காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை. கடந்த ஐந்து ஆண்டுகளாக காஷ்மீரில், ”தீவிரவாதத்தை முற்றாக ஒழித்து விட்டோம்” என்று ஆர்எஸ்எஸ் பாஜக பெருமை பேசிக்கொண்டது.
காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கி காஷ்மீரை இரண்டாக மாற்றியதன் மூலம் நிரந்தர அமைதி உருவாகிவிட்டது என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் காஷ்மீரில் பாசிச பாஜக மற்றும் அதன் ஆதரவு எடுபிடி கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்று தேசிய மாநாட்டுக் கட்சியின் ஓமர் அப்துல்லா வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று மிதந்து கொண்டிருந்த பாசிச பாஜகவிற்கு காஷ்மீரில் கிடைத்த தோல்வி ஆத்திரத்தை உருவாக்கி இருந்தது. இந்த சூழலில் தான் மேற்கண்ட பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
”நாட்டின் பாதுகாப்பிற்கு தாங்கள்தான் பொருத்தமானவர்கள்” என்றும், ”பாகிஸ்தானிற்கும், சீனாவிற்கும் எதிராக போராட துணிச்சலான பிரதமர் மோடி” என்றும் கூச்சலிட்டு கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை முடியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டுக்கான காரணங்கள் ஏதும் விளக்கப்படவில்லை.
ஆனால் அதற்குள் அவசர அவசரமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக் குழுக்களின் முகாம்கள் எனக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், பாகிஸ்தானின் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில், “ஆப்ரேஷன் சிந்தூர்” என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதக் குழுக்களில் தலைமையகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்திய ஒன்றிய அரசானது தெரிவித்திருக்கிறது.
பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளதாக இந்திய ஒன்றிய அரசான பாஜகவும் அதன் கையாட்களான, ’கோடீ ஊடகங்களும்’ தெரிவிக்கின்றன.
ராணுவம் வெளியிடுகின்ற ஆள் இல்லாத ட்ரோன் காட்சிகள் தவிர வேறு எதையும் வெளியிடுவதற்கு ஊடகங்களில் அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, ஊடகங்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கும் அனுமதி இல்லை.
ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்பட்டுள்ள இந்தப் போரானது பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் உள்ளிட்ட ’மக்களுக்கான இந்தியாவின்’ நலனுக்காக நட்த்தப்பட்டது அல்ல! மாறாக நாட்டை சூறையாடிவரும் ’கார்ப்பரேட் நலனைக் காக்கும் இந்தியாவுக்காக’ நடத்தப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் விவசாயம் கார்ப்பரேட் வேளாண் வர்த்தகக் கழகங்களினால் அழிக்கப்படுகிறது., தொழிலாளர்களின் வாழ்க்கை கார்ப்பரேட் தொழிற்கொள்கைக்காக கொடூரமாக சுரண்டப் படுகிறது., சிறு குறு தொழில் முனைவர்களின் சுயசார்பு வேலைகள், பொருளாதாரம் கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கைக்காக அழிக்கப்படுகிறது, எந்த டிகிரி படித்தாலும், எந்த கல்லூரியில் படித்தாலும் வேலை கிடைக்காமல் படித்த இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி நிற்கிறது, கருத்துரிமை, எழுத்துரிமை, சுதந்திரம் கோரும் அறிவு ஜீவிகளின் வாழ்க்கையே உத்திரவாதம் இல்லாமல் போகிறது. மேற்கண்ட இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திற்கும், இந்தப் போருக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. ஆனால் அவர்கள் தான் போரின் விளைவுகளையும், பொருளாதார பாதிப்புகளையும் இனி சேர்த்து சுமக்க வேண்டும்.
ஆனாலும் பாக் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் என்பதையே முதன்மை பிரச்சனையாக நாட்டு மக்களின் மனதில் திணித்து, எல்லை கடந்து பறந்து சென்று சில கட்டடங்களை தகர்ப்பதையே சாதனையாக காட்டிக் கொள்வதன் மூலமாக சமீபகாலமாக சரிந்து வரும் தனது பிம்பத்தை மீட்டெடுத்துக்கொள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் பாசிச மோடி கும்பல்களுக்கு இது அவசியம் உதவக் கூடியதே. மக்களை கொன்றவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் கொல்லத் தூண்டியவர்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டும்.
போலி என்கவுன்டர்கள் என்பது உள்நாட்டுக்குள் காவல்துறையால் நடத்தப்படுவதாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது எல்லை கடந்தும் அண்டை நாடுகளுக்குள் சென்றும் கூட, முப்படைகளின் தாக்குதலாலும் கூட நடக்கும். மோடி 2.0 வின் பாகல்கோட் சர்ஜிகல்ஸ் ஸ்ட்ரைக் தாக்குதல் இதற்கு ஒரு உதாரணம்.
படிக்க:
♦ பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பொறுப்பு ஏற்காமல் போர்வெறியை த் தூண்டும் மோடி அரசு!
♦ மார்க்சிய – லெனினிய கொள்கையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி.
ஏற்கனவே கார்கில் போராகட்டும், மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலாகட்டும், காஷ்மீரில் அவ்வப்போது இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டங்களாகட்டும், அவை அனைத்தையும் பற்றி விவாதிப்பது, கருத்து சொல்வது ஆகியவை அனைத்தும் ’தேசத் துரோகம்’ என்று ஆளும் வர்க்க ஊடகங்களால் முத்திரை குத்தப்படுகிறது.
இந்தியாவின் இந்த தாக்குதலை மேல்நிலை வல்லரசான அமெரிக்கா, நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா, ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும். ஏனென்றால் இந்த நாடுகளில் உள்ள இராணுவ கார்ப்பரேட் கம்பெனிகள் குறிப்பாக அமெரிக்காவின் போயிங் மற்றும் மார்ட்டின் லாக்ஷீட், ஜெர்மனியின் டி.கே.எம்.எஸ் போன்றவை தனது லாபவெறிக்காக உலகம் முழுவதும் போர்கள் நடப்பதை ஆதரித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலையும் ஆதரித்துள்ளனர்.
இந்த இராணுவ கார்ப்பரேட்டுகளின் தயவில் ஆட்சி நடத்தும் அமெரிக்கா முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் உள்ள ஆட்சியாளர்கள் இத்தகைய போர்களை ஆதரிப்பதும், அதன் மூலம் ஆயுத வியாபாரம் பெருகும் என்று திட்டமிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” என்கிறார் வள்ளுவர். அவர் கூறிய குறள் வழி பார்க்கும் போது, போர் என்பதில் இரண்டு வகை உள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை விடுதலைகாக் நடத்தப்படும் நீதியான போர் மற்றும் நாட்டை சுரண்டும் ஆளும் வர்க்கத்தினால நடத்தப்படும் அநீதியான போர் என வகைப்படுத்த முடியும். அந்த அடிப்படையில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி எந்த கவலையும் படாத, அவர்களை போலி தேசபக்தியில் ஆழ்த்திவிட்டு, ஆளும் வர்க்கத்தினரின் நலனுக்காகவும், ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவும் நடத்தப்படும் இந்தப் போர் மிகவும் அநீதியானது. எனவே ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச பயங்கரவாதிகள் உருவாக்குகின்ற தேசபக்தி பஜனையில் பேதமின்றி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதை எதிர்த்து குரல் கொடுப்போம்.
இந்த நேரத்தில் போரை ஆதரிப்போம் என்று போலி தேசபக்தி யுடன் பேசுவதைக் காட்டிலும், தீவிரவாதம், பயங்கரவாதம் உருவாவதற்கு அடிப்படை என்ன என்பதை பற்றி ஆழமாக விவாதிக்க வேண்டும் என்பதையும், கடந்த பத்தாண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆண்டு வரும் பாசிச பாஜகவின் கொள்கைகள் தான் தீவிரவாதம், பயங்கரவாதம் பெருக காரணம் என்பதையும் இந்திய உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தோழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
சிறப்பான கட்டுரை. பாராட்டுக்கள்!
லாப வெறி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவம் தேசிய அளவிலும், சர்வதேசிய அளவிலும் நீடிக்கும் வரை – ஆன்மீகம் என்ற பெயரில் மதவெறி அதன் மூலம் அரசியல் அறுவடை மேற்கொள்ளும் பொறுக்கித்தனமான ஈனர்கள் உலா வரும் வரை, இத்தகைய தேவையற்ற போர்களையும், அதன் மூலம் மக்களை பதர்ஷ்டத்திற்குத் தள்ளுவதையும் ஆளும் வர்க்கம் தனது கொள்கைகளாகவே அறிவித்துக் கொண்டு செயல்படும். மார்க்சிய – லெனினிய அடிப்படையில் தேசிய சர்வதேச அளவில் ராணுவம் போலீஸ் என்ற ஒன்றே இல்லாதொழிக்கப்படும் காலம் உருவாகும் வரை இவைகள் தவிர்க்க முடியாத கொடுமை களாக நீடிக்கவே செய்யும். இதற்கான நிரந்தர தீர்வு உலகம் முழுமையும் இயங்கும் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில்தான் குவிந்து கிடைக்கின்றன.