கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.

கடல் கொண்ட காவிரி பூம்பட்டினம் முதல் இன்னபிற ஆய்வுகளை விரிவாக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்கள் ஆய்வுசெய்யப்பட வேண்டும். அதற்கும் திராவிட-தமிழர் நாகரீக உறவுகளை உலகிற்கு எடுத்தியம்ப வேண்டும். கீழடியின் தொல்லியல் ஆய்வு முடிவுகளைக் கொண்டு இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்.

கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.
கீழடி ஆய்வு இந்திய சமூக அமைப்பிற்கு மட்டுமின்றி உலக சமூகத்திற்கே முக்கியமானது.

ந்தியாவின் வரலாற்றை தெற்குப் பகுதியில் இருந்து திருத்தி எழுத வேண்டும் என்று சமகாலத்தில் வாழ்கின்ற வரலாற்று அறிஞரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்ற மூத்த பேராசிரியருமான ரொமிலா தாபர் முன்வைத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

”இந்தியாவுக்கு பதிவு செய்யப்பட்ட வரலாறு எதுவும் இல்லை. அதன் சித்தாந்த வாழ்க்கை மதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது” என்று விமர்சித்தார் குறிப்பாக இந்தியாவில் நிலவிய சாதிய முறை பற்றி விமர்சித்த தோழர் எங்கெல்ஸ். “சாதிய முறை சுயம், தார்மீக உணர்வுகள், கிளர்ச்சி போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் அழித்து அளவில்லாத கொடுங்கோன்மைக்கு சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது” என்று சாடினார். இந்தியாவில் நிலவிய தனிநபர் சொத்துடமை வளர்ச்சியின்மை குறித்து ஹெகல் விமர்சித்ததை வளர்த்தெடுத்தார்.

இந்திய சமூக அமைப்பில் சாதிகளின் தோற்றுவாய் குறித்தும், சாதிய அமைப்பிற்கும், உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள அடிப்படைகளை குறித்தும் ஆய்வு செய்து முன் வைத்ததில் மார்க்சிய லெனினிய இயக்கங்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

அந்த வகையில் பார்க்கும்போது உலகில் மனிதகுலம் பரிணாம வளர்ச்சியடைந்த காலத்தில் இருந்து உருவான பல்வேறு காலகட்டங்களில் முன்னேறிய பல்வேறு நாகரீகங்கள் வெவ்வேறு புள்ளிகளில் காலத்தாலும், இடத்தினாலும் மாறுபட்டது. இயற்கை சூழல்களில் தோன்றிய மனிதகுலம் அதன் பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக இன்றைய நிலையை அடைந்துள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து அண்டார்டிகா பிரதேசம் வரையிலும், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடல் வரையிலான பிரதேசங்கள் வரையிலும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்குகள் கொண்ட சமூக அமைப்புகளின் காரணமாக மனித குலத்தின் நாகரிகங்கள் ஒரே சமயத்தில், ஒரே காலகட்டத்தில் நடைபெறவில்லை என்பதை நாம் அறிய வேண்டும்.

பூமி மனிதர்கள் வசிக்கத்தக்க கோளமாக உயிர்பெற்றது முதல் படிப்படியாக பரிணாம வளர்ச்சியை அடைந்து இன்றைக்கு நாம் பார்க்கின்ற மனிதர்களை ஒத்த மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்ற நியாண்டர்தால் மனிதர்கள் உருவாகி 30 ஆயிரம் ஆண்டு காலமாகிறது என்கிறது மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கு பற்றிய வரலாறு.

இந்த முப்பதாயிரம் ஆண்டுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய அல்லது மனிதர்களை போன்ற உருவில் இருந்த மனிதக் குரங்குகள், அதாவது வால் இல்லா குரங்குகள் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்வதற்கு தொடர்ச்சியாக தொல்லியல் ஆராய்ச்சியின் மூலம் பூமிக்கடியில் புதைந்து போன மனிதர்களின் நாகரிகங்களை வெளியில் கொண்டு வருவதற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கைக்கு எதிராக போராடிய மனிதன் இயற்கைக்கு எதிராக போராடி தன்னையும் மாற்றிக் கொண்டது மட்டுமின்றி தங்களுக்குள்ளாகவும், நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி அதன் பிறகு தான் மனித இனம் தனித்தனி சமூகங்களாக அமைந்தது.

அந்தந்த மக்களின் இடத்தின் பெயரால் தோன்றிய நாகரிகங்களை முதலாளித்துவ வரலாற்று ஆய்வாளர்கள் கீழ்கண்டவாறு வரையறுத்துள்ளனர். இந்த வரையறையை ஏற்றுக் கொண்டு மார்க்சிய லெனினிய ஆய்வாளர்களும் சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையிலும், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலும் சமுதாய வரலாற்றை பகுப்பாய்வு செய்வதால் நாமும் கற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது தெற்கு ஆசியாவில் தோன்றிய கிமு 3500 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகம்; கிழக்கு ஆசியாவில் தோன்றிய கிமு 3,300 ஆண்டுகள் பழமையான சீன நாகரிகம்; மத்திய கிழக்கில் தோன்றிய கிமு 3,100 ஆண்டுகள் பழமையான மெசபடோமியன்- சுமேரியன் நாகரீகம்; வட ஆப்பிரிக்காவில் தோன்றிய கிமு 2700 ஆண்டுகள் பழமையான எகிப்திய நாகரீகம்; கிழக்கு ஐரோப்பாவில் தோன்றிய கிமு 2700 ஆண்டுகள் பழமையான கிரேக்க நாகரிகங்கள்; தென் மத்திய அமெரிக்காவின் பெரு, கொலம்பியா, ஈகுவாடாரில் தோன்றிய கிமு 2600 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீகம்; மத்திய அமெரிக்காவில் மெக்சிகோவில் தோன்றிய கிமு 1300 ஆண்டுகள் பழமையான அஜிடெக் மற்றும் இன்காஸ் நாகரிகங்கள்; வரலாற்றில் இவற்றிற்கு பின்பு தென்கிழக்கில் கிமு 600-களில் தோன்றியவை பழமையான ரோமானிய மற்றும் கிரேக்க நாகரிகங்கள் மற்றும் கீழடி-சிவகளை வைகை நாகரீகம்;

கிமு 3,600 முதல் கிமு 600 வரை ஏறக்குறைய 3000 ஆண்டு காலத்தில் உலகின் வெவ்வேறு கண்டங்களில் பல்வேறு இடங்களில் தோன்றிய நாகரிகங்கள் ஒரே சீராகவும், ஒரு படித்தானதாகவும், ஒரே பரிணாம வளர்ச்சிப் பாதையிலும் வந்தடையவில்லை. அவை அனைத்தும் ஒரே மாதிரியான; ஒரே வகையான உற்பத்தி முறைகளையும். சமூகப் பொருளாதாரப் படிவங்களை கொண்டிருக்கவில்லை. அவையெல்லாம் காலத்தாலும், இடத்தாலும் மாறுபட்ட இயற்கை பொருளாயாத சூழலைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன.

மனித குலத்தின் தோற்றத்தையும் அதன் பிறகு பண்டைய காலத்தில் இருந்து அடுத்தடுத்து வந்த சமுதாயங்களின் வரலாற்றையும் ஆய்வு செய்த மார்க்சிய ஆசான்கள் அதோடு வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வுக்கான முறையியலையும் (methodology) உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். இன்றைய நிலையை மனித இனம் எவ்வாறு வந்தடைந்தது என்பதை காரல் மார்க்சின் ஆய்வுக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டும், அமெரிக்க மனித உயிரியல் அறிஞர் லூயி ஹென்றி மார்கன் மனித இனத்தின் தொன்மையான வரலாற்றை முதன்மையாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்த ஒளியிலும், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் குறித்து ஏடறிந்த வரலாற்று காலத்துக்கு முந்தைய கலாச்சார காலகட்டங்கள் மீது தனது ஆய்வு முறைகளை ஏங்கெல்ஸ் எழுதியுள்ளார்.

படிக்க:

🔰 கீழடி  பனிப்பாறையின் வெளித் தெரியும் முனையே

🔰 கீழடி: தமிழர்களின் முன்னேறிய நாகரிகத்தின் அடையாளம்!

இந்த வகையில் வரலாற்று காலகட்டத்தில் கிமு 600 காலத்திய 2600 ஆண்டுகள் பழமையான வைகை நதிக்கரையில் உருவான தென்னிந்தியாவில் உள்ள கீழடி மற்றும் சிவகளை ஆகியவற்றில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழ் சமூகத்தின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம், முன்னேறிய நகர வாழ்க்கை முறை, கல்வியறிவு, பொது ஒழுக்கம், மதங்கள் சாராத, கடவுள் வழிபாடுகளற்ற புராதன பொதுவுடமை சமூக அமைப்பின் ஒத்தத் தன்மை ஆகியவற்றை எடுத்துச் செல்வது மட்டுமின்றி, கீழடி ஆய்வு இந்திய சமூக அமைப்பிற்கு மட்டுமின்றி உலக சமூகத்திற்கே முக்கியமானது.

இந்தியாவின் வரலாற்றை தொகுத்த பிரிட்டன் காலனி ஆதிக்கவாதிகள் முதல் அதன் பிறகு வரலாற்றை எழுதிய படித்த மேல்தட்டு வர்க்கமான பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் இந்தியாவின் வரலாற்றை வட இந்தியாவில் இருந்து துவங்கி எழுதியுள்ளனர் என்பதால் வேத நாகரிகத்திற்கு முன்பே முன்னேறிய நாகரிக மரபை கொண்ட கீழடியைப் பற்றி ஆய்வு செய்வதும் கீழடியில் கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளை வெளியில் அறிவிப்பதும் அவசியமாகின்றது.

இத்தகைய ஆய்வு முடிவுகளை வெளியில் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் உழைப்பை இந்திய ஒன்றிய அரசாங்கமான பாசிச பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் பின்னுக்கு தள்ளியுள்ளது என்பதன் வெளிப்பாடுதான் கீழடியின் ஆய்வுகள் இன்னும் அதிகாரப் பூர்வமாக, பொதுவெளியில் அறிவிக்கப்படாதது ஆகும்.

கீழடி ஆய்வில் கிடைத்த பொருள்கள் என்னென்ன என்பதையும், அவற்றை கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்து அதனுடைய காலத்தை அறிந்து, அதன் முன்னேறிய நாகரிகத்தை பறைசாற்றியது மட்டுமின்றி இந்திய வரலாற்றில் உருவான பல்வேறு நகர நாகரிகங்ளுக்கு முன்பிருந்த நகர நாகரீகமாக திராவிட-தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை அறிவித்துள்ளார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இந்த ஆய்வு முடிவை ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் நிலவி வருகின்ற பார்ப்பனிய அடிமைத்தனமும், புராணங்கள், இதிகாசங்களில் முன்வைக்கக்கூடிய கற்பனாவாத சரக்குகள் அனைத்தும் கேள்விக்குள்ளாகிவிடும், பார்ப்பனக் கும்பல் துக்கிப் பிடிக்கும் வேத கால நாகரீகம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற காரணத்தினால் கீழடியின் ஆய்வுகளை மறைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்.

கீழடி ஆய்வுகளை தடுப்பதற்கு நடக்கின்ற உள்ளடி வேலைகள், ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுகின்ற கொடும்கனவில் திளைத்துக் கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு தேவையானது என்பதால் அதனை நாம் அப்படியே அனுமதிக்க முடியாது.

கீழடி மட்டுமல்ல, அதற்கு முன்னரே ஆய்வு செய்யப்பட்ட அரிக்கமேடு, ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வுகள் கொடுமனல், கரூர், சிவகளை அகழ்வாய்வுகள் அனைத்தையும் மீண்டும் துவங்கி ஆழமான ஆய்வுகளாக மாற்ற வேண்டும். கடல் கொண்ட காவிரி பூம்பட்டினம் முதல் இன்னபிற ஆய்வுகளை விரிவாக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்கள் ஆய்வுசெய்யப்பட வேண்டும். அதற்கும் திராவிட-தமிழர் நாகரீக உறவுகளை உலகிற்கு எடுத்தியம்ப வேண்டும். கீழடியின் தொல்லியல் ஆய்வு முடிவுகளைக் கொண்டு இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்.

இதன் மூலமாக இந்தியாவின் தனிச்சிறப்பான அம்சமாக முன்வைக்கப்படுகின்ற சாதி அமைப்பு, இன்று வரை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைவாத கருத்துகள், ஆழ்மனதில் ஊறிப் போயுள்ள சாதியப் பெருமிதங்கள் போன்றவற்றை எதிர்த்து முறியடிப்பதற்கு கீழடியில் வாழ்ந்த முன்னேறிய சாதியற்ற, மதமற்ற கடவுள் வழிபாடுகளற்ற சமூக அமைப்பை உலகுக்கும், தமிழ் சமூகத்திற்கும் முன்னுதாரணமாக காட்டுவதும், உயர்த்திப் பிடிப்பதும் காலத்தின் கட்டாயம்.

கபிலன்.

நன்றி: புதிய ஜனநாயகம் (ஜூன் 2025)

1 COMMENT

  1. கீழடி அகழாய்வு தொடர்பாக எழுதப்பட்டுள்ள புதிய ஜனநாயகம் – ஜூன் இதழில் தோழர் கபிலன் மிக நுட்பமாக ஒரு மாநில ஒரு குறிப்பிட்ட எல்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் வரலாற்று ஆய்வுகள் மூலம் பண்டைய நாகரிகத்தை எப்படி மார்க்சிய லெனினிய பொருள் முதல் வாகத இயங்கியல் கண்ணோட்டத்தில் அணுகுவது என்பதனையும் பாசிச ஒன்றிய அரசு சனாதன பார்ப்பன கண்ணோட்டத்தில் தமிழர் பண்பாடு நாகரீகத்தை புறந்தள்ளும் வகையில் நடந்து கொள்ளுகின்ற அயோக்கத்தனங்களை தோலுரித்து தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையை ஏற்கச் செய்ய நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாது என்பதனை தெட்டத் தெளிவாக அதே நேரத்தில் சுருக்கமாக விவரித்துள்ளார். தோழருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here