நான் கடவுளின் அவதாரம். நான் கண்ணனைப் போன்றவன், நீங்கள் கோபியரைப் போன்றவர்கள். உங்கள் உள்ளத்தை எனக்கு ஒப்படைத்திருக்கிறீர்கள். உடலையும் ஒப்படைத்தால், உங்கள் பக்தி முழுமைப்படும் என்று கூறி வந்த குர்மீத் ராம்ரகீம் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சீடர்களைப் பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.

குர்மீத் ராம் ரகீம் சிங், அரியானா மாநிலம், சிர்சா நகரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நகரம் போல விரிந்து கிடக்கும் தேரா சச்சா சவுதாவின் தலைவர். தேராக்களை ஒரு வகையான ஆதீனங்கள் என்று சொல்லலாம். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறிதும் பெரிதுமாக சில ஆயிரம் தேராக்கள் உள்ளன.

ஜாட் சாதியினரால் ஆதிக்கம் செய்யப்படும் அதிகாரபூர்வ சீக்கிய மதத்தின் மீது வெறுப்பும் அதிருப்தியும் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதிகள், தமக்கென உருவாக்கிக்கொண்ட தனித்தனி நிறுவனங்களாகவும், சூஃபி வழிபாட்டு முறையும் சீக்கிய நம்பிக்கையும் இணைந்த வழிபாட்டுப் பிரிவுகளாகவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் மதமாகவும் உருவாகியிருப்பவை இந்த தேராக்கள். கத்தோலிக்க, புரோட்டஸ்டென்ட் மதப்பிரிவுகளுக்கு வெளியே, பாஸ்டர்கள் எனப்படுவோர் சுயேச்சையாக நடத்தும் கிறித்தவ சபைகளைப் போன்றவை இவை.

வளமான விளைநிலங்களையும் சொத்துக்களையும் கொண்டவையாக வளர்ந்திருக்கும் இந்த தேராக்கள் மத நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையையும் பெற்றிருக்கின்றன. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், கட்டைப்பஞ்சாயத்து, நுகர்பொருள் வியாபாரம் ஆகியவை முதல் அரசாங்க காண்டிராக்டு, வேலைநியமனம், டிரான்ஸ்ஃபர் என்று காரியங்களையும் முடித்துத் தரும் தரகுவேலைகள் வரையிலான அனைத்தையும் செய்து கொடுத்து இந்த தேராக்களின் ஆன்மீகத் தலைவராகவும் இருந்தவர் தான் குர்மீத் ராம் ரகீம் சிங்.

குற்றவாளியான குர்மீத் ராம் ரகீம் சிங் பஞ்சாப், ஹரியானாவில் தேர்தல் வந்தால் சிறையில் இருக்க மாட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் 15 முறை பரோலில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா தேர்தலிலும் பரோல் வழங்கி தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்கள் அமித்ஷாவின் நீதிபதிகள். அவரும் வெளியே வந்தவுடன் பாஜகவுக்கு வாக்களிக்க சொன்னார்.

 ஹரியானா தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி படிப்பினை எடுக்குமா?

ராம் ரஹீம் சிங்குக்கு பரோல் வழங்குவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது என்று அதற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. ஆனால் அந்த மனு ஏற்கப்படவில்லை. சிறந்த அரசியல் மற்றும் தேர்தல் நடைமுறைகளை கடைபிடிப்பதாக தம்பட்டம் அடிக்கும் ஒரு கட்சி, தேர்தலில் குற்றவாளியின் ஆதரவை நாடுவது வேடிக்கையானது தான்.

இது மிக மோசமான இழிந்த அரசியல். தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை அனுமதித்ததன் மூலம் அதன் நம்பகத்தன்மையை மேலும் சேதப்படுத்தியுள்ளது என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இன்னொருபுறம், வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 23 முதல் 25 (2020) வரை நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 751 FIR – களில் டெல்லி கலவர சதி வழக்கில் ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித் பிணை இல்லாமல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

உண்மையில் டெல்லி கலவரத்தைத் திட்டமிட்டு தூண்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீதோ பிஜேபி தலைவரான கபில் மிஸ்ரா மீதோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

கலவரத்தைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை வெவ்வேறு வழக்குகளில் 2,500 க்கும் மேற்பட்டவர்களை சில மாதங்களில் கைது செய்தது. நான்கு வருட விசாரணைகளில், கீழமை நீதிமன்றங்கள் 2,000 பேருக்கு மேல் ஜாமீன் வழங்கியுள்ளன மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் “தரமற்ற” விசாரணைக்காக காவல்துறையைக் கண்டித்துள்ளன.

உமர் காலீத் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 2022 இல் கர்கார்டூமா நீதிமன்றத்தால் அவருக்கு முதல் முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டது .

ஆயிரம் நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உமர் காலித்!

பின்னர் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார், அதுவும் அக்டோபர் 2022 இல் அவருக்கு பிணை மறுத்தது . இதைத் தொடர்ந்து உமர் காலித் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 2024 வரை, உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு 11 மாதங்களில் 14 முறை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிணை மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். தற்போது டெல்லி நீதிமன்றத்தில் அவரது பிணை கிடப்பில் உள்ளது.

இது மடடுமல்ல, பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் என மோடியின் பாசிச கொடுங்கோன்மை ஆட்சியை விமர்சித்த பல நூறு பேரை, வருடக் கணக்கில் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்துள்ள மோடிதான், ஜனநாயகம் குறித்து போலியாகப் பசப்புகிறார். மோடியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய குஜராத்தின் போலிசு அதிகாரி சஞ்சீவ் பட் போன்றவரும், உமர் காலித் போன்ற சமூக செயற்பாட்டாளர் விசாரணை அல்லது ஜாமீன் இல்லாமல் திகார் சிறையில் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருப்பது ஒரு பக்கம்.

மறுபக்கமோ மிக நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பின் “கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் என தீர்ப்பான ராம் ரஹீம் சிங்குக்கு பரோல் வழங்கி வேடிக்கை பார்க்கிறது நீதிமன்றம்.

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை சிறையில் வைத்தால், போராட்டங்கள் குறைந்துவிடும் என பாசிஸ்டுகள் நினைக்கிறார்கள்.நீதிமன்றங்கள் துணை போகின்றன.

எரிவதைப் பிடுங்கும் போது, தானாகவே கொதிப்பது அடங்கி விடும் என்பதை மக்கள் உணர வேண்டிய காலம் நம் கண் முன்னே கடந்து கொண்டிருக்கிறது.

பரூக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here