புதுக்கோட்டை வடக்காடு சாதிய மோதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் தலைமையில் திருச்சி DIG அலுவலகத்தில் மனு!

மனுவில் உள்ள விபரம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடக்காடு கிராமத்தில் கடந்த 05.05.25 அன்று ஆதிதிராவிட மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து ஆதிக்க சாதியினர் கொலை வெறியாட்டம் நடத்தினர்.

அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் இயக்கங்களும் இந்த சாதிய வன்கொடுமையை கண்டித்து வருகின்ற சூழலில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் இணைந்து இந்த சாதி வெறியாட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதி திராவிட மக்களை சந்தித்து நடந்துவற்றை கேட்டறிந்து அனைத்தையும் பதிவுகள் செய்தோம்.

அதைத்தொடர்ந்து வடக்காடு கிராமத்திற்கு சென்று அங்கே இருக்கின்ற மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் தற்பொழுது மக்களின் மனநிலை என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவும். இந்த அரசிடம் என்ன கோரிக்கை வைக்கிறார்கள். இந்த சாதிய வன்கொடுமைக்கு எதிராக என்ன செய்ய வேண்டும். என்பது குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தோம்.

வடக்காடு கிராமத்திற்குள் நுழைந்தவுடன் மயான அமைதி நிலவியது. எங்கள் கண்ணில் பட்டது முதலில் முழுமையாக தீ க்கு இறையாக்கப்பட்ட குடிசை வீடு.
தங்களின் வாழ்வாதாரத்திற்காக சேர்த்து வைத்த அனைத்தும் சாம்பல் ஆகிக்கிடந்தது. அந்த குடிசையை கடந்து பக்கத்து வீட்டின் அருகில் முழுமையாக சிதைக்கப்பட்ட கார் இருந்தது. வீடுகளின் கதவு ஜன்னல்கள் கற்களால் வீசி உடைக்கப்பட்டு கிடந்தன. இருசக்கர வாகனமும் தீ க்கு இரையாகி எலும்புக்கூடுகளாய் கிடந்தது. வீதியின் ஓரங்களில் உருட்டு கட்டைகளும் சாராய பாட்டில்களும் அரளைக் கற்களும் சிதறி கிடந்தன. அனைத்தையும் காட்சிப்பதிவுகளாக சேகரித்துக் கொண்டோம்.
யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல அங்கே கூடியிருந்த மக்களிடம் பேசத் தொடங்கினோம்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்லாம் 15 வயது முதல் 25 வயதுக்குள்ளானவர்கள். தங்களுக்கு தெரிந்த வரையில் வந்தவர்கள் எவரும் நிதானத்தில் இல்லை. டாஸ்மாக் சாராய போதையும், சகஜமாக எந்த தங்கு தடையும் இன்றி கிடைத்து வரும் கஞ்சா போதையும் நிரம்பி வழிந்தபடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

உங்களுக்கெல்லாம் எதுக்குடா வீடு, உங்களுக்கெல்லாம் எதுக்குடா வண்டி, பற தே………. பசங்களா என்று கத்திக் கொண்டு காதால் கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளை வீசியதோடு சாராய பாட்டில்களையும் கண்ணில் பட்டவர்கள் மீது வீசி எறிந்தார்கள். என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் என்று கூட பாராமல் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். முதலில் 10 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்று கணக்கிடுவதற்குள் 20 ஆக மாறியது அடுத்த நிமிடத்தில் 50, 100 என்று 500க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் எங்கள் ஊர் முழுவதும்.. வீடுகளின் ஓட்டை உடைத்து கண்ணில் பட்ட அனைத்தையும் சூறையாடினார்கள். இப்படி நடந்த வன்முறை சம்பவங்களை நம்முடன் விவரிக்கும்போது அவர்கள் இன்னும் அதிர்ச்சையிலிருந்து மீண்டு வரவில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த வன்முறைக்கு அடித்தளமாக அமைந்தது என்ன என்பதை கேட்டறிந்தோம்….

ஆதிதிராவிடர் மக்களுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் ஆதிக்க சாதியினர் உரிமை கோரி தொடர்ந்து இது போன்ற பிரச்சினைகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட கலவரங்களை நடத்துவதும் என்பது வழக்கமாகவே இருந்தது எனவும் கூறுகிறார்கள்.. கோவில் நிலம் உரிமை பிரச்சினை சம்பந்தமாக ஆதிதிராவிடர் மக்கள் நீதிமன்றத்தை அணுகி அது தங்களுக்கு தான் உரிமை என்பதை வாதிட்டு அதில் வெற்றியும் பெற்று நீதிமன்றமும் அவர்களுக்கு சொந்தமான கோவில் நிலம் அதில் யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்று தீர்ப்பையும் பெற்றுள்ளார்கள்.

ஆனால் இந்த நீதிமன்ற தீர்ப்பை வடக்காடு காவல் நிலையம் காவல் அதிகாரிகள் துளியும் மதிக்காமல். ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே நடந்து கொள்ளும் விதத்தில் அந்த கோவிலை பூட்டி வைத்துக் கொண்டு.. அதைத் திறந்து விட்டு பயன்படுத்த தொடங்கினால் தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வரும் எனவே கோவிலில் வழிபட அனுமதி இல்லை என்று மறுத்துள்ளது. அதை நியாயப்படுத்துவதற்கு ஆதரவாக ஆதிக்க சாதியினர் தரப்பிலும் தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி உள்ளார்கள்.இதை பயன்படுத்திக் கொண்ட வடகாடு காவல் நிலையம் நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் பொழுது இரு தரப்பும் பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தை பேசியது.

இதனால் பெரும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருந்து வந்த ஆதிக்க சாதி சேர்ந்த இளைஞர்கள் எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் ஆதிதிராவிட இளைஞர்களிடம் வேண்டுமென்று சமூகத்தை குறித்து இழிவாக பேசுவதும் அதை கேட்க செல்லும் பொழுது சண்டையாக மாற்றி தாக்குதலில் ஈடுபடுவதும் நடந்து வந்துள்ளது. இந்த வன்முறை கலவரத்திற்கும் இது போன்ற நிகழ்வுகளே காரணமாக இருந்துள்ளது.

இந்த ஆதிக்க சாதி இளைஞர்களின் பின்னால் இருந்து சாதி வெறியூட்டும் நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கவும் அந்த மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கிறது என்பதையும் அந்த மக்கள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் பேசிய பொழுது எங்களிடம் முதலில் பேசியது ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞரின் இரண்டு தாய்மார்கள் தான்.

அவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்த பொழுது.. மேற்சொன்ன விபரங்களை சொல்லி முடித்துவிட்டு…

நாங்கள் கூலி வேலைக்கு சென்று தான் குடும்பத்தை நடத்துகிறோம். எங்கள் பசங்களையும் அப்படித்தான் படிக்க வைக்கிறோம், வளர்க்கிறோம். ஆனால் எங்கள் சமூகத்தை சேர்ந்த சில பணக்காரர்கள் சமூக சங்கத்தின் தலைவர்கள் சில முக்கிய நபர்கள் எங்களின் பிள்ளைகளை வேறு ஒரு திசையில் இழுத்து செல்கிறார்கள். நாங்களே எங்கள் பிள்ளைகளிடம் இதுவெல்லாம் வேண்டாம் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும் அதில் கவனம் செலுத்துங்கள் என்று பலமுறை கெஞ்சி உள்ளோம். ஆனால் எங்கள் பசங்க சும்மா இருந்தாலும் சிலர் எங்கள் பசங்களை மடைமாற்றி இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். எங்கள் பசங்களை உங்களால் முடிந்தால் மீட்டு கொடுங்கள் நாங்கள் மீண்டும் இது போன்ற நபர்களோடு பழகாமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்கிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கையும் வைத்தார்கள்.

கிராமத்தின் முக்கத்திலே காவல் நிலையம் இருந்தும் கூட இவ்வளவு பெரிய வன்முறையை தடுப்பதற்கு தங்களுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் ஒருதலை பட்சமாக அந்த காவல் நிலைய ஆய்வாளர் நடந்து உள்ளார் என்பதும் வெட்ட வெளிச்சமாகியது… இதை உறுதி செய்த திருச்சி காவல்துறை துணை தலைவர் அவர்களும் வடகாடு காவல் நிலைய ஆய்வாளர் தனபாலன் அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும் பெண்கள், வயதில் மூத்தோர் இப்படி பல தரப்பிடம் பல்வேறு விவரங்களை நாங்கள் கேட்டறிந்து சேகரித்து வைத்திருக்கிறோம். சுருக்கமாக சொல்வதென்றால் அந்த மக்கள்….

மற்றவர்களைப் போல எங்களையும் மரியாதையோடும் சுதந்திரமாகவும் வாழ வழி செய்ய வேண்டும்..

நாங்கள் பறையராக பிறந்தது எங்கள் தவறா?

அப்படி பறையராக பிறந்து விட்டால் நாங்கள் மனிதர்கள் இல்லையா?

நாங்கள் இழந்தவற்றைக்கெல்லாம் இழப்பீடுகளை கொடுத்து எங்கள் வாய்களை அடைத்து… அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் இது போன்ற கலவரங்கள் வன்முறைகள் எப்போது வருமோ என்று ஒவ்வொரு கணமும் நாங்கள் பயந்து கொண்டு வாழ விரும்பவில்லை…

ஆகவே, தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். எங்கள் ஊரின் முக்கத்தில் இருக்கும் அரசு மதுபான கடையை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக அகற்ற வேண்டும்.

சர்வ சாதாரணமாக புழங்கி வரும் கஞ்சாவை முடக்க வேண்டும்.

இந்த வன்முறைக் எல்லாம் அடிப்படையாக இருக்கின்ற எங்களுக்கு சொந்தமான எங்கள் கோவிலும் அதை சுற்றி இருக்கின்ற நிலத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நாங்களும் மற்றவர்களைப் போல கல்வி கற்போம் மற்றவர்களைப் போல நாகரிகமாகவும் மதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு வேலையில் சேர்ந்து செயல்படவும் எங்கள் வசதிகளை மேம்படுத்திக்கொள்ள எங்கள் வாழ்க்கை அடிப்படைத் தேவைகளை முன்னேற்றிக் கொள்ள எங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரம் இருக்கிறது அதை தடுப்பதற்கோ அதைக் கேள்வி கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

நாங்கள் தொடர்ந்து போராட்ட தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சரியான வழிகளை உருவாக்கி கொடுங்கள் எங்களோடு உறுதுணையாக இருங்கள் என்று இறுதியாக நம்மிடம் கோரிக்கை வைத்தார்கள்.

படிக்க:

♠  சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?  

♠  வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!

மேற்சொன்ன விபரங்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட சுருக்கமான பதிவுகளே.

மக்கள் சொன்ன விவரங்கள் அடிப்படையிலும் ஆய்வு செய்த ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்று (10.05.2025) சனிக்கிழமை காலை11.30 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டத்தின் செயலாளர் தோழர் கார்க்கி தலைமையில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் என பெரும் திரளாக சென்று திருச்சி மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர் (D I G) திரு.வருண்குமார் அவர்களை சந்தித்து மனு கொடுக்க சென்றோம்.

வேறொரு வேலை நிமித்தமாக D I G அவர்கள் வெளியே சென்றதன் காரணமாக அங்கே பணியில் இருந்த ஆய்வாளர் திருமதி லதாஅவர்களிடத்தில் மனுவை கொடுத்து போர்க்கால அடிப்படையில் இந்த மனுவில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

மனுவை ஏற்றுக் கொண்டு நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று தருகிறோம். திட்டமிட்டு சாதிய வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் மற்றும் இழப்பீடுகளையும் பெற்று தரவும், டாஸ்மாக் மதுபான கடை மற்றும் கஞ்சா புழக்கத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும். இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காத வண்ணம் இந்த வன்முறையின் பின்னணியில் இருக்கின்ற நபர்களையும் புலன் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

நிச்சயம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு வெளியில் காத்திருந்த ஊடகத்தினருக்கு பேட்டி அளித்து, செய்திகளை கொடுத்துவிட்டு சென்றோம்.

உழைக்கும் மக்களே !

சாதிய வன்கொடுமைகளை அமைப்பாய் நின்று எதிர்த்துப் போரிடுவோம்!

சாதியின் ஆணிவேரை அறுத்தெறிய எந்தவித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து செயல்படுவோம்!

வாருங்கள் அழைக்கிறது…மக்கள் அதிகாரம்

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு : 9445475157, 7200209689.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here