டிப்ளமோ, பி.இ, கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் ‘தேர்வு’ கிக் வேலை தான். முதலீடாக பைக் மட்டும் இருந்தால் போதும். இ-காமர்ஸ் (E-COMMERCE) கார்ப்பரேட்டுகள் அவர்களை ‘பார்ட்னராக’ சேர்த்துக் கொள்கிறார்கள். ‘பார்ட்னர்’ என்றால் லாபத்தில் பங்கு கொடுப்பவர்களா எனக் கேட்க வேண்டாம். வரும் லாபத்தில் 0.01% கூட கொடுக்க மாட்டார்கள். அவர்கள் அணியும் டீ சர்ட் வரை பணம் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு ‘நல்ல’ மனம் படைத்தவர்கள் தான் கார்ப்பரேட்டுகள்.
‘பார்ட்னர்’ என்றால் தானே தொழிலாளர்கள் உரிமையை கவட்டைக்குள் போட்டுக் கொள்ள முடியும். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைமைதான். தொழில்நுட்ப வளர்ச்சியினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குறைவான முதலீட்டின் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றன இ-காமர்ஸ் (E-COMMERCE) நிறுவனங்கள். உழைப்பவர்களுக்கு ஒன்றும் கிடையாது. அவர்கள் கடைசி வரையில் பைக் ஓட்டியே முதுகெலும்பு தேய்ந்து போக வேண்டியதுதான். zomato, Swiggy மட்டுமல்ல பொருட்களை டெலிவரி செய்யும் அத்துனை நிறுவனங்களும் இதே நடைமுறையையே பின்பற்றுகின்றன. இது குறித்து ஏற்கனவே நமது இணைய தளத்தில் நிறைய கட்டுரைகள் வந்தாலும் தற்போது இதனை சொல்ல வேண்டிய அவசியம் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு என ஏசி ஓய்வு அறை சென்னை மாநகரத்தின் முக்கிய இடங்களில் அமைத்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கொளுத்தும் வெயிலும், மழையிலும் சாலையோரங்களில் ஒதுங்க இடமில்லாமல் அவதிப்படுவதனால் இந்த ஊழியர்களுக்காக ஏசி ஓய்வு அறை சென்னையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தை கடந்த ஜூலை 11 முதல் தொடங்கியுள்ளது அரசு. சோதனை அடிப்படையில் அண்ணாநகர், கேகே. நகரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் உள்ள இந்த ஓய்வறையில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும். 20 டூவீலர் பார்க்கிங் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் போன்ற பகுதிகளில் இதே போன்று அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனை செய்தியாக பார்ப்பவர்களுக்கு நல்ல திட்டம் தானே, தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தோன்றலாம். உணவு டெலிவரி உள்ளிட்ட வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலருக்கு கூட இந்த திட்டம் சரியெனத் தோன்றலாம். அதில் தவறில்லை. ஆனால் இதனை அமைத்து தர வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது?
நான் ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்கிறேன் என்றால் எனக்கான அடிப்படை வசதிகளை அந்த நிறுவனம் தானே செய்து தர வேண்டும். அந்த நிறுவனம் செய்து தரவில்லை என்றால் ஒருவேளை தொழிலாளர்கள் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் நிறுவனத்தை அடிப்படை வசதிகள் செய்து தர அரசு உத்தரவிட வேண்டும். அப்படி இல்லாமல் அரசே இதனை செய்வது எந்த வகையிலும் சரியானது அல்ல. அது அரசின் வேலையும் அல்ல. இதன் மூலம் அத்தொழிலாளர்களுக்கு
இ-காமர்ஸ் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதுள்ள கோபத்தை தணித்து, திசை மாற்றுகிறது.
இந்தியாவில் நிலவும் வேலையின்மையை சரியாக பயன்படுத்திக் கொண்டு வேலைத்தேடி நகரங்களில் திரளும் தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றி சுரண்டுகிறது இ-காமர்ஸ் கார்ப்பரேட் நிறுவனங்கள். டெலிவரி பார்ட்னர் என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றன. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 10, 12 மணி நேரம் என கொடூர சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.
இந்த கிக் தொழிலாளர்களுக்கு வேலை நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளர் சட்டத்தின்படி ESI, PF உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடையாது. குறைந்தபட்ச ஊதியம் இல்லை. பணிப்பாதுகாப்பு அறவே இல்லை. ஆனாலும் தொழிலாளர்கள் இதில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை வேலையின்மையின் மூலம் உருவாக்கியுள்ளது பாசிச மோடி அரசு.
இப்படியான தொழிலாளர்களுக்கு சட்டப்படியான உரிமையை வழங்க அரசு முயல வேண்டும். அவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமையும் இல்லை. தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முற்படாத அரசுதான் அவர்களுக்கு ஓய்வறை அமைத்துக் கொடுக்கிறது. இது முழுக்க கார்ப்பரேட் நலனுக்காக மட்டுமே என்பதை பின்வரும் விவரங்களில் புரிந்து கொள்ள முடியும்.
படிக்க:
🔰 சமூக பாதுகாப்பற்ற கிக் தொழிலாளர் முறை: வளர்ந்து வரும் பேரபாயம்!
🔰 முகம் காட்டாத முதலாளிகளின் கொடூர சுரண்டல் வடிவமே கிக் பொருளாதாரம்!
ஸ்விக்கி நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டின் வருவாய் ரூ.15227 கோடி ரூபாய். சொமோட்டோ நிறுவனத்தின் 2024 நிதியாண்டில் வருவாய் ரூ. 20243 கோடியாக உள்ளது கடந்த ஆண்டை விட 67% அதிகரித்துள்ளது. இவ்வளவு லாபம் பார்க்கும் நிறுவனங்கள் ஏன் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன என்ற கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். அதைவிடுத்து ஓய்வறையை அமைத்துக் கொடுக்கும் திமுக அரசை பாராட்டுவதால் இந்த வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
பத்திரிக்கை, ஊடகங்களோ இன்னும் ஒருபடி மேலே போய் கிக் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட் என்றெல்லாம் எழுதுகின்றன. இவைகள் என்றாவது அவர்களின் வலியை பதிவு செய்திருக்கின்றனவா? கார்ப்பரேட்டையும் அரசையும் குளிர்விப்பதே இவர்களின் நோக்கம்.
அதனால் நாம் தான் இதனை பொதுவெளியில் பேச வேண்டும். பல கனவுகளுடன் படித்து வெளியில் வரும் இளைஞர்கள் வேலையில்லாமல் கனவுகள் தகர்ந்து படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் பிழைப்புக்காக உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் இந்நிலைமைக்கு கார்ப்பரேட்டும் ஆளும் வர்க்கமே முக்கிய காரணமாக உள்ளது என்பதை உணர்த்துவோம்.
கிக் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் வழங்க அரசு ஆவண செய்யவேண்டும் என்று முழங்குவோம். அரசு கண்டு கொள்ளவில்லை என்றால் தொழிலாளர்களுக்கே வரலாற்று மொழியில் புரிய வைப்போம்.
- நந்தன்
சமூக நீதிக்கான அரசு என்று மார்தட்டி கொள்ளும் கூறிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்தச் சூழலிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரானது என்று எந்த இடத்திலும் மக்கள் கூறுவதில்லை. காவி கும்பல் பிஜேபி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சேவையை செய்து வரும் சூழ்நிலையிலும் அதை எதிர்த்து கேட்பதற்கு கூட வாயில்லை அவர்களுக்கு……