்டித்து இயக்கம் எடுக்க உள்ளது வரவேற்க வேண்டியது என்றாலும், சாம்சங் மட்டுமல்லாமல் பல பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இதே போன்ற அடக்குமுறை தொடர்வதால் தொழிற்சங்கங்களின் ஐக்கியம் மூலமே தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு முடிவு கட்ட முடியும்.

  • நந்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here