ங்கதேசத்தின் சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு ராணுவம் மற்றும் போராடுகின்ற மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளடக்கிய புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் கட்டுப்பாடற்ற வகையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்திய ஆளும் வர்க்கங்கள் கவலையுடன் அவதானித்து வருகின்றது என்ற போதிலும், மக்களால் தூக்கி எறியப்பட்ட வங்கதேசத்தின் முன்னாள் அதிபரான சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவிற்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமின்றி, அங்கு புதிதாக பதவியேற்றுள்ள முகம்மது யூனஸ் என்பவரின் ஆட்சியையும் ஆதரித்து வருகிறது.

இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சரான திருமதி நிர்மலா சீதாராமன் வங்கதேசத்தில் உள்ள முதலீடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவை பாதுகாப்பாகவே இருக்கின்றன அது பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று நேற்றைய தினம் அறிவித்தார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று முன்வைத்தால் அதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வங்கதேசத்தில் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?

2009 முதல் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை ஆண்டு வருகிறார் என்பதும், அவரது ஆட்சியில் இந்தியாவிற்கான ஏற்றுமதியும் இந்தியாவிலிருந்து இறக்குமதியும் அதிகரித்துள்ளது என்பதற்கான காரணங்களும், அங்குள்ள முதலீடுகள் பற்றிய ஆளும் வர்க்கத்தின் அக்கறையும் நாம் கவனிக்கத்தக்கது.

2011-12 ஆண்டு காலத்தில் 498.42 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த பங்களாதேஷின் ஏற்றுமதி 2021-22 காலகட்டத்தில் 1990 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. அதே சமயத்தில் 2011-12 ஆண்டு காலத்தில் 4743.30 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 2021-22 ஆண்டு காலத்தில் 13,690 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இந்தியாவிலிருந்து வங்க தேசத்திற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் இரண்டு வகைப்பட்டவை. முதலாவதாக காய்கறிகள், காபி, தேனீர், மசாலாப் பொருட்கள், சர்க்கரை, தின்பண்டங்கள் போன்றவை ஒரு ரகம். இரண்டாவதாக பெட்ரோலிய எண்ணெய், இரசாயனங்கள், பருத்தி, இரும்பு, மற்றும் எஃகு, வாகனங்கள்,மின்னணுவியல், வாகன உதிரிப் பாகங்கள், ஆகியவை அடங்கும். ஆசிய நாடுகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக வங்க தேசம் உள்ளது.

இந்திய தேசங்கடந்த தரகு முதலாளிகளான ரிலையன்ஸ் அம்பானி மற்றும் அதானி ஆகியோரை உள்ளடக்கிய 250-க்கும் மேற்பட்ட வணிகக் குழுக்கள் வங்கதேசத்தில் தனது முதலீடுகளை போட்டுள்ளன. குறிப்பாக மின்சாரம், எரிவாயு, ஜவுளி உற்பத்தி, மருந்து உற்பத்தி, மற்றும் வாகனங்கள் தயாரிப்பது, நுகர்வு பொருட்கள் தயாரிப்பது, தொலை தொடர்பு, இரும்பு ஆலைகள், பிளாஸ்டி உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகள் மூலதனத்தை போட்டுள்ளனர். வங்கதேசத்தில் மூலதனமிட்டுள்ள 29 நாடுகளின் முதலாளிகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க:

♦ வங்கதேசம் மாணவர்கள் எழுச்சி: துரோகிகள் தப்பி ஓடுகிறார்கள்!

♦ மாணவர்கள் போராட்டத்தால் பற்றி எரியும் வங்காள தேசம் !

2008 ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத நெருக்கடிக்கு பிறகு இந்திய தரகு முதலாளிகள் தனது மூலதனத்தை வெளிநாடுகளில் குவித்து வருகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் இவ்வாறு தேசங்கடந்து தனது மூலதனத்தை போடும் தேசங் கடந்த தரகு முதலாளிகளின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜகவை முன்னிலைப்படுத்துகின்ற கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இந்திய வகைப்பட்ட பாசிசம் இந்திய மக்களுக்கு எதிராக தாக்குதலை தொடுத்துக் கொண்டுள்ளது.

இந்த தேசங்கடந்த தரகு முதலாளிகள் பிரிவு இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கையில் ஆட்டோ மொபைல் துறை, எண்ணெய் எரிவாயு துறை, தொலைத் தொடர்பு துறை, மின்சார உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து உள்ளடங்கிய கட்டுமான தொழில், இரும்பு, சிமெண்ட் ஆலைகள், வங்கி காப்பீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்பதை ஈழ விடுதலைப் போராட்டம் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் முற்றுப்பெற்ற போது அம்பலப்படுத்தி இந்திய மேலாதிக்கத்திற்கு பலியான ஈழம் என்றும், ஈழத்தின் அழிவில் இந்திய தரகு முதலாளிகளின் நலன் முக்கியத்துவமுடையது என்பதை பரப்புரை செய்தோம்.

அதுபோலவே இன்று ஷேக் ஹசீனாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு வங்க தேசத்தில் இந்திய தரகு முதலாளிகளில் முன்னேறிய பிரிவினரான அம்பானி, அதானி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள், டாடாவின் மோட்டார் வாகன உற்பத்தி, ஹீரோ மோட்டார் உற்பத்தி ஆகியவையும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. இது மட்டுமின்றி விஐபி, இமாமி, மாரிகோ, டாபர், கோத்ரேஜ், பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், பிடிலைட் போன்ற நிறுவனங்களும் வங்க தேசத்தில் முதலீடு செய்துள்ளன.

அதானி பவர் குழுமத்தினால் 1600 மெகாவாட் மின்சாரம் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வங்கதேசத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவின் எல்லைப் பிரதேசமான சிலிகுரியிலிருந்து வங்கதேசத்தின் பர்பதிபுர் வரை அதிவேக டீசல் குழாய் பதிக்கப்பட்டு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

நூமலிகார் ரிபைனரி லிமிடெட் என்ற இந்திய பொதுத்துறை நிறுவனத்துடன் பங்களாதேஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இடையே டீசல் விற்பனைக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதுபோல பெட்ரோ பங்களா எல்என்ஜி நிறுவனத்தின் பெட்ரோல் நிலையங்களை பெட்ரோலட் எல்என்ஜி என்ற இந்திய பொதுத் துறை நிறுவனம் கட்டுப்படுத்துகிறது.

மேற்கண்ட விவரங்கள் மட்டுமின்றி இன்னமும் பல்வேறு துறைகளில் இந்திய தேசங்கடந்த தரகு முதலாளிகள், தரகு முதலாளிகள், இந்திய பொதுத்துறைகள் வங்கதேசத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதைத்தான் நிர்மலா சீதாராமன்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள், போகிற போக்கில் தமிழக முதலீடுகளும் வங்கத்தில் பாதுகாப்பாக உள்ளது என்று மொழிந்து உள்ளதன் மூலம் பிற தரகு முதலாளிகளுக்கும் நம்பிக்கை அளிக்கின்றார் என்பதுதான் நாம் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here