இவர்களை இந்நிறுவனங்கள் தொழிலாளர்கள் என்று அழைப்பதில்லை. மாறாக, Delivery partners, Independent contractors, Driver entrepreneurs என்று குறிப்பிட்டு, அவர்களின் சட்டப் பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம் அவர்களை நவீன கொத்தடிமைகளாக நடத்துகிறது.

கடந்த ஜுலை 23-ந்தேதி உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ பங்கு சந்தை பட்டியலில் இணைக்கப்பட்டது. இணைக்கப்பட்ட நாளன்றே 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை முதலீட்டை ஈர்த்தது. இதன்விளைவாக, சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான திபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு 4600 கோடிக்கு மேல் உயர்ந்தது; தற்போது இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

பங்கு சந்தையில் பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து வெளியிட்ட தனது கடிதத்தில் ஜியோ, பிளிப்கார்ட், அமேசான், ஓலா, உபெர், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களை தமது நிறுவனத்துக்கு பாதை வகுத்து கொடுத்தவர்கள் என ZOMATO CEO திபிந்தர் கோயல் பாராட்டுகிறார். இதன் மூலம் முதலாளிகளின் முகம் தெரியாத GIG எனப்படும் பொருளாதாரம் மூலம் நிரந்தர தன்மையற்ற ஒப்பந்த, தற்காலிக, தன்னார்வ தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் புதிய ஏகாதிபத்திய சுரண்டல் முறைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

அறிவிப்பு வெளியான உடனே 1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கக் கூடிய அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பாங்காற்றும் தொழிலாளர்கள் குறித்து, அந்நிறுவன மொழியிலேயே சொல்லுவதெனில் Delivery partner கள் குறித்து ஒரு வரி கூட அந்த கடிதத்தில் இல்லை. மேம்போக்காக பார்க்கும் எவருக்கும் செயலிகளும் அதனை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களும் தான் இது போன்ற நிறுவனங்களின் செயல்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக தெரியக்கூடும். ஆனால் செயலியை அடிப்படையாக கொண்டு சேவை வழங்கும் எந்த ஒரு நிறுவனமும் தனது சேவையை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க தவிர்க்க முடியாதவர்கள் தொழிலாளர்கள் தான். அவர்கள் இல்லையேல் அந்த செயலிகள் வெற்று உலாவிகள் மட்டுமே.

செயலிகள் மூலம்
சுரண்டப்படும் தொழிலாளர்கள்:

ZOMATO மட்டுமல்ல, SWIGGY, OLA, UBER என போன் செயலியை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் தமக்காக களத்தில் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கும் ஊழியர்களை ஈர்க்க – பைக் இருந்தால் போதும் / கார் இருந்தால் போதும் மாதம் ரூபாய் 40,000 வருமானம், தேவைப்படும்போது ஓய்வு, ஊக்கத்தொகை என பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தன. ஏற்கனவே வேலையில்லா பட்டாளம் அதிகம் உள்ள நிலையில் பல்லாயிரம் இளைஞர்கள் மாத தவணையில் இருசக்கர வாகனங்கள் / கார்களை வாங்கி இந்த நிறுவனங்களில் இணைந்தனர். இவர்களை இந்நிறுவனங்கள் தொழிலாளர்கள் என்று அழைப்பதில்லை. மாறாக, Delivery partners, Independent contractors, Driver entrepreneurs என்று குறிப்பிட்டு, அவர்களின் சட்டப் பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம் அவர்களை நவீன கொத்தடிமைகளாக நடத்துகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 23 “கட்டாய உழைப்பை” தடை செய்கிறது. அதன் நேரடி சொற்களில் அது பிச்சைக்காரர்களுக்கும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்துவதாக தெரியலாம். ஆனால் அதனை அப்படி சுருக்கி புரிந்து கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் 1983 ஆம் ஆண்டு PUDR VS Union of India வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, கட்டாய வேலைக்கு எதிரான உரிமை என்பது குறைந்தபட்ச ஊதியத்துக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றும், பொருளாதார சூழல் காரணமாக வேறு வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பவரை குறைந்த கூலிக்கு பணியமர்த்துவது என்பதும் கட்டாய வேலை என்பதிலேயே வரும் என்றும் கூறியுள்ளது. வண்டிக்கான EMI கட்டுவது, குடும்ப சூழல், வேலையின்மை பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக எந்த ஒரு மோசமான நிலையிலும் தொழிலாளர்கள் அந்த வேலையை விடுவது என்பது சாத்தியப்படாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் செயலிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களை சுரண்டுவதும், அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியை மறுப்பதும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 23 க்கு எதிரானது ஆகும்.

ஆனால் அடுத்து வந்த பல அண்டுகளில் தொழிலாளர் உரிமைகள் குறித்து வந்த நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் PUDR vs Union of India வழக்கின் தீர்ப்பு கொடுத்த நெறிமுறைகளை கணக்கில் கொள்ளவேயில்லை என்பது வெட்கக்கெடானது. ஆனால் அது தான் தற்போதைய எதார்த்தமாக உள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, வழக்கறிஞர் கவுதம் பாட்டியா தனது நூலில் “யாரும் பயணிக்கத் தேர்வு செய்யாத சாலையில் உள்ள மைல்கல்” என்று இந்த தீர்ப்பை குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நுட்பமான விவகாரங்களை தொழிற்சங்க சுல்தான்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.

தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும
மோடி அரசின் சமூக பாதுகாப்பு நெறிமுறைகள்!

மோடி அரசு தொழிலாளர் நல சட்டங்களை ஒழித்து அதனிடத்தில் கொண்டுவந்துள்ள தொழிலாளர்களுக்கான 4 நெறிமுறைகளில் சமூக பாதுகாப்பு நெறிமுறைகளும் (The Code on Social Securities,2020) ஒன்று. செயலிகள் மூலம் சுரண்டப்படும் அந்த நெறிமுறை தொழிலாளர்களை – கிக் தொழிலாளர்கள், பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் – என இரண்டாக பிரிக்கிறது. அந்த நெறிமுறையில் மத்திய அரசு அந்த தொழிலாளர்களுக்கு ‘முதுமை பாதுகாப்பு’, ‘உயிர் மற்றும் ஊனமுற்றோர் பாதுகாப்பு’, ‘உடல்நலம் மற்றும் மகப்பேறு நன்மைகள்’ ஆகியவற்றை வழங்கலாம் என பொத்தம்பொதுவாக குறிப்பிட்டு செல்கிறது. அந்நிறுவனங்கள் கிக் தொழிலாளர்கள் / பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு வழங்கும் மொத்த சம்பளத்தை கணக்கிட்டு 5% சதவீதத்தை அந்த தொழிலாளர்களுக்கென உருவாக்கப் படும் அரசு நிதிக்கு செலுத்த வேண்டும் என்பது மட்டுமே நேரடியாக சொல்கிறது. அரசு தரப்பில் வசூலிக்கப்படும் பல்வேறு நிதிகள் வேறு செலவுகளுக்கு ஒதுக்கப்படுவதும், செலவு செய்யப்படாமலும் இருப்பது போலவே இந்த நிதிக்கும் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கட்டாய வேலை வாங்குவது என்பது பற்றி PUDR vs Union of India வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பையே நீதிமன்றங்கள் கணக்கில் கொள்ளாத நிலையில் மோடி அரசு கொண்டுவரும் இந்த சமூக பாதுகாப்பு நெறிமுறைகளும் அதில் சொல்லப்படும் வழிகாட்டுதல்களும் செயலுக்கு வர வாய்ப்பில்லை. கார்ப்பரேட்டுகளின் அடிமையான திருவாளர். மோடியின் திட்டமும் அது தான்.

தொழிலாளர் உரிமைகளை மீட்க
ஏகாதிபத்திய நவீன சுரண்டல் முறைக்கு எதிராக போராடு!

செயலிகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிகளை ஒதுக்குவது, அதற்கான கூலியை கணக்கிடுவது ALGORITHM தான் என்றும், அந்த தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை தவிர்த்தால், குறிப்பிட்ட நேரத்துக்கும் மேல் OFFLINEக்கு சென்றால், சேவையில் தாமதம் ஏற்பட்டால் எவ்வளவு அபாரதம் கட்ட வேண்டும் என்பதையும் அந்த செயலி தான் தீர்மானிக்கிறது; ALGORITHM தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது.

12 மணிநேரத்துக்கு மேலாக ரோட்டிலேயே அலைந்து திரியும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கையை நடத்தும் அளவுக்குகூட வருமானம் ஈட்ட முடியாமல் போவதற்கும், அதன் முகம் தெரியாத முதலாளிக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடி சொத்து சேர்க்க உதவுவதும் அந்த ALGORITHM தான். எனவே அந்த ALGORITHM என்பது ஒரு ஸ்டார்ட் அப்போ மூலமோ, தகவல் தொழில் நுட்ப கார்ப்பரேட் முதலாளிகளின் மூலமோ இயங்குவதால் அது முழுக்க முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே உண்மையாகும். அதனால் யாருக்கு எதிராக போராடுவது என்று தொழிலாளர்கள் தவிக்க வேண்டியதில்லை, முகத்தை நேரடியாக காட்டாத, முகம் தெரியாத சொமேட்டோ திபிந்தர் கோயல் போன்ற எண்ணற்ற கார்ப்பரேட்டுகள் ALGORITHM மூலம் தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டுகிறார்கள் என்பதுதான் இங்கே பிரச்சினை. தொழிலாளர்களை சுரண்டும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூகத்தின் தீர்க்க முடியாத கணக்குகளை தீர்த்துக் கொடுக்கும் ALGORITHM என்ற கணினி தொழில்நுட்பம் உயிரற்றது. ஆனால் உயிருடன் தினவெடுத்து திரியும் ஏகாதிபத்திய ALGORITHM -த்திற்கும் அதனை பாதுகாக்கும் நவீன பாசிச அரசுகளுக்கும் முடிவுகட்டுவதுதான் தொழிலாளர் உரிமைகளை மீட்பதற்கான ஒரே வழி.

  • சதாம் ஹுசேன்.

 

விவரங்களுக்கு உதவியவை:

https://www.news18.com/amp/news/business/zomato-founder-deepinder-goyal-among-indias-ultra-rich-after-bumper-listing-know-his-net-worth-4000562.html

https://www.zomato.com/blog/letter-from-deepi

https://m.thewire.in/article/labour/after-zomato-ipo-can-we-have-a-more-honest-discussion-on-gig-labour

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here