ரலாறுகாணாத மழைப்பொழிவை தந்து இன்றுவரை வடியாமல் பல பகுதி மக்களின் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டது மிக்ஜாம் புயல். ஆனால் வெள்ள சேதத்திற்கான முழு பொறுப்பையும் பழியையும் புயலின் மீது மட்டும் போட்டுவிட முடியாது.

ஒரு நகரத்தை கட்டமைக்கும்போதே அதன் புவியியல் அம்சங்களை மதித்து கணக்கில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே அரசால் இதுவரை செய்யப்படாததே  இந்த பேரழிவுக்கு மூல காரணம். இது பற்றி பார்ப்போம்.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் மழைநீர் ஓடும். பாலாறு, அடையாறு, கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆறுகளுக்கும் இது பொருந்தும். மேக வெடிப்பைப்போல் மழை இடைவிடாமல் கொட்டியுள்ளது. அந்த தண்ணீர் வங்காள விரிகுடாவில் கலக்க கிழக்கு நோக்கி பாய்ந்தாக வேண்டும். ஆனால் நாம்தான் தெற்கு வடக்காக சுவர் எழுப்பி தடுத்துள்ளோமே.

வண்டலூரிலிருந்து மீஞ்சூருக்கு செல்லும் பூந்தமல்லி பைபாஸ், பெருங்களத்தூரிலிருந்து புழல் செல்லும் மதுரவாயல் பைபாஸ் ஆகியவை தெற்கு வடக்காக சுவர்போல் வெள்ளம் வடியாமல் மறித்து நிற்கிறது. இந்த புறவழிச்சாலையில் எங்கே ஆறுகள், குறுக்கு சாலைகள் உள்ளனவே அந்த வழியில் மட்டுமே வெள்ளம் சீறிப்பாய்ந்துள்ளது.

ஆற்றோரங்களில் நாம் பத்துக்கு பத்தடி வீடு கட்டினாலே அது ஆக்கிரமிப்பு! புல்டோசர்கள் தரைமட்டமாக்கி கடமையை செய்யும். ஆனால் பல ஏக்கரை வளைத்து நிற்கும் கல்வி வள்ளல்களின் கட்டுமானங்களை  அரசு ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

இதற்கு ஓரு உதாரணம்தான் அனகாபுத்தூரில் அடையாரின் வலதுபுறத்தில் குவியல்களாக எஞ்சியிருக்கும் வீடுகளின் இடிபாடுகள். இடது புறத்தில், போரூர் புறவழிச்சாலையை ஒட்டி ஆற்றின் கரையில் வேலி போட்டு  எழுப்பப்பட்டிருக்கும் மாதா கலை அறிவியல், பொறியியல் கல்லூரி வளாகம். சீறிப்பாய்ந்த வெள்ளத்தின் மூலம் தனது எல்லையை காட்டி சென்றுள்ளது அடையாறு.

ஆக்கிரமிப்பு என இடிக்கப்பட்ட அனகாபுதூர் ஆற்றங்கரை பகுதி

”ஆறாக ஓடிவரும் நான் இங்குதான்  இளைப்பாறுவேன். அதை ஏரி என்பீர்கள். இதோ எனது இடம்”! என வெள்ளம் பறைசாற்றுகிறது. மதுரவாயலில் ஏரிக்கரை என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது. இப்படி பல ஏரிகள் தூர்க்கப்பட்டு வசிப்பிடங்களாகி விட்டன. முழுமையாக ஆக்கிரமிக்கப்படாதவற்றில் குடியிருப்புவாசிகளே ஏரிகரையை உடைப்பதன் மூலம் தனது வீடு மூழ்குவதை தடுக்கலாம் என செயல்படுவதும் தொடர்கிறது.

வெள்ளம் வடிவதில் சென்னைக்கு மேற்கில் மட்டுமா இத்தகைய குறுக்கீடுகள்? இல்லை. கடற்கரை வரை தொடர்கிறது. நீண்ட பரப்பில் வெள்ளத்தை உள்வாங்கி சீராக வடிய வைத்துவந்த இயற்கையின் கொடையான சதுப்புநிலம் கூட IT துறையினருக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தெற்கு வடக்காக போடப்பட்டுள்ள சாலைகளும், அதன் நடுவில் உள்ள தடுப்பும் மழைநீரை கிழக்கி நோக்கி போகவிடாமல் மறிக்கின்றது. எங்கே வழி உள்ளதோ அதை நோக்கி திசைமாறி பயணித்து, தேங்கி சுற்றிலும் உள்ள வீடுகளை மூழ்கடிக்கிறது.

பல்லாவரத்திலிருந்து கிழக்கு நோக்கி திருவான்மியூருக்கு செல்லும் ரேடியல்சாலை இப்படித்தான் கழுத்தளவு நீரால் சூழப்பட்டுள்ளது. காமாட்சி மருத்துவமனையிலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையிலும் சதுப்பு நிலத்தை பிரிக்கும் வகையில் நீள்கிறது காற்றாலை நிறுவனத்தின் காம்பவுண்டு சுவர். அதை அடுத்து பள்ளிக்கரணை சதுப்புநில பூங்காவின் சுவர் ஆரம்பமாகிறது. பின்னர் எப்படி வெள்ளம் விரைந்து வடியும்?

வேளச்சேரி to காமாட்சி மருத்துவமனை சாலை

எண்ணூரிலுள்ள கொசஸ்தலையாற்றின் கழிமுகம் கூட அதானியால் விழுங்கப்பட உள்ளது. அதானி போர்ட்டுக்காக தெற்கு வடக்காக எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்ட தடுப்பு சுவர் முளைத்து காட்டுப்பள்ளியில் வெள்ளத்தை மறிக்கிறது.

இப்பகுதியினூடாக வடக்கு தெற்காக செல்லும் பத்தடி அகலமுள்ள பக்கிங்காம் கால்வாயா பெரு வெள்ளத்தை கடலுக்கு கொண்டு சேர்க்கும்?

இது, கட்டுமானங்களை முறைப்படுத்த தவறிய அரசின் குற்றம். ஆக்கிரமித்த ரியல் எஸ்டேட் கிரிமினல்கள், கார்ப்பரேட்டுகள்தான் குற்றவாளிகள். இயற்கை கற்பிக்கிறது. அரசு பட்டாவது திருந்துகிறதா? நாசத்தை சுமக்கும் நாமே  ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் ”கவனித்து” திருத்துவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here