மிழகத்தில் உள்ள காவி பாசிச கும்பல்கள் எவ்வளவு கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தையும் செய்வார்கள் என்பதையும், அதைப்பற்றி துளிகூட அலட்டிக் கொள்ளாமல் திசை திருப்புவார்கள் என்பதையும், தமது ஆத்மார்த்த குருக்களான மோடி அமித்ஷாக்களுக்கு தாம் பொருத்தமானவர்தான் என்பதை நிரூபிப்பார்கள் என்பதையும் தமிழகம் அறிந்தே உள்ளது. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதையே தற்போதைய நிகழ்ச்சிகள் அம்பலப்படுத்துகின்றன.

கொடிசியா கூட்டத்தின் மூலம் ஆப்பை அசைத்த குரங்கு!

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கோவையின் கொடிசியா வளாகத்தில் தொழில் முனைவோர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியதையும், அதில் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து கருத்து தெரிவித்ததையும், அக்கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அதன்பின்னர் அவர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அந்த வீடியோவும் சங்கிகளாலேயே வெளியிடப்பட்டு வைரலாக்கப்பட்டதையும் தமிழகம் அறியும்.

இந்த விவகாரத்தில் ஆப்பை அசைத்துப் பார்த்து தன் வாலை நசுக்கி கொண்ட குரங்காகவே நிர்மலா சீதாராமனும் வானதியும்  கூக்குரல் இடுகின்றனர்.

படிக்க:

♦ அன்னபூர்ணா நிறுவன உரிமையாளரை மன்னிப்பு கேட்க செய்த  நிர்மலா சீதாராமனின் பார்ப்பனத் திமிர்!

♦ வங்கதேசத்தில் இந்திய முதலீடுகள் பாதுகாப்பு பற்றி நிர்மலா சீதாராமன் அலறுவது ஏன்?

அன்னபூர்னா சீனிவாசன் அவர்கள் தமது கடைக்கு வரும் வாடிக்கையாளரான வானதி சீனிவாசனின் உணவு முறை குறித்து தனக்கே உரிய கொங்கு நடையில் ஜிஎஸ்டி யோடு இணைத்து விளக்கினார். இதையே, தான் ஒரு பெண் என்றும் பாராமல் தனது உணவு பற்றி அவமதிப்பாக பேசியதாக வானதி ஒரு திசைதிருப்பலை செய்து பார்த்தார். அதாவது ஜிஎஸ்டிலிருந்து ஆணாதிக்கத்திற்கு தாவினார்.

பெண்கள் என்பதாலேயே திருமதி கனிமொழியும், செல்வி ஜோதி மணியும் கூட இது போன்ற அவமதிப்புகளை எதிர் கொண்டே வந்துள்ளதாகவும் கூட்டணி கட்ட முயற்சித்து ஒப்பாரியும் வைத்தார். பெண் என்பதால் தான் எத்தகைய தனி சலுகையும் கோரவில்லை என்றும், சமூகத்தின் பொதுப் புத்தியில் இருக்கும் ஒதுக்கல்களையே தான் குறிப்பிடுவதாகவும் செய்தி வெளியிட்டார். இது எதுவும் கோவையிலோ தமிழகத்திலோ பெரிதாக எடுபடாமல் போகவே  தினமணியில் – தமிழக முதல்வரை வம்பிழுத்து பேசிய தனது செய்தியை போட வைத்தும் உள்ளார்.

வானதியின் திடீர் ஊர் பாசம்!

கோவையின் தொழில் முனைவோர் கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சரை பார்த்து ஜி எஸ் டி க்கு எதிராக நேருக்கு நேராக கேள்வி கேட்டவர்களுக்கு உரிய பதில் தர துப்பில்லை. ஆனால், “கோவையின் தொழில் வளர்ச்சிக்கு முதல்வர் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை” என மாநில அரசை வம்புக்கு இழுக்கிறார். அதாவது இருக்கும் பிரச்சனையை மடைமாற்ற புதிதாக ஒரு பிரச்சனையை இழுத்து விடுவது என்ற கடைந்தெடுத்த கீழ்த்தரமான தந்திரத்தையே இப்போதும் கையில் எடுத்துள்ளார். அதாவது மின் கட்டண உயர்வை முன்னிறுத்தி GST கேள்விகளை மடை மாற்றுகிறார். அதையும் சற்று பரிசீலிப்போம்.

மின்கட்டண உயர்வுக்கு மூலகாரணம் யார்?

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது என்பது உண்மைதான். மோடியின் நண்பர் அதானி நிலக்கரி இறக்குமதியில் விண்ணை தொடும் அளவுக்கு ஊழல்களை செய்து, அனல் மின் நிலையத்தின் மூலப்பொருள் செலவை பல மடங்கு உயர்த்தி விட்டுள்ளார். அதாவது உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையை பல மடங்கு உயர்த்தி விடுகிறார் என்பது உலகறிந்த ரகசியம்.

ஒட்டுமொத்தமாக மின்சாரத் துறையை தூக்கி அதானியிடம் கொடுக்க வேண்டும் என சபதம் எடுத்து செயல்படுகின்றனர் மோடியும் அமித் ஷாவும்.

இதற்கு ஏற்பவே நன்கு திட்டமிட்டு, தமிழக மின்சார வாரியத்தை கடனில் மூழ்கடித்து, அதை அதானிக்கு தாரைவாக்க நெட்டித் தள்ளுகிறது ஒன்றிய அரசு. அதானியும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ராமநாதபுரத்தில் அமைத்து தனது தமிழகத்தின் மீதான தனது பிடியை இறுக்கியும் வருகிறார்.

ஒன்றிய அரசானது  மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிட்டு, நெருக்கடி தந்து, மின்சார வாரியத்தை நாசப்படுத்தும் கேடுகெட்ட வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. தமது உத்தரவால் மாநிலங்களில் அதிகரித்து வரும் மின் கட்டண உயர்வை பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பில், கூசாமல் மாநில முதல்வர்களை குறிவைத்து அவதூறுகளை அள்ளி விடுகிறார் வானதி சீனிவாசன்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலையை யூனிட் ஒன்றுக்கு 12, 14 , 16 ரூபாய் என உயர்த்தி வாங்க வைத்து, விலையை கூட்டி மக்களை கொள்ளை இட தாராள அனுமதியை வழங்குகிறது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்த ஒழுங்குமுறை ஆணையத்தை மாநில அரசால் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ, நெறிப்படுத்தவோ எத்தகைய அதிகாரமும் ஒன்றிய அரசால் தரப்படவில்லை.

அதாவது, கொள்முதல் விலையை உயர்த்துவதை ஒன்றிய அரசு திட்டமிட்டு செய்து விடுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் தான் வழங்கும் மின்சாரத்திற்கான விற்பனை விலையை தவிர்க்க முடியாமல் அதிகரித்தால்,  உடனே கோவையில் உள்ள இந்த வானரங்கள் கூச்சலிடுகின்றன.

அதுவும், ஒன்றிய நிதியமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தொழிலதிபர்கள் எதுவும் முன்வைக்காத போதே, அது தான் பிரச்சனை; அதனால்தான் 30 சதவீத சிறு குரு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றெல்லாம் அளந்து விடுகிறார் வானதி சீனிவாசன். இவரின் இந்த அறிவிப்பை தினமணியைத் தவிர வேற யாரும் ஒரு பொருட்டாக மதிக்க தயாராக இல்லை.

ஒற்றை விளம்பரம் கூட சங்கிகளை கதறவிடுகிறது!

அன்னபூர்ணா உணவகம் கிரீம்பன் குறித்த தமது விளம்பரத்தை வெளியிட்டது, தற்செயலாகவோ அல்லது நிம்மியின் ‘ஊழ்வினையாலோ‘ பொருத்தமான நேரத்தில் வெளிவந்துள்ள இது  வைரலானது. Stand with annapoorna என்ற ஹேஸ்டேக் மூலம் பாசிச திமிருக்கு எதிராக தமிழகம் மிக கடுமையாக எதிர்வினையாற்றியது. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக, பாசிச பாஜக எதிராக, தனது கண்டனத்தை பல விதங்களில் அழுத்தமாக பதிவு செய்தது.

அன்னபூர்ணாவின் விளம்பரத்தில் பிரிக்கப்படும் பன்னில் இருந்து, பிதுக்கப்பட்டு வரும் கிரீம் ஆனது, தமது பார்ப்பன கொழுப்பை உருவகப்படுத்துவதாக கருதி அலறுகிறது அவாள் கூட்டம்.

தெரிந்தோ தெரியாமலோ சங்கிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் தமிழகத்தில் ஒருபுறம் தாம் அம்பலப்பட்டு போனதோடு, மறுபுறம் தம்மை கேள்வி கேட்ட அண்ணாபூர்ணா நிறுவனத்தின் உரிமையாளரை மேலும் பிரபலப்படுத்தியும் விட்டுள்ளனர். எனவேதான் அக்கடையின் கிரீம்பன் விளம்பரமும் கூட மிகவும் வைரல் ஆகிறது. அன்னபூர்ணாவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஒரு பேக்கரியின் கிரீம் பன் விளம்பரத்துக்கே அலரும் நிலைக்கு அவாள்களை தள்ளிவிட்டது தமிழகம் என்பது ‘வருத்தத்திற்கு’ உரிய உண்மைதான். தமது விளம்பரம் ட்ரெண்டாகியதை கண்டு மீண்டும் அச்சமடைந்தோ,  அல்லது, சங்கிகளின் மிரட்டலுக்கு பணிந்தோ, தமது விளம்பரத்தை நீக்கிவிட்டு, புதிதாக மற்றொரு கிரீம் பன் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது அன்னபூர்ணா உணவகம்.

மேலும், கொடிசியா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தமது  கருத்தை கேட்டதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வானதி சீனிவாசனுக்கும் நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த பிரச்சனையை இதோடு முடித்துவிட்டு, அடுத்த பணியை தொடர விரும்புகிறோம் எனவும் அறிவித்துள்ளது அன்னபூர்ணா உணவக நிர்வாகம். நடந்துள்ளவற்றை நாம் எப்படி மதிப்பிடுவது? சங்கிகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாகத்தான்.

சொந்த செலவில் சூனியம்!

சங்கிகள் தாமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி, கருத்து தீர்ப்பு நடத்தி, தமது பின்பக்கத்தை சுட்டுக் கொண்டு, இப்போது கூக்குரல் இடுகிறார்கள். நிர்மலா சீதாராமனுக்காக பலமாக முட்டும் கொடுக்கிறார்கள்.

பாஜக தமது ஐடி வின் மூலம் “ஒரே மாவில் வடை, ஒரே மாவில் இட்லி, ஒரே மாவில் தோசை, ஒரே மாவில் பொடி தோசை. ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை “ – என கலாய்த்து, எடுபடுமா என்று களம் இறக்கியும் பார்க்கின்றனர். இத்தகைய கேள்விகள் அன்னபூர்ணா சீனிவாசனை தான் சுட்டுகிறதே தவிர, காவி பாசிசத்தின், பார்ப்பன கொழுப்பின் கொட்டத்தை அடக்க களத்தில் நிற்பவர்களை அல்ல.

முட்டுக் கொடுக்க வந்த வானதியோ, “மாநிலத்தில் தேர்தல் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், ஒன்றிய அமைச்சர் வந்து தொழிலதிபர்களை சிறுகுரு தொழில் நிறுவன முதலாளிகளை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களின் நலனில் அக்கறை கொண்டு தான் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்“ என முட்டுக் கொடுக்கிறார்.

அதிலும், தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதில் அளித்ததாகவும், இந்நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார் வானதி.

கொண்டையை மறைக்க மறந்த வானதி!

தொழில் முனைவோரின் ஆலோசனைகளை கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு பதில் அளித்தது உண்மை என்றால், அன்னபூர்ணா சீனிவாசனின் ஜிஎஸ்டி குறித்த கோரிக்கைக்கு என்ன பதில் சொன்னார்? அதாவது தான் முட்டுக்கொடுத்தபடி “பொறுமையாகவும், பொருத்தமாகவும், சரியாகவும்” தான் பதிலளித்துள்ளார் என்று அந்த பதிலை  வானதியால் விளக்க முடியுமா?

ஒருகுடும்பத்திற்கான ஒரு பில்லில் பல வகையான ஜிஎஸ்டிகளை போடுவதால் கணினியே தடுமாறுவதாக சொன்னாரே, அதை சரி செய்வதாக ஏற்றுக் கொண்டு உள்ளாரா நிதியமைச்சர்?  எப்படி  சரி செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன்? அல்லது, ஜிஎஸ்டி வரி விதிப்பு இப்படித்தான் இருக்கும். நீங்கள் பில் போடும் கணினியை மாற்றிக் கொள்ளுங்கள் – என்றாவது சொன்னாரா? இது குறித்து தெளிவாக அறிவிப்பு விட தயாரா திருமதி. வானதி அவர்களே?

ஒத்தக் கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முனைவோருக்காக எதுவும் செய்யாதது குறித்து வெட்கப்பட வேண்டுமாம். அதாவது கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காதாம்.

சங்கிகள் எப்பேர்ப்பட்ட திசை திருப்பல்காரர்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்வோம். அவர்களின் திசை திருப்பல்களை, அவதூறுகளை, பொதுவெளியில் வைத்து புரட்டியும் எடுப்போம். பாசிச திமிருக்கு முடிவும் கட்டுவோம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here