
மகா கும்பமேளா என்பது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு நகரங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்துக்களின் விழா.
இப்படிப்பட்ட மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் (பிரயாக் ராஜ்) வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது.
இந்தக் கும்பமேளாவிற்கு சுமார் 45 கோடி பேர் வருவார்கள் என்று மாநில பாஜக அரசு கூறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை 2021 ஆம் ஆண்டிலிருந்து பாஜக அரசு செய்ய துவங்கி விட்டது. சுமார் 50,000 பேர் இரவு பகல் என்று பாராமல் வருடக் கணக்காக அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
நாம் இப்பொழுது பாஜக அரசு செய்து வரும் இந்த ஏற்பாடுகளை குறித்து பேசப்போவதில்லை. அப்படியானால் எதற்கு இந்த கட்டுரை? என்று வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
இந்த விழாவை பற்றி செயற்கையாக, அறிவியலுக்கு புறம்பாக, அயோக்கியத்தனமாக மக்களிடையே கதைகளை பரப்புவதற்கு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செய்து வரும் வேலைகளைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
மகா கும்பமேளாவின் ‘மகிமைகளை’ மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காக உத்தரப்பிரதேச அரசின், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை (Information and Public relations Department) இயக்குனர் சிசிர் (Shishir) மிக விரிவான, 70 கதைகளுக்கான கருக்களைக் கொண்ட, ஒரு ஆவணத்தை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தயாரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.
மகா கும்பமேளாவின் சிறப்பை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் பொதுமக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்பே தீர்மானிக்கப்பட்ட கதைக் கருக்களை ஒட்டி மக்களிடையே விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும் இந்தக் கதைகளை மேலும் சுவாரசியம் உள்ளதாக ஆக்குவதற்கு தங்களால் இயன்றதை செய்யலாம் என்றும் வழிகாட்டி இருக்கிறார்.
படிக்க: உத்தர பிரதேசம் ஹத்ராஸ்: மூடநம்பிக்கைக்கு பலியான 134 பேர்!
யோகி ஆதித்யநாத் அரசு தனது ஆவணத்தில் மக்கள் மத்தியில் 70 கதைகளை கட்டவிழ்த்து விடுமாறு வழிகாட்டி இருக்கிறது. 70 கதைகளையும் விமர்சிக்க ஒரு கட்டுரையில் பக்கங்கள் போதாது என்பது அனைவரும் அறிந்ததே.
எனவே ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல யோகியின் அரசு கொடுத்துள்ள ஆவணத்தில் உள்ள 27-வது கதையை மட்டும் இங்கு பரிசீரிப்போம்.
“மகாகும்பமேளாவில் குளிப்பது அதன் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக நீண்ட காலமாக மதிக்கப்படுகிறது. இந்தக் குளியல் மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கமானது விஞ்ஞானிகளை வியக்க வைக்கிறது. பூமியின் சுழற்சியானது ஒரு மையவிலக்கு விசையை உருவாக்குகிறது, குறிப்பிட்ட அட்சரேகைகளில் 11 டிகிரி-செங்குத்தாக மேல்நோக்கி இயக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. அப்படிப்பட்ட (ஆறுகள் ஒன்றிணையும்) இடங்களில், புனிதமான நாட்களில் நீராடுவது, குறிப்பிட்ட சடங்குகள் செய்வது மனித ஆற்றலைப் பெருக்கக்கூடியதாக பண்டைய குருக்கள் மற்றும் யோகிகள் அடையாளம் கண்டுள்ளனர்” என்று கதை அளக்கிறது அந்த ஆவணம்.
கும்பமேளாவில் குளிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக எந்த விஞ்ஞானிகள் கூறினர்? என்று தெரியவில்லை. ஆறுகள் இணையும் இடங்களில் குளிப்பதை குறித்து நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
மாட்டுச் சாணியை உடல் முழுக்க தேய்த்து குளித்தால் கொரோனா ஒழிந்து விடும் என்று நம்பும் சங்கிகள் வேண்டுமானால் இந்தக் குளியல் மகத்துவமானது என்று நம்பலாம்.
பொருட்கள் பூமியை நோக்கி புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படுவதைத் தான் நாம் அறிந்திருக்கிறோம். பொருட்களை பூமியிலிருந்து விலக்கி வெளியில் தள்ளும் மைய விலக்கு விசையை யாராவது கேள்விப்பட்டது உண்டா? அட ராமா… ராமா….
படிக்க: ஹிந்து மதவெறிக்கு யோகி ஆதித்யநாத் ஒரு வகைமாதிரி !
ஆணும் பெண்ணும் இணைவதன் மூலமாக குழந்தை பிறப்பது என்பதைத் தாண்டி, உயிரியல் ரீதியாக பிறக்காத தெய்வக் குழந்தை தான் மோடி என்று நம்புபவர்கள் வேண்டுமானால் பூமியின் இந்த மைய விலக்கு விசையை பற்றிய கதையை நம்பலாம்.
அடுத்து, இவர்களின் கதை மேலும் எப்படி நீள்கிறது என்று பார்ப்போம்.
45 நாட்கள் கும்பமேளா கரையில் தங்கி புனித நீராடும் 1,080 கல்பவாஸ்களின் (பக்தர்களின்) நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Science and Technology of the Union government) ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்களாம்.
இதில் கும்பமேளாவில் குளிப்பதால் (மனிதர்களின் மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமான உள்ள) கார்டிசோல், டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட 14 குறிகாட்டிகளை ஆய்வு செய்து வருகிறார்களாம்.
ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக குளிக்கும்போது ஏற்படும் நுண்ணுயிரிகளின் பரிமாற்றம் குறித்தும், இது ஆன்டிபாடி உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது குறித்தும் மத்திய அமைச்சரகத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று உபி அரசாங்க ஆவணம் கூறுகிறது.
“கூடுதலாக, நதி நீர் மற்றும் மண்ணின் மாதிரிகள் அவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் பண்புகளை ஆய்வு செய்வதற்காக சேகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பெரிய அளவிலான மதக் கூட்டத்தின் புவி-வானியல் முக்கியத்துவமும் மதிப்பாய்வில் உள்ளது. இந்த விரிவான ஆராய்ச்சியானது மகா கும்பமேளாவில் குளிப்பது தொடர்புடைய பண்டைய நடைமுறைகளை அறிவியல் பூர்வமாக சரிபார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று உத்தரப் பிரதேச அரசின் ஆவணம் கூறுகிறது.
சங்கிகளின் அரசு எவ்வளவு ஒரு முக்கியமான விஷயத்தை ஆராய்ச்சி செய்து வருகிறது பாருங்கள். இதைக் கேட்கும்பொழுது சங்கிகளுக்கு புல்லரிக்கும் என்பது உறுதி. அறிவியலாளர்களுக்கு உடல் முழுக்க எரியும் என்பது அதனினும் உறுதி.
உத்தரப்பிரதேச மாநில அரசின் ஆவணம் இவை போன்றவைகளைப் பற்றி மட்டும் தான் பேசுகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். வழக்கம் போல இஸ்லாமியர்களை துரோகிகள், கொலைகாரர்கள் என்று கூறி இந்துக்களை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு கொள்ளச் செய்வதற்கான கதைகளையும் சாமியார் யோகியின் அரசு மறக்காமல் இந்த ஆவணத்தில் சேர்த்துள்ளது.
வரலாற்று உண்மையாக விளங்கக்கூடிய தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்வதற்காக கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கு இந்தக் காவிகள் நிதி ஒதுக்க மறுக்கிறார்கள்.
ஆனால் இல்லாத ஒன்றை பொய்யாக கட்டமைப்பதற்காக மக்களின் வரிப்பணத்தையும் அரசு இயந்திரத்தையும் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.
இந்தக் காவிகளை ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் செய்திருந்தால் குறைந்தபட்சம் அரசு எந்திரத்தையும் மக்களின் வரி பணத்தையும் பயன்படுத்தி இப்படிப்பட்ட அயோக்கியத் தனங்களை செய்யவிடாமல் தடுத்திருக்க முடியும்.
— குமரன்
செய்தி ஆதாரம்: The wire