உலக மேலாதிக்க போட்டி பிராந்திய மேலாதிக்கத்தில் முன்னிலை வகிக்கின்ற போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்கின்ற இஸ்ரேல், இந்தியா, ஈரான் போன்ற நாடுகளும் இந்த போட்டியில் குதிக்கின்றனர்.

மீண்டும் தீவிர அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ள அமெரிக்கா! உலக சமாதானத்தின் முதன்மை எதிரி!

“ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்ற வரை உலகில் போர்க்களற்ற சமாதானம் ஒருபோதும் உருவாகாது” என்று எச்சரித்தனர் மார்க்சிய லெனினிய ஆசான்கள்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசு உலகை மேலாதிக்கம் செய்வதில் நெருக்கடிக்குள்ளாகும் போதெல்லாம் தனது ராணுவ வலிமையையும், அணு ஆயுத வலிமையையும் அதிகரித்துக் கொண்டே சென்று உலக மேலாதிக்க போட்டியில் முன்னிலை வகிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ளது.

இன்றைய உலக சூழலில் அரசியல் மற்றும் ராணுவம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதில் சில பின்னடைவுகள், சிக்கல்கள், சரிவுகள் இருந்த போதிலும் உலகளாவிய நிலைமைகளில் அமெரிக்காவே உலக மேலாதிக்கப் போட்டியில் முதன்மை சக்தியாக விளங்குகிறது.

இதனை எதிர்த்து முறியடிப்பதாகவும், நிரந்தரமான உலக சமாதானத்திற்கு உலகை சோசலிச பாதையில் கொண்டு செல்லப் போவதாகவும், அதற்கு பொருத்தமாக, “21 ஆம் நூற்றாண்டின் சோசலிசம்” என்ற பெயரில் ஏகாதிபத்திய முதலாளித்துவ திருத்தல்வாத கருத்துகளை முன்வைத்து செயல்படுகின்ற ரஷ்யா மற்றும் சீனா, வடகொரியா போன்றவை ஒன்றிணைந்து அமெரிக்காவின் ஒற்றைத் துருவ வல்லரசுக்கு போட்டியாக பல் துருவ ஒருங்கிணைப்பு என்றெல்லாம் முன் வைக்கின்றனர்.

90களில் சோவியத் சிதைவுற்ற பிறகு தற்காலிகமாக பல்வேறு நெருக்கடிகளில் இருந்த ரஷ்யா தனது கடன் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசியல் மற்றும் ராணுவ, பொருளாதார வல்லரசாக உருவாக்கிக் கொண்டுள்ளது.

“சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம்” என்ற கோட்பாட்டை கடைபிடிக்கின்ற சீனாவும் இந்த வரிசையில் நவீன சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து உலக மேலாதிக்க போட்டியில் ரஷ்யாவுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.

இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையில் நடக்கின்ற பொருளாதார ரீதியிலான வர்த்தகப் போர்களும், அரசியல் ரீதியிலான தாக்குதல்களும், அதன் தொடர்ச்சியாக தற்போது அணு ஆயுத விரிவு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் நீடிக்க துவங்கியுள்ளது. இது உலக சமாதானத்திற்கும், அமைதிக்கும் பேரழிவை உருவாக்குகின்ற அபாயத்தில் உள்ளது.

அமெரிக்காவின் அதிபராக உள்ள பாசிச பயங்கரவாதி டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் தனது அரசாங்கம் இனி அணு ஆயுத தயாரிப்புகளில் இறங்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

“நாங்களும் இந்த சோதனையை (அணு ஆயுதம்) நடத்த இருக்கிறோம். ஏன் என்றால் பாகிஸ்தான் சீனா வடகொரியா போன்ற நாடுகள் அணு ஆயுத சோதனையை நடத்துகின்றனர். அவர்கள் சோதனை செய்வதாலும், மற்றவர்கள் சோதனை செய்வதாலும் நாங்களும் சோதனை செய்ய இருக்கிறோம்.

நிச்சயமாக சொல்கிறேன், வடகொரியாவும் சோதனை செய்து வருகிறது, பாகிஸ்தானும் சோதனை செய்து வருகிறது. இந்த நாடுகள் எங்கு சோதனை நடத்துகின்றன என்பது அமெரிக்காவுக்கு தெரியாது. ஆனால் சோதனையை அவர்கள் நடத்துகிறார்கள்.

மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது தெரியாதவாறு, அவர்கள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்கின்றனர். நீங்கள் சிறிதளவு மட்டுமே அதிர்வுகளை உணர்கிறீர்கள். உலகளாவிய கண்காணிப்புகள் இருந்தாலும், இத்தகைய அணு ஆயுத சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும்,” என்று தனது கண்காணிப்புக்கு அப்பால் ஏதோ நடந்து கொண்டிருப்பதைப் போல பொய் பிரச்சாரங்களை அவிழ்த்து விட துவங்கியுள்ளார்.

இவ்வாறு கூறிக் கொண்டே மறுபுறம் “உலகில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த சோதனை எனது முதல் பதவிக் காலத்தில் நடந்தது. அப்போது ஏற்கெனவே இருந்த அணு ஆயுதங்கள் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன” என்று அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

அணு ஆயுதம் மற்றும் அணுஆயுத பரவல் தடுப்பு போன்றவற்றை கண்காணித்து வருகின்ற பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் அறிக்கையின்படி, “உலகில் அதிக அளவிலான அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளது. ஆனால், பெரும்பாலான நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் சரியான எண்ணிக்கையையோ விபரங்களையோ வெளிப்படுத்துவதில்லை”என்கின்றனர்.

மற்றொருபுறம், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் (Federation of American Scientists) மதிப்பீட்டுப்படி, 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா சுமார் 5,977 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களை விட அதிகம். இதில் சில ‘திட்டமிட்ட’ அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

படிக்க: 

 ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

 டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! பயங்கரவாதிகளின் கூடாரத்தில் வேட்டுச் சத்தம்!

பிற நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனை நடத்தி தனது ராணுவ தளவாடங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குகின்ற ஏவுகணைகளை தயாரிப்பது அதில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் தொடுக்கப் போவதாக எப்போதும் எதிரி நாடுகளையும் உலக மக்களையும் அச்சுறுத்தலிலேயே வைத்திருப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சூழலில் தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது இடங்களில் உள்ள ரஷ்யா சீனா வடகொரியா போன்றவற்றை மீண்டும் வளர்ந்து விடாமல் தடுப்பதற்கும் தனக்கு சமமாக வந்துவிடாமல் தடுப்பதற்கும் தான் இந்த அணு ஆயுத சோதனையில் இறங்கி உள்ளதாக திருவாளர் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா துவங்கி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாசிச பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளதால் பொதுமக்களுக்கு எதிராகவும் உலக சமாதானத்திற்கு எதிராகவும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதற்கோ அல்லது பிற நாடுகளில் உள்ள கனிம வளங்கள் இயற்கை செல்வங்கள் மனித உழைப்பு ஆகியவற்றை சூறையாடி செல்வதற்கு தடையாக உள்ள அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கோ எப்போதும் தயங்க மாட்டார்கள்.

உலக மேலாதிக்க போட்டி பிராந்திய மேலாதிக்கத்தில் முன்னிலை வகிக்கின்ற போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்கின்ற இஸ்ரேல், இந்தியா, ஈரான் போன்ற நாடுகளும் இந்த போட்டியில் குதிக்கின்றனர்.

கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்திலும் ஏழ்மையிலும் பொருளாதார நெருக்கடியிலும் உயிர் வாழ்வதற்கே கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்ற சூழலில் பிற நாடுகளை விட தான் இராணுவ பலத்தில் பெரியண்ணன் ஆக விளங்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள் உலக சமாதானத்தையும் உலக மக்களின் அமைதியான வாழ்க்கையையும் கெடுப்பதற்கு தயாராகிறார்கள் என்பதைத்தான் அமெரிக்க அதிபரான பாசிச பயங்கரவாதி ட்ரம்ப் அறிக்கை நமக்கு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் தனி நபர்கள் பல்வேறு இயக்கங்கள் ஆகியவை அனைத்தையும் ஒன்றிணைக்க கூடிய தேவை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உருவாகியுள்ளது.

உலக சமாதானம் மற்றும் நிரந்தர அமைதி ஆகியவற்றை பற்றி அவநம்பிக்கைகளை பரப்புகின்ற குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ கைக்கூலிகள் மற்றும் ஏகாதிபத்திய எடுபிடிகள் ஆகியவர்களுக்கு எதிராக கம்யூனிசத்தை உயர்த்தி பிடித்து உலக சமாதானத்தை உருவாக்குகின்ற போராட்டத்தில் முன்னேறுவோம்.

முகம்மது அலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here