“நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது கொரோனா லாக்டவுன் காலம். மோடி அறிவித்த ஊரடங்கினால் வேலை இழந்து 1 மாதம் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற பணம் இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தேன். நான் வேலை பார்த்த நிறுவனம் பராமரிப்புக்கு கூட சம்பளம் வழங்காமல் எங்களை போன்ற பயிற்சி தொழிலாளிகளை தெருவில் நிறுத்தியது.” என்று தனது லாக்டவுன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் சென்னையில் தங்கி பணிபுரியும் விஜய். இவர் பொறியியல் பட்டதாரி.

மேலும் அவர் தொடர்கிறார், “இந்த நேரத்தில் தான் அரசு ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற உணவு டெலிவரி வேலை செய்பவர்களுக்கு லாக்டவுனில் வேலை பார்க்க விலக்கு அளித்திருந்தது. இது என்னை போன்ற வேலையிழந்து நிர்கதியாய் நிற்கும் தொழிலாளர்களுக்கு அப்போதைய நிலைமையில் ஒரு ஆறுதலை கொடுத்தது. ஆனால் அந்த வேலைக்கும் சில சிக்கல்கள் இருந்தன. வேலை செய்ய நல்ல ஸ்மார்ட்போனும், பைக்கும் இல்லாமல் வேலை செய்ய முடியாது. பைக் செகன்ஸ்ட்ல வாங்குற இருந்தா கூட, குறைந்த பட்சம் 20,000 தேவை. அப்போது இருக்கும் நிலைமையில் யாரும் கடன் தர முன்வரவில்லை. என் நிலைமையை பார்த்து என்னுடன் பணிபுரியும் அதே ஊரை சேர்ந்த நண்பன் ஒருவன் பெட்ரோல் போட்டுகிட்டு பைக்கை பயன்படுத்திக் கொள் என்றான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த நேரத்தில் அவனை கடவுளை போல பார்த்தேன்.” என்கிறார் விஜய். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி அடுத்த சங்கரன்கோவில்.

அவரின் குடும்பத்தை பற்றி கூறிய போது “என் தந்தை சாதாரண கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்கு போனால் தான் எங்களுக்கு சோறு. மகன் படித்தால், தன் குடும்பம் முன்னேறி விடும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி என்னை பொறியியல் பட்டதாரி ஆக்கினார். எனக்கும் கூட அந்த நம்பிக்கை இருந்தது நான் வேலை தேடும் வரை. அப்புறம் தான் என்ஜினியரிங் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதையெல்லாம் இளைஞர்கள் கனவு காண்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது.  இந்த லாக்டவுன் காலத்தில் என் குடும்பத்தின் நிலையை உணர்ந்து தான் அன்று உணவு டெலிவரி செய்யும் வேலையில் சேர்ந்தேன். என்னை பெத்ததற்கு ஒரு வேளை உணவாவது எங்க அப்பா அம்மாவுக்கு போட வேண்டாமா?” இதை சொல்லும் போதே அவரது கண் கலங்கி விட்டது.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர் “லாக்டவுன்ங்கிறதால எல்லாரும் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் பலரும் உணவு ஆர்டர் செய்தார்கள். வேலைக்கு சேர்ந்த புதிதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. கம்பெனியில் எனக்கு கிடைத்த சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது. லாக் டவுன் முடிந்தாலும் இதே வேலையையே தொடர்ந்து விடலாம் என்று தோன்றியது. வேலையில் சேரும் போது என்னை  ‘டெலிவரி பார்ட்னர்’ என்று சொன்னார்கள். அதன் சூட்சமம் அப்போது எனக்கு புரியவில்லை. இப்போது உணர்கிறோம். கிட்டத்தட்ட நான்கு வருடமாக இந்த வேலையை செய்து வருகிறேன். நான் ஆரம்பத்தில் நினைத்தது போல் முழு நேரமாக இந்த வேலையை செய்து வந்தேன், ஒரு கட்டத்தில் வருமானம் குறைய ஆரம்பித்த பிறகு கம்பெனியில் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறேன்.” என்றார்.

அவரின் நண்பர் ஒருவர் குறுக்கிட்டு தொடர்ந்தார். “நானும் விஜயுடன் தான் வேலை செய்கிறேன். வேலையில் சேர்ந்த போது கிடைத்த வருமானம் இப்பயெல்லாம் கிடைக்கிறதில்ல ப்ரோ. ஆரம்பத்தில ஆச காட்டுனாங்க. இப்ப எங்கள மாதிரி படிச்சிட்டு வேலையில்லாம இருக்கிற இளைஞர்கள நல்லா பயன்படுத்திக்கிறாங்க. இந்த வேலையில ரிஸ்க் அதிகம். ஆனா அதுக்கு கம்பெனி பொறுப்பு ஏத்துக்க மாட்டாங்க. பெட்ரோல் ரேட்டும் அதிகமாயிடுச்சி, வர்ற வருமானத்துல பாதிய பெட்ரோலுக்கு அழுவனும். முன்னயெல்லாம் குறிப்பிட்ட டெலிவரிக்கு அதிகமாக பண்ணா ஊக்கத்தொகை  தருவாங்க, இன்னக்கி அதெல்லாம் இல்லை. வண்டி ஓட்டி ஓட்டி முதுகுவலியோட தான் அலயுறோம்” என்று தன் பங்குக்கு கொட்டி தீர்த்தார்.

கிக் தொழிலாளர்கள் மீதான நவீன சுரண்டல்

இந்தியாவில் சென்னை போன்ற பரபரப்பான நகரங்களில் உணவு, மளிகை சாமான், காய்கறி, இறைச்சி உட்பட அனைத்தும் அவரவர் இடத்திற்கே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு போய் சேர்க்கும் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுபவர்கள் தான் இந்த கிக் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலும் 20லிருந்து 30 வயதுக்குள் உள்ளவர்கள் தான் அதிகம். இதே வேலையை பெண்களும் செய்கிறார்கள். இந்த வேலை செய்யும் தொழிலாளர்களிடம் பேசியதிலிருந்து, வேலையில் சமூக பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றும் பைக்கில் செல்லும் போது எங்காவது விபத்து ஏற்பட்டாலோ அல்லது இறந்து போனாலோ கேட்பதற்கு யாரும் இல்லை! ஏனென்றால் இங்கு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நேரடி உறவு ஒன்றும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு முதலாளியே யார்? என்று தெரியாது. அதனால் தான் இவர்களை டெலிவரி பார்ட்னர் என்று அழைத்து ஏமாற்றுகின்றன இந்த நிறுவனங்கள்.

ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ வேலைப் பார்க்கும் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் முதலாளியுடன் நேரடி உறவில் இருப்பார்கள். அதாவது அவரது வேலையின் நேரம் சட்டத்தின் படி 8 மணி நேரம்(இன்று வரை), அவருக்கு அந்த நிர்வாகம் மதிய உணவு வழங்க வேண்டும், டீ கொடுக்க வேண்டும்.  நிரந்தர தொழிலாளர்கள் என்றால் மேலும் சில சலுகைகள் சம்பளத்தில் கிடைக்கும். ஆனால் கிக் தொழிலாளர்களுக்கு இதில் குறிப்பிட்ட எந்த நடைமுறையும் பொருந்தாது என்பதை மேலே குறிப்பிட்ட விசயத்தில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

இதில் மளிகை மற்றும் காய்கறி டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசம். ஏர் கண்டிஷனர் தொழில்நுட்ப வல்லுநரான 21 வயதான முகமது சொஹைல், தலைநகர் டெல்லியின் குளிர்கால மாதங்களில் குளிர்சாதன பழுதுபார்ப்புகள் தேவைப்படாதபோது குடும்பத்தை சமாளிக்க மொபைல் பயன்பாடு அடிப்படையிலான  மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யத் தொடங்கினார்.  Article 14 இணையதளத்திற்கு, அவர் அளித்த பேட்டியில் “நான் காலை 8 மணி முதல் இரவு வரை தெருக்களில் இருக்கிறேன்” என்று கூறினார். அவர் ஒரு ஆர்டரை டெலிவரி செய்துவிட்டு, மற்றொரு ஆர்டரைப் பெற ‘டார்க் ஸ்டோருக்கு’ திரும்புகிறார்.

டார்க் ஸ்டோர் என்பது பயன்பாட்டுக்கு தேவையான சரக்குகளை சேமித்து வைக்கும் கிடங்கு. டெலிவரி செய்ய வேண்டிய ஆர்டரைப் பெறும் ஒவ்வொரு முறையும், சொஹைல் டார்க் ஸ்டோரில் உள்ள மேலாளரிடம் அறிக்கை அளிக்கிறார், பேக் செய்யப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து குறிப்பிட்ட நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ டெலிவரி செய்ய வேண்டும்.

ஜூன் 2022 இல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் கொள்கை சுருக்கமாக ,‘India’s Blooming Gig and Platform Economy’, பயன்பாட்டு அடிப்படையிலான தளங்களில் பணிபுரியும் விஜய், சோஹைல், போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களை, கிக் அல்லது பிளாட்ஃபார்ம் தொழிலாளி, “வேலையைச் செய்யும் அல்லது ஒரு வேலை ஏற்பாட்டில் பங்கேற்கும் நபர், மற்றும் பாரம்பரிய முதலாளி-ஊழியர் உறவுக்கு வெளியே உணவு டெலிவரி அல்லது வேறோரு கிக் வேலை மூலம்  சம்பாதிக்கும் நபர்” என்று விவரிக்கிறது.

இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21ல் 77 லட்சமாக இருந்தது. 2029-30ல் 2.35 கோடியாக விரிவடையும் என்று நிதி ஆயோக்-கின் அறிக்கை கூறுகிறது. தற்போதைய நிலவரப்படி , இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 1.5 சதவீதம் தொழிலாளர்கள் இந்த வேலையில் ஈடுபடுவது அரசின் புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று நிதிஆயோக் தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்: 10 நிமிட டெலிவரி: ZOMATO  லாபவெறி

கிக் தொழிலாளர்கள் அதிகரிக்க காரணம் zomoto, uber,swiggy போன்ற நிறுவனங்கள் அதிகம் வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று அர்த்தம் அல்ல. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு சரியான வேலை இல்லை என்று புரிந்துக்கொள்ள வேண்டும். மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வேலையின்மை அதிகரித்து வருவதை அரசின் புள்ளி விவரங்களே கூறுகிறது. அதாவது பாசிஸ்டுகளாலேயே  வேலையின்மை விவரங்களை மறைத்து வைக்க முடியவில்லை என்பதே உண்மை. இதனை சரியாக பயன்படுத்தி நவீன சுரண்டலில் ஈடுபடுகிறது இ -காமர்ஸ் நிறுவனங்கள். இதனை அதில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் உணர்ந்திருந்தாலும், தற்காலிக நிவாரணியாக பார்க்கிறார்கள்.

GIG வேலையில் உள்ள ஆபத்துகள்:

இந்த வேலை போட்டித் தன்மை வாய்ந்தது. யார் முதலில் ஆர்டர் எடுப்பது, அதாவது மொபைலை கண் அசைக்காமல் பார்த்திருக்க வேண்டும். ஆர்டர் வந்த உடனேயே கிளிக் செய்தால் தான் உண்டு சற்று கண் அசைத்தால் கூட வேறு ஒருவர் இதே போல் ஆர்டர் எடுத்து விடுவார். இதில் ஆபத்துகள் மிக அதிகம். எடுக்கும் ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சேர்க்க வேண்டும்.  தொடர்ந்து தாமதமாக டெலிவரி செய்தால் அவருக்கு ஆர்டர் குறைவாகவே கொடுப்பார்கள். இந்த காரணத்தினாலேயே பைக்கை வேகமாக ஓட்ட வேண்டி வரும். சென்னை போன்ற மாநகரங்களில் உணவு டெலிவரி செய்வது சாகச வேலை தான்.

டன்சோவின் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் முகமது ஆரிஃப் கான், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்கிறார், காலை 9.30 வேலையைத் தொடங்கி நள்ளிரவில் லாக் அவுட் செய்கிறார்.  “இந்த வேலையானது தனது நேரத்தை மொத்தமாக விழுங்கி விடுகிறது. நான் எனது நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ நேரம் செலவிடுவதற்கு வாய்ப்பில்லை.  நான் நாள் முழுவதும் அதாவது 15 மணி நேரம் வேலைபார்த்தால் ஊக்கத்தொகையுடன் சேர்த்து 1000 ரூபாய் கிடைக்கும். இது பெட்ரோல் விலை அதிகரித்தால் 800 ஆக குறையும்” என்கிறார். அவருக்கு இன்சூரன்ஸ் இல்லை. ஒருவேளை டெலிவரியின் போது விபத்தில் இறந்தால் மட்டுமே எனது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுவும் குடும்பத்திற்கு விவரங்கள் தெரிந்தால் மட்டுமே!

இவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்வதாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு ID கார்டுகள் கிடையாது. “நிறுவனம் எங்களை டெலிவரி பார்ட்னர்கள் என்று கூறியது. நாங்கள் இந்த வேலையில் சேர பணம் செலுத்த வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆடையை(ஆடைக்கு தனியே பணம்) அணிய வேண்டும்” என்று டெலிவரி ஊழியர்களில் ஒருவர் கூறினார்.

“GIG தொழிலாளர்கள்_ முறையான ஊழியர்கள் இல்லை ” என்பதன் அர்த்தம் அவர்கள் ” சட்டரீதியான  உரிமைகள் அற்றவர்கள்” என்பதாகும். அவர்களது சங்கம் நிறுவனங்களால்   அங்கீகரிக்கப்படாது என்பதாகும். சட்ட ரீதியான உரிமையைப் பெறுவதன் மூலமே இந்த விசயத்திற்கு விரிவான தீர்வை பெற முடியும் என்கிறார் மும்பை ஐஐடியில் உள்ள கொள்கை ஆய்வுகளுக்கான அஷான்க் தேசாய் மையத்தின் உதவி பேராசிரியர் அனுபம் குஹா.

மேலும் அவர் கூறுகையில்  “GIG தொழிலாளர்களின் இந்த அவல நிலையை பொதுமக்களிடம் பேசுபொருளாக்கி ,நீதிமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ இந்த பிரச்சினையை எடுத்து செல்லாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்காது” என்று கூறுகிறார்.

ஜெர்மன் அறிஞர் மோரிட்ஸ் அல்டென்ரிட் நடத்திய ஆய்வை குறிப்பிட்டு  டிஜிட்டல் தொழில்நுட்பம் தொழிற்சாலைகளில் உள்ளது போலவே தொழிலாளர் உறவுகளை உருவாக்குகிறது. எனவே இதுபோன்ற பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் கிக் தொழிலாளர்களை “டிஜிட்டல் தொழிற்சாலையின் தொழிலாளர்களாக” பார்க்க வேண்டும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது என குஹா சுட்டிக்காட்டுகிறார்.

கிக் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள்:

கிக் தொழிலாளர்களை பொறுத்தவரையில், நிறுவனங்கள் தொழிலாளர்களாக பார்ப்பதில்லை. தொழிலாளர் என்ற நிலைக்குள் வந்து விட்டால் அவர்களுக்கு சட்டப்படியான சலுகைகள் வழங்க வேண்டும். பணிநிரந்தரம் வழங்க வேண்டும், இதையெல்லாம் கவனத்தில் வைத்து தான் அவர்களை டெலிவரி பார்ட்னர்கள் என்று கூறி நயவஞ்சகத்துடன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது அனைத்தும் அரசின் அனுமதியோடுதான் நடக்கிறது. இதனாலேயே இவர்கள் தொழிற்சங்கம் அமைத்தால் அரசு அங்கீகாரம் தருவதில்லை. பல தொழிற்சங்கங்களும், கூட்டமைப்பும் உருவாகியிருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை.

இதையும் படியுங்கள்: முகம் காட்டாத முதலாளிகளின் கொடூர சுரண்டல் வடிவமே கிக் பொருளாதாரம்!

“கடந்த காலங்களில் கிக் நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமோட்டோ வுக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தியுள்ளோம். நாங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் இந்த அமைப்பில் சில மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறோம்.” என கிக் தொழிலாளர்களுக்கான  இந்திய கூட்டமைப்பின்  தேசிய பொதுச்செயலாளர் ஷேக் ஜலாவுதீன் கூறினார். இந்த கூட்டமைப்பு 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அதில் 25,000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

கிக் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த தொழிற்சங்கங்கள் அவசியம். ஆனால் இந்த விசயத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு  முதலாளிகளின் நலனே அவசியம். மாநில அரசுகளும் கவனம் செலுத்துவதில்லை. நிதி ஆயோக் இதனை ஒரு வேலைவாய்ப்பாக பார்க்கிறதேயொழிய அந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் பற்றி சிந்திப்பதில்லை. பல காலமாக போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளையும், தொழிலாளர் சட்டங்களையும் 4 தொகுப்புகளாக மாற்றிய பாசிச மோடி அரசிடம் கிக் தொழிலாளர்களுக்கான நியாயத்தை பெற முடியுமா?

நம்மிடம் பேசிய பல கிக் தொழிலாளர்கள் சொன்ன வார்த்தை “நான் பார்க்கும் இந்த வேலை குறித்து எனது குடும்பத்திற்கு தெரியாது என்பது தான்.” பலர் தன்னுடைய குடும்பத்திற்கு தெரிந்தால் கஷ்டப்படுவார்கள் அதனால் கூறவில்லை என்கிறார்கள். குறிப்பாக ஆரம்பத்தில் பார்த்த விஜய் போன்ற பட்டதாரி இளைஞர்கள் குடும்பத்திடம் சொல்லாமல் தான் இந்த வேலையை பார்ட் டைம் வேலையாக பார்க்கிறார்கள். தொழிற்சாலையில் கிடைக்கும் 10,000 ரூபாய் சம்பளம் அவர்களது குடும்பத்தை கவனிக்க போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

வரும் காலங்களில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு அதிகம். ஏனென்றால் நாளுக்கு நாள் வேலையின்மை அதிகரித்து வருகிறது.  நமக்கே தெரியாது ஒருவேளை நமது குடும்பத்தில் மகனோ, இல்லை அண்ணனோ, தம்பியோ, அப்பாவோ, அக்காவோ யாரோ ஒருவர் நம்முடைய குடும்ப கஷ்டத்தை போக்க  கிக் தொழிலாளர்களாக இருக்கலாம். இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதே நம்முன் உள்ள கேள்வி!

கிக் தொழிலாளர்கள் அமைப்பாக்கப்பட வேண்டும். அவர்களை நிறுவனங்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பணிபாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும். இதற்கேற்ப கிக் தொழிலாளர்களுக்கென சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.  இது அனைத்தும் அவ்வளவு எளிதான விசயமல்ல. ஆனால் சாத்தியப்படுத்த முடியும். நாம் அனைவரும் இந்த கார்ப்பரேட் கும்பலுக்கு எதிராக ஓரணியில் திரண்டால்!

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here