எது அழகு என்று புரியாமல்  பலியாகும் நடுத்தர வர்க்க- மேட்டுக்குடி பெண்கள்!


எது அழகு என்பதில் குழப்பம் :

ழகு என்பது ஆண் ஆகட்டும் அல்லது பெண்ணாகட்டும், அவர்களின் கண்ணோட்டங்களில், சிந்தனைகளில், பழக்கவழக்கங்களில் இருந்துதான் சமூகத்தால் கொண்டாடப்படும். ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட பண்புகளுக்கு மதிப்பில்லை. எதுஅழகு என்ற கருத்து கார்ப்பரேட் நிறுவனங்களால், ஏகாதிபத்திய கலாச்சாரங்களால் திட்டமிட்டே நம்மீது திணிக்கப்படுகிறது.

நமது உடை, பயன்படுத்தும் வாகனங்கள், சொகுசு பொருட்கள், வீடு உள்ளிட்டவை தான் ஒருவரின் மதிப்பை தீர்மானிப்பததாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் உடல் வடிவமும் உள்ளடங்குகிறது. ஆண்களுக்கு 6 பேக்ஸ் கனவு விதைக்கப்படுகிறது.

தோற்றத்தை தீர்மானிப்பது மரபணு ஜீன்கள் :

ஒருவரின் தோற்றம் என்பது மரபணு ரீதியாக இயல்பாக அமைவதும், செய்யும் தொழிலுக்கு ஏற்ப மாற்றம் அடைவதும் எதார்த்தம். ஆனால் ஆணாக இருந்தால் சிக்ஸ் பேக் வயிறு வேண்டும் என ஜிம்மில் லட்சக்கணக்கில் பணம் கட்டி ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம்.

பெண்களாக இருந்தால் பியூட்டி பார்லருக்கு சென்று பல்வேறு வகையான மசாஜ், பேசியல், ஐ ப்ரோ என்றெல்லாம் செயற்கையாக தனது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்பவர்கள் மறுபுறம். இதில் நடிகையாக இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி வரை போவதும் சிலிக்கான் ஜெல்கள் மூலம் மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்வது என்று பலதும் நடக்கிறது.

சீரழிவை கற்றுத்தரும்  ஏகாதிபத்திய கலாச்சாரம்:

ஏகாதிபத்திய நாடுகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள்  கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானித்தபடி வாழ்வதையே மதிப்பாக பார்க்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதில் முதலில் பலியாவது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான். அங்குள்ள மேட்டுக்குடியினரின் தேவைகளை கார்ப்பரேட் அழகு சாதன நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன.

விளம்பரங்கள் மூலம் அவர்களை தனது பிராண்டுகளுக்கு அடிமைப்படுத்துகின்றன. அந்த அடிமைத்தனம் தான் நம் நாட்டிற்கு உள்ளும் மேட்டுக்குடியினர் மற்றும் சினிமா துறையினர் தொலைக்காட்சி துறையினர் மூலம் இறக்குமதி ஆகிறது.

கற்றுத்தரும் இடத்தில் நடிகர் நடிகைகளும், மாடல்களும் :

நடிகர், நடிகைகள் நமக்கு எதை உடுத்த வேண்டும்: எப்படி உடலை அழகு படுத்த வேண்டும் என்றெல்லாம் கற்றுத் தருபவராக அவதாரம் எடுக்கிறார்கள்.

சினிமா சீரியல் என்பதைத் தாண்டி செய்தி வாசிப்பவர்கள் கூட தனது தோற்றத்தை செயற்கையாக மாற்றிக்கொள்வது எதார்த்தமாக மாறியுள்ளது. இவர்களே பயன்படுத்தாத பொருட்களுக்கு நம்மை நுகர்வோர் ஆக்குகின்றனர். இதனால் நம் உடல் பல்வேறு பாதிப்புக்குள்ளாகிறது.

உடல் அழகு,ஆரோக்கியத்தை  பறி கொடுக்கும் அவலம்:

தலை முடிக்கு பலவண்ண டைகள், முகத்துக்கு ஃபேஸ் கிரீம்கள் என முன்னணி  பிரண்டுகளால் சுற்றிவளைத்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் மக்கள்.  இப்படி கார்ப்பரேட்டுகள் தாக்குதலுக்குள்ளாகும் மனித உடல் பல்வேறு வகையான ஒவ்வாமையால், எதில் விளைவுகளால் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. இதில் பல்வேறு உடல் உறுப்புகளை மறுசீரமைக்கும் நவீன அறுவை சிகிச்சைகளும் அடக்கம். அதில் சமீபத்திய தகவல்தான் உதட்டை பெரிதுபடுத்தும் பெண்கள்.

பெருத்த உதடுகள்தான் கவர்ச்சியானதாம் :

இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் வசித்து வரும் 2 குழந்தைகளுக்கு தாயான லாரன் ஈவன்ஸ் என்ற பெண் தனது உதடு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்தி உள்ளார். அது என்னவென்றால், உதடு சற்று பெரிய அளவில் பருமனாக தெரிவதற்காக, ஊசி போடுவது ஆகும். இதனால், தொடக்கத்தில் சற்று வலி ஏற்படும். ஆனால் இதனை தாங்கிகொள்ள முடியும்.

தினத்தந்தி செய்தியின்படி பார்க்கும்போது  நடந்தது அழகு சிகிச்சைஅல்ல :

அழவைத்துள்ள கொடுமை என்பது புரிகிறது. சூடுபட்டபின் இதுபற்றி லாரன் கூறும்போது, பபூன் குரங்கின் பின்புறம் இருப்பது போல் எனது உதடு இயல்பை விட 6 மடங்கு பருத்து விட்டது.  அது அதிக வலியை தந்தது. பேசவே முடியவில்லை என்பதுதான்.

பகுத்தறிவு தந்தை பெரியார், மாநில உரிமைக்கு குரல் கொடுத்த  அண்ணா, தேவதாசி முறைக்கு எதிராக போராடிய டாக்டர் முத்துலட்சுமி , வெள்ளையர்களை எதிர்த்து நாட்டுப்பற்று பாடல்கள் பாடிய கேபி சுந்தராம்பாள் உள்ளிட்டோர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

படிக்க:

 இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!

மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலத்திற்கு தீர்வு என்ன?

ஆனால் இவர்கள் யாரும் ஏகாதிபத்தியங்கள் வரையறுக்கும் அழகு இலக்கணத்திற்கு பொருந்தியவர்கள் அல்ல. நாம் இன்றும் இவர்களை கொண்டாடுவதற்கு  காரணம் முக, உடல் அழகு அல்ல: அவர்களின் செயல்பாடுகள் தான் என்பதை உணர்வோம். கார்ப்பரேட்டுகள் பரப்பும் கேடுகெட்ட சீரழிவான கலாச்சாரத்திலிருந்து மக்களை மீட்போம்.

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here