
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மனிதத் தன்மையற்ற இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள் எப்படி அங்கு ஊடுருவி வந்தனர் என்பது மிகப்பெரிய கேள்வி. காஷ்மீரத்தின் சிறப்பு சட்டமான 370- ஐ மோடி அரசு அடாவடியாக நீக்கிய பிறகு, அங்கு தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டு விட்டனர் என்றும், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றும் பாஜக அரசு ஏய்த்து வந்தது.
ஆனால் இன்று எல்லையில் இருந்து பல கிலோமீட்டர்களைக் கடந்து இந்தப் பகுதிக்கு வந்து, படுகொலைகளை நிகழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்கவும் முடியவில்லை. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, மோடி காஷ்மீருக்கு செல்லும் பயணத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். எனில் பொதுமக்களுக்கு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது?
தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பாதுகாப்புப் படைகள் இருந்துள்ளன. சம்பவத்தன்று அவர்கள் எங்கே சென்றார்கள்? அடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமைக் கடந்து தான் மலை மீதுள்ள இந்தப் பகுதிக்கு கொலைகாரர்கள் வந்துள்ளார்கள். இதிலிருந்து பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு இலட்சணம் எந்த வகையில் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
பாசிஸ்டுகளின் வாய்ச் சவடால்கள்!
இந்தப் பகல் நேர பச்சைப் படுகொலை நடந்த பிறகு, “இந்தக் கொடூரமான செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் விரிவடைடையும்” என்று மோடி முழங்கினார். தாக்குதல் நடைபெற்ற காஷ்மீர் பகுதிக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடியை எதைக்கொண்டு அடிப்பது?
அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “எங்களது பதில் தாக்குதல் கற்பனைக்கு எட்டாத வகையில் இருக்கும்” என்று சவடால் அடித்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்த சம்பவத்தை நடத்தியவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் இருந்து இந்திய மண்ணில் இது போன்ற சதி செய்தவர்களையும் நாங்கள் விட மாட்டோம்” என வீராப்பு பேசினார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இதற்குக் காரணம் பாதுகாப்பு குறைபாடுகள் அல்ல, மக்களுக்கு தேச பக்தி குறைந்துவிட்டதுதான் காரணம் என்று வெட்கமின்றி புளுகினார். காஷ்மீர் அரசு மீதும் சுற்றுலாப் பயணிகள் மீதும் பழி போடும் இந்த பாசிஸ்டுகள் தங்களது கையாலாகாத்தனத்தை மறைக்க முயல்கின்றனர்.
வீடுகளை இடிப்பதுதான் வீரமா?
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு நபர்களின் வீடுகள் மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகளாக சந்தேகப்பட்ட நபர்களின் வீடுகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெடிவைத்து தகர்த்துள்ளது பாசிச பாஜக அரசு. இதற்கு முன் உ.பி.யிலும் மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் புல்டோசர் வைத்து இஸ்லாமியர்களின் வீடுகளை தரைமட்டமாக்கி வந்தனர்.
உச்ச நீதிமன்றம் இதற்கு இருமுறை கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தது. “மனிதர்களின் வாழும் உரிமை மீதான தாக்குதல் இது” என்றும், அரசமைப்புக்கு எதிரான செயல் என்றும் கூறியுள்ள நிலையில், அதை மயிரளவும் மதிக்காமல் மீண்டும் வீடுகளை இடிப்பதை காஷ்மீரிலும் அரங்கேற்றியுள்ளது இந்த அராஜக கும்பல்.
இங்கு அனைத்து வீடுகளுமே வெடி மருந்துகளை பயன்படுத்தி தகர்க்கப்பட்டன. இதனால் பக்கத்து வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டு, மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் காவல்துறையோ, இந்திய ராணுவமோ அல்லது அரசு நிர்வாகமோ வீடுகள் இடிப்பை பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. யார் இடித்தார்கள் என்பதையும் வெளிப்படுத்தவில்லை.
ஆளும் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் சில கட்சிகள் கூட்டாக சேர்ந்து கடுமையான கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து, இப்போது இடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க வக்கற்ற ஒன்றிய அரசு, சந்தேகப்படும் நபர்களின் பெற்றோரும், மனைவி மற்றும் பிள்ளைகளும் வாழக்கூடிய வீடுகளை- அவர்களது வாழ்நாள் கனவை- இடித்து, அவர்களை நிர்கதியாக்கி தனது வீரத்தை காட்டிக் கொள்வது கேவலம் இல்லையா?
அப்பாவி மக்களை பழி வாங்குவதுதான் பதிலடியாம்!
சம்பவம் நடந்தவுடன் இந்தியாவில் இருக்கும் பாக். தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்றும், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்தது ஒன்றிய அரசு. மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளது. இங்கு இந்தியரை திருமணம் செய்து கொண்டு வந்திருப்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்கள் என்று பலரும் இந்த அறிவிப்பினால் தவித்துப் போய் உள்ளனர்.
யாரோ ஒரு சில முகம் தெரியாத தீவிரவாதிகளின் செயலுக்கு, இப்படி அப்பாவி மக்களை பழி வாங்குவது அறிவுள்ள செயலாக இருக்க முடியுமா? அடுத்து 1960 முதலே நடைமுறையில் உள்ள சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. இது நடைமுறை சாத்தியமற்ற செயல் என்றும் எனவே இது வெற்று வாய்ச்சவடால் தான் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் நீரைத் தடுத்து வைக்கும் கட்டுமானம் இன்னும் இங்கு உருவாக்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை. அப்படியே இவர்கள் நீரை அங்கு செல்லாமல் தடுத்தாலும் இதனால் பாதிக்கப்படப் போவதும் அங்குள்ள அப்பாவி மக்கள்தானே. பாகிஸ்தானின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்படுவதாகவும், youtube சேனல்கள் முடக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளதும் நகைப்புக்குரியதாக உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் போதும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு இவை அவசியம் என்று பேசிய அனைவரும் இப்போது உண்மையிலேயே தீவிரவாத தாக்குதல் நடக்கும் போது, ஏதோ புல்புடுங்கும் வேலையை செய்து கொண்டிருப்பது நகைப்பானதுதானே!
போர்வெறியை திட்டமிட்டு தூண்டும் அரசும், ஊடகங்களும்!
மோடி, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி எப்போது, எங்கு, எப்படி தாக்குதல் நடத்துவது என்பதைப் பாதுகாப்பு படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் தனித்தனியாக மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அரசு விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் தலையீடு இருப்பதை இது அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. போருக்கான தயாரிப்புகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன. போர் மூண்டால், நாட்டின் பொருளாதாரமும், பெருவாரியான உழைக்கும் மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதே நிதர்சன உண்மை. எனவே போர் மூளும் சூழலை எதிர்க்க வேண்டியது ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமையாக உள்ளது.
இது கார்ப்பரேட் – காவிப் பாசிச அரசுதான்!
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது புல்வாமா தாக்குதலை திட்டமிட்டே அனுமதித்ததைப் போல, இப்போதும் பீகார் தேர்தலை மனதிற்கொண்டு இந்த தாக்குதல் அனுமதிக்கப்பட்டதா எனும் சந்தேகம் எழுகிறது. மேலும் வக்ஃப் சட்டத் திருத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டு ஓடியுள்ளது ஒன்றிய அரசு. இந்தச் சூழலில் தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது என்பதும் ஐயத்தை எழுப்புகிறது.
படிக்க:
♠ காசா முதல் காஷ்மீர் வரை ஊடகவியலாளர்களின் செயல்பாடு?
♠ காஷ்மீர்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி! ஆனால் அதிகாரம் ஆளுநரிடம்!
இந்தச் சம்பவம் முஸ்லிம்கள் மற்றும் பாகிஸ்தான் மீது பழி போட்டு போலி தேசபக்தியை கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பாஜகவின் வழமையான சதியாகவும் இருக்கக் கூடும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை எந்த கட்டுமானத்துக்கும் அனுமதி இல்லை என்ற நிலையில், வெறும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சூரிய மின்சாரம் அமைக்க 76 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விதிகளைத் திருத்தி முறைகேடாக அதானிக்கு அனுமதி அளித்துள்ளது ஒன்றிய மோடி அரசு.
கார்ப்பரேட் நலனில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது இந்தக் காவிப் பாசிச அரசு என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டின் பாதுகாப்பை விடவும் கார்ப்பரேட் நலனே முக்கியம் எனக் கருதும் இந்த கார்ப்பரேட் – காவிப் பாசிச கும்பலை வீழ்த்தி, ஜனநாயகக் கூட்டரசை அமைப்பது மட்டுமே இதற்கு உரிய தீர்வாக இருக்க முடியும்.
- குரு






