கார்ப்பரேட் மூலதனத்தை ‘கடத்தி இழுத்துக்’ கொழுக்கும் குஜராத் மாடல்!

ஜூன் 2023 இல், ஒரு பன்னாட்டு நிறுவனம் சென்னையில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் தொடங்க சுமார் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டு இருந்தது. இதனை அதிகாரத்தை பயன்படுத்தி குஜராத் பறித்துள்ளது.

மிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென் இந்திய மாநிலங்களுக்கு முதலீடு செய்ய வரும் மிகப் பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை பாசிச மோடி அரசு குஜராத் மாநிலத்திற்கு மாற்றி விடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து தி நியூஸ் மினிட் இணையதளப் பத்திரிகை ஓர் விரிவான கட்டுரை எழுதி பாசிச பாஜக கும்பலின் குஜராத் சார்பை அம்பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஹெலிகாப்டர் ராஜதந்திரம்’ எனும்
பாசிச பாஜக அரசின் சதி!

2022-ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனம் ஒன்று சென்னையில் தனது மிகப்பெரிய முதலீட்டைத் தொடங்க தயாராக இருந்தது. வர்த்தக நோக்கங்கள் பற்றி பேசுவது என்ற பெயரில் செமிகண்டக்டர் நிறுவன அதிகாரிகளை டெல்லியில் சந்தித்தார் அப்போதைய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். அவர்கள் பேசி முடிப்பதற்குள் அவர்களை குஜராத் அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் தயாராக நிறுத்தப்பட்டதாம். அதன் பிறகு அந்நிறுவனம் குஜராத்திற்கு தனது முதலீட்டைக் கொண்டு சென்றது. இதனை ‘ஹெலிகாப்டர் இராஜதந்திரங்கள்’ என விமர்சித்துள்ளது தி நியூஸ் மினிட் இணைய தளப் பத்திரிகை.

மிகப்பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளை குஜராத் மாநிலத்திற்கு ’கடத்திக் கொண்டு’ செல்ல நான்கு தந்திரங்களை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. ஒன்று, கணிசமான மூலதன மானியங்கள் வழங்குவற்கான உத்திரவாதம்; இரண்டு, இறக்குமதி வரிகளை குறைப்பதற்கான உறுதிமொழிகள்; மூன்று தடையற்ற உற்பத்திக்கான அரசாங்கத்தின் உத்தரவாதங்கள்; நான்கு, குஜராத்தில் உள்ள தோலேரா மற்றும் கிஃப்ட் சிட்டியை முதலீட்டு இடங்களாக வேகமாக மாற்றுவதற்கு ஊக்குவித்தல் போன்ற தாராளமான சலுகைகள் வழங்குவதை தனது தந்திரங்கள் (Tactics) என்ற பெயரில் சதி செய்து தென் இந்திய மாநிலங்களுக்கு வரும் மூலதனத்தை மடை மாற்றம் செய்து வருகிறது பாசிச பாஜக.

பாஜகவின் களவாணிதனமும்!
மாநில அரசின் கண்டனமும்!

பாசிச பாஜக அரசு பிற மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை பல்வேறு களவாணிதனம் செய்து குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்கிறது. குறிப்பாக, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மைக்ரோன் டெக்னாலஜி எனும் செமி கண்டக்டர் தயாரிக்கும் நிறுவனம் தனது செமிகண்டக்டர் அசெம்பிளி யூனிட்டை அமைப்பதற்காக தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தேர்ந்தெடுத்து இருந்தது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு மைக்ரோன் டெக்னாலஜி நிறுவனம் குஜராத்தை முதலீட்டு இடமாக மாற்றியது.

இதனை தெலுங்கானாவின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், 50 சதவிகிதம் மானியம் தருவதாக ஆசைகாட்டி மைக்ரோன் டெக்னாலஜி நிறுவன முதலீடுகளை தெலுங்கானா மாநிலத்திலிருந்து அபகரித்து குஜராத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி “எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வந்தால், அவர்களை குஜராத்திற்கு செல்லுமாறு பிரதமர் அலுவலகம் கூறுகிறது. மோடி இந்தியாவுக்கான பிரதமர். ஆனால், அவர் குஜராத்துகான பிரதமர் போன்று செயல்படுகிறார்“ என்று கூறி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: போலிகள் ஜாக்கிரதை! அம்பலமாகி நாறி வரும் ’குஜராத் மாடல்’!


கர்நாடகாவின் ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே “கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை குஜராத் மாநிலத்திற்கு மாற்றி பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெரும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் முதலீடுகள் குஜராத்திற்கு செல்கிறது” என குற்றம் சாட்டினார்.

ஒன்றிய அரசின் கூட்டணியில் உள்ள ஹெச்.டி.குமாரசாமி மத்திய கனரக தொழில்கள் மற்றும் உருக்கு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டு பெங்களூருவுக்குத் திரும்பியபோது,” தனியார் நிறுவனத்தில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்ததன் புத்திசாலித்தனம் என்ன” என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றாலும், அவரது வார்த்தைகள் மைக்ரான் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் வர இருந்த முதலீடுகள் குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை பிரதிபலிக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.


படிக்க: குஜராத்: 41,621 பெண்கள் கடத்தல். வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு !!


ஜூன் 2023 இல், ஒரு பன்னாட்டு நிறுவனம் சென்னையில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் தொடங்க சுமார் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த முடியும் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் அந்த நிறுவனம் தனது முதலீடுகளை குஜராத்தில் இடமாற்றம் செய்ய ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்தது. தற்போது அந்த நிறுவனம் குஜராத்தில் தொழில் தொடங்கவும் உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மாநிலத்திற்கு வர இருந்த சுமார் ரூ.6,000 கோடி முதலீடுகள் குஜராத்திற்கு செல்ல ஒன்றிய அரசு நிர்பந்தம் கொடுத்தது என 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரே குற்றம் சாட்டினார். இதனை தி நியூஸ் மினிட் இணையதளம், “ஒன்றிய அரசான பாசிச பாஜக பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற‌ தனது ‘எதிரி நாடுகளில்’ இருந்து தட்டிப் பறிக்கவில்லை. தனது நாட்டின் ஒரு பகுதியான தென்னிந்திய மாநிலங்களில் இருந்தே பிடுங்கியுள்ளது” என்று பதிவு செய்துள்ளது.

குஜராத்திற்கான வளர்ச்சி:
அம்பானி – அதானிக்கான வளர்சியே!

2014-இல் பாசிச பாஜக பதவியில் அமர்ந்தவுடன் குஜராத்தை இந்தியாவிற்கான சர்வதேச நிதி மையமாக அறிவித்தது. அதாவது, குஜராத்தின் கிஃப்ட் சிட்டி (குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி) இந்தியாவின் முதல் சர்வதேச நிதி சேவை மையம் (IFSC) ஆகும். இது ஒன்றிய அரசின் நிதியிலிருந்து பலவிதமான சலுகைகள் மற்றும் செயல்பாட்டு சலுகைகளை வழங்குகிறது. இவை நாட்டிலுள்ள வேறு எந்தப் மாநிலத்திற்கும் கிடைக்காத ஓர் திட்டம்.

2015 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த கிஃப்ட் சிட்டியினை மோடி அரசாங்கம் முழு மூச்சாக ஆதரிப்பதன் மூலம் இந்த திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றது. அதிலும், 2020 ஆம் ஆண்டில் கிஃப்ட் சிட்டியில் புதிதாக நிறுவப்பட்ட சர்வதேச நிதி சேவை மையம் இந்தியாவின் ஐ.எஃப்.எஸ்.சி ஆணையத்தின் (IFSCA) கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதும் முதலீடுகள் குஜராத்தில் குவிப்பதற்கு காரணமாக உள்ளன. இது குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பதாலும், மோடி தொடர்ச்சியாக ஆண்டு வந்த மாநிலம் என்பதாலும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன என தட்டையாக புரிந்து கொள்வது அரசியல் தவறாகும்

இந்திய தரகு முதலாளிகளில் 2008 க்கு பின்னர் தோன்றியுள்ள புதிய மேல்தட்டுப் பிரிவான தேசங்கடந்த தரகு முதலாளிகள் பிரிவிற்கு சேவை செய்யவே குஜராத்திற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, இந்திய தரகு முதலாளிகளிலேயே ஒரு சிறு கும்பலான அதானி, அம்பானி, அகர்வால், மிட்டல் போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகள் வளர்ச்சிக்கான செயல்பாடுகளே குஜராத்திற்கான வளர்ச்சியாக கட்டமைக்கப்படுகிறது.

1947 போலி சுதந்திரத்தின் மூலம் அதிகாரமாற்றம் நிகழ்ந்த பிறகு, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பே மேற்கு கரையோர (அரபிக்கடலின் கரையோர) தரகு முதலாளிகள் நலன்களுக்காக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இது 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய பொருளாதாரம் தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளான அதானி – அம்பானி போன்றவர்களின் ஆதிக்கமாக மட்டுமே மாற்றுவது என்ற திட்டத்தை முன்வைத்தே பாசிச மோடி கும்பல் குஜராத் உள்ளிட்ட மேற்கு கரையோர மாநிலங்களுக்கு கவனம் கொடுத்து வளர்ப்பதை செய்து வருகிறது.

தென் இந்திய மாநிலங்கள்
செய்ய வேண்டியது என்ன?

அதிகாரத்தை ஒன்றியத்தில் குவிப்பது என ஜிஎஸ்டி நிதி பங்கீடு, பேரிடர் நிதி ஒதுக்கீடு முதல் கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளை ஒவ்வொன்றும் பறித்து வருகிறது பாசிச பாஜக. தென் இந்தியா மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தை சிதைத்தும் வளங்களை கொள்ளையடித்தும் மேற்கு கரையோரத்தை இந்தியப் பொருளாதாரமாக கட்டியமைக்க உள்நாட்டு தரகு முதலாளிகளையும் முழுங்கி கொழுத்து வருகின்றனர் தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகள்.

சுருங்கச் சொன்னால், பாசிச பாஜகவும் தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் தென்னிந்திய மாநிலங்களையும் எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் கார்ப்பரேட் காவி பாசிச திட்டங்கள் மூலம் மிகத் தீவிரமாக சூறையாடி வருகின்றனர். இதற்கு எதிராக பாசிச எதிர்ப்பு கண்ணோட்டத்தில் ஒருங்கிணைந்த திட்டத்தை வகுத்து மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கும் தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கு எதிராகவும் களமாடுவதே சரியானது.

இந்தியாவை ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கான பொருளியல் அடிப்படை ஏற்கனவே இந்தியாவை சூறையாடி வந்த தரகு முதலாளிகள் மத்தியில் இருந்து 2008 பொருளாதார நெருக்கடி உருவாக்கிய மேல்மட்ட பிரிவினர், அதாவது தேசங்கடந்த தரகு முதலாளிகள் என்பதை மார்க்சிய லெனினிய அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் பாசிசம் தோன்றியதற்கான பொருளியல் அடிப்படையைப் பற்றி புரிந்து கொள்ளாத பலரும் மோடி பாசிசம், அதானி பாசிசம், காவி பாசிசம் என்றெல்லாம் சுருக்கிப் பார்ப்பதும் அதையே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதும் பாசிசத்தின் ஈரக் குலையை தாக்கி அழிப்பதற்கு ஒரு போதும் பயன்படாது. கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் குஜராத் மாடலை விரிவுபடுத்துவதை தடுக்கவும் செய்யாது.

  • இரணியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here