ஆன்ட்டிஸ் மலைச் சிகரங்களை தாரைவார்க்கும் அர்ஜென்டினாவின் மிலே அரசு!
மிலே அரசால் பனிப்பாறை பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் முதல் கட்டமாக 5 லட்சம் கையொப்பங்களை பெற்றுள்ளனர்.

ர்ஜென்டினாவில் ஜாவியர் மிலேயின் தலைமையிலான வலதுசாரி பாசிச அரசானது நாட்டின் கனிம வளங்களை – ஆன்ட்டிஸ் மலைகளை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக நடப்பில் உள்ள பனிப்பாறை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளார்.

பாசிச மிலேயின் அரசாட்சி!

கடந்த 2023 இல் அதிகாரத்தை கைப்பற்றிய மிலே, நாட்டின் பணவீக்கம் 25 சதவீதமாக இருந்ததை 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 3 சதவீதத்திற்க்கும் கீழானதாக குறைத்தார். இதற்காக அரசாங்க செலவுகளை பெருமளவில் வெட்டிச் சுருக்கினார்.

அரசின் அமைச்சரகங்களின் எண்ணிக்கையை 24 இல் இருந்து எட்டாக குறைத்து அதிகாரக் குவிப்பை மேற்கொண்டார். அதாவது இந்தியாவில் பாசிச மோடி எப்படி அனைத்து முடிவுகளையும் பிரதமர் அலுவலகத்திலேயே எடுக்கிறாரோ, அமைச்சரகங்களை டம்மியாக்கி வைத்துள்ளாரோ, அதே கதை தான் அர்ஜென்டினாவில் மிலேயின் ஆட்சியிலும் நடக்கிறது. இந்தியாவின் மோடியை போன்று உலக மற்றும் பிராந்திய மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத்தான் தனது நண்பராக மிலேயும் கருதுகிறார்; இருவருமே கம்யூனிசத்தை கருவறுக்க துடிக்கிறார்கள்.

மிலே மூடு விழா நடத்திய துறைகளைப் பற்றியும் பார்ப்போம். போக்குவரத்து துறை, சமூக வளர்ச்சித் துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, பெண்கள் மற்றும் பாலின வேறுபாட்டுத்துறை, கலாச்சாரத்துறை, அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான துறை, தொழிலாளர் வேலைவாய்ப்பு சமூக பாதுகாப்பு துறை, சுற்றுச்சூழல் நிலைத்த வளர்ச்சிக்கான துறை, சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை, பிராந்திய வளர்ச்சி துறை உள்ளிட்டவைகளைத்தான் ஒழித்து கட்டி உள்ளார். மக்கள் நலனுக்கான அடிப்படைகளை எல்லாம் வீண் செலவாக கருதி வெறுக்கும் மிலே, பன்னாட்டு சுரங்க நிறுவனங்களுக்கான சட்டத்தை திருத்தி திணிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

வளம் கொழிக்கும் சுரங்கத் தொழில்!

அர்ஜென்டினாவில் பேட்டரிகளுக்கான லித்தியம் கனிமமானது, உலக அளவில் மூன்றாவது பெரிய இருப்பைக் கொண்டதாக உள்ளது. மேலும் தங்கம், வெள்ளி, தாமிரம் உள்ளிட்டவையும் ஏராளமாக ஆன்டிஸ் மலைகளில் கொட்டி கிடக்கின்றன.

அர்ஜென்டினாவின் கனிமங்களை கொள்ளையிட அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அதிக ஆர்வம் காட்டுகிறார். சுரங்க கார்ப்பரேட்டுகளான ஆங்கிலோ கோல்ட் அசாந்தி, எஸ்எஸ்ஆர் மைனிங், ரியோ டின்டோ போன்றவைகள் ஏற்கனவே களமிறங்கியுள்ளன.

தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ள பாசிச மிலேவின் உதவியுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 புதிய லித்தியம் சுரங்க திட்டங்களை தொடங்கவும் பன்னாட்டு சுரங்க மாஃபியாக்கள் தீர்மானித்துள்ளார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் டன் லித்தியத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கும் வைத்துள்ளார்கள்.

எச்சில் ஊறும் வாயுடன் பார்க்கும் இந்திய அரசு!

அர்ஜென்டினாவின் கனிம வள இருப்பு குறித்தும், அதை வெட்டி எடுத்தால் அதன் மூலம் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு, கிடைக்கக் கூடிய லாபம் உள்ளிட்டவற்றையெல்லாம் விரிவாக ஆய்வு செய்து , 2025 இல் ஒரு அறிக்கையை முன் வைத்துள்ளது இந்திய அரசு. இதை அனில் அகர்வாலுக்காக செய்ததா, அதானிக்காக செய்ததா என்பது போகப் போகத் தெரியும்.

இந்தியா முன்வைத்துள்ள அர்ஜென்டினாவிற்கான சுரங்கத் திட்டத்தின்படி 2031 ஆம் ஆண்டில் மட்டும் 21.1 பில்லியன் டாலர்களுக்கு கனிமங்களை வெட்டி எடுத்து விட முடியும் என்று கணித்துள்ளது. அகர்வாலும், அதானியும் மோப்பம் பிடித்துக் கொண்டு ஆன்ட்டிஸ் மலைச் சிகரங்களை சுற்றப் போகிறார்கள்.

பெரிய கொள்ளைவர்களுக்காக தான் பனிப்பாறை பாதுகாப்பு சட்டம் (Glacier protection Law) ஏப்ரல் 2026 இல் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்டு, பனிப் பிரதேசங்களில் சுரங்கப் பணிக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. கட்டமராக்கா, ஜூஜூ, சால்ட்டா, மெண்டோசா, சாஞ்சுவான் ஆகிய கனிம வளங்கள் நிறைந்த மாகாணங்களில், அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும்தான் இந்த சட்டத்திருத்தம் என்று ஜேவியர் மிலே அரசு அறிவித்துள்ளது.

ஆன்டிஸ் மலைத்தொடரின் முக்கியத்துவம்!

ஆன்ட்டிஸ் மலை தொடர் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போன்று தென் அமெரிக்கா கண்டத்தில் ஏழு நாடுகளுக்குள் 200 கிலோமீட்டர் அகலத்திலும், 700 கிலோமீட்டர் நீளத்தில் வடக்கு தெற்காகவும் உயர்ந்து நிற்கிறது. கணிசமான பகுதிகள் பனிப்போர்த்திய சிகரங்களைக் கொண்டவை. அதிகபட்சமாக 6,961 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் தெற்குப் பகுதியின் எவரெஸ்ட் என்று அழைக்கப்படும் கேரளத்தின் ஆனைமுடி சிகரமானது வெறும் 2,695 மீட்டர் மட்டுமே உயரம் கொண்டது. அதாவது தமிழ்நாட்டின் மலைத்தொடரை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டதாக, பாதுகாக்கப்பட்ட பனிச்சிகரங்களை 2 உள்ளடக்கியதாக ஆண்டிஸ் மலைத் தொடர் உள்ளது.

ஆண்டிஸ் மலைத் தொடரில் இருந்து ஆறுகள் உருவாகி சமவெளிக்கு பாய்கின்றன. கோடை காலங்களில் இதன் சிகரங்களில் உள்ள பனிப்பாளங்கள் உருகி ஆறுகளாக ஓடுகின்றன. ஆண்ட்டிசில் உருவாகும் ஆறுகளில் கொலராடோ மற்றும் நீக்ரோ ஆகியவை முக்கியமான ஆறுகள். மான்ஸோ, சிமெஹுயின் போன்றவை துணை ஆறுகள். மலைகள் கார்ப்பரேட்டுகள் வசமானால் ஆறுகள் தப்பி பிழைக்காது.

தற்போதைய கார்ப்பரேட் ஆதரவு கொண்ட மிலே அரசானது, சுரங்க திட்டங்களுக்காக பனிப்போர்த்திய சிகரங்களை தகர்க்க ஒப்புதல் தருகிறது. பனிப்பாளங்கள் வெடித்து சிதைக்கப்பட்டு விட்டால் கோடை காலங்களில் ஆறுகளில் தண்ணீர் எப்படி ஓடும்?

நேரடியாக சுமார் 70 லட்சம் மக்கள் தமது பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் இந்த ஆறுகளையே நம்பி உள்ளனர். கோடிக்கணக்கான மக்களையும், பல்லுயிர்களையும் பாதிக்க செய்யும் வகையில் பனிச்சிகரங்களை தகர்க்க சட்டங்களை திருத்தியுள்ளது பாசிச மிலே அரசு. மக்களின் வாழ்வாதாரமான ஆறுகளுக்கு மூலமாக உள்ள பனிப்போர்த்திய மலைகளை சுரங்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது. இது எத்தகைய அபாயத்தை விளைவிக்கும் என்பதற்கு கடந்த கால உதாரணங்களும் உள்ளது.

சுரங்க மாபியாக்களால் நேர்ந்த துயரம்!

மேரி கோல்ட் நிறுவனமானது அர்ஜென்டினாவின் சான்சுவானில் உள்ள மெலடேரோவில் ஒரு திறந்தவெளி தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கத்தை இயக்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் கடந்த 2015இல் மிகப்பெரிய விபத்து நடந்தது. 46,80,000 லிட்டர் சயனைடும், பாதரசக்கரைசலும் ஐந்து ஆறுகளில் கசிந்து ஓடியது. இப்படி மிகப்பெரும் சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்கிய கிரிமினல்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

செம்பு போன்ற கனிமங்களை தோண்டி எடுக்கும் செயல்முறையில் சயனைடும், சல்பூரிக் அமிலமும், சாந்தேட் உள்ளிட்ட கொடிய பொருட்களும், இவற்றுடன் 100 டன்களுக்கும் அதிகமான வெடிப்பொருட்களும் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சல்பூரிக் அமிலத்தைக் கொண்டுதான் தாமிரம், நிக்கல், யுரேனியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து கரைத்து பிரித்து எடுக்கிறார்கள்.

லாபவெறி பிடித்தலையும் சுரங்க கார்ப்பரேட்டுகள் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் இத்தகைய அமிலங்களையோ, ரசாயனங்களையோ எச்சரிக்கையுடன் தான் பயன்படுத்துவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. புதிதாக களமிறங்கும் சுரங்க மாபியாக்களால் இது போன்று இன்னும் எத்தனை பேரழிவுகள் ஏற்படும் என்பதையும் கணக்கிட முடியாது.

படிக்க:

 ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசு! எதிர்த்து நிற்கும் மக்கள்!

 கனிம வளங்கள்: கொள்ளையோ கொள்ளை!

இந்நிலையில் ஆன்ட்டிஸ் மலைகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் அர்ஜென்டினா பனிப்பாறையியல் நிறுவனத்திடம் (IANIGLA) இருந்து அதிகாரத்தை பறித்து உள்ளூர் மாகாண அரசாங்கங்களின் கைகளுக்கு மாற்றி ஒப்படைக்கிறது மிலேவிவின் அரசு. இனி எந்த சிகரங்களில் எந்த அளவிற்கு பனிப்பாளங்களை உடைத்து எறியலாம், பாறைகளைப் பிளக்கலாம் என்பதை என்பதை அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து ஒப்புதலும் தந்துவிடும். அப்படி தர வைப்பதற்கான வழிமுறைகளை சிறப்பாக பயன்படுத்துபவர்களாகத்தான் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அதிகாரிகள் இருக்கின்றனர்.

ஊழல்படுத்தப்படும் அதிகார வர்க்கம்!

பன்னாட்டு சுரங்க நிறுவனமான கிளென்கோர் உதவியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்கின்றனர். இந்திய பிரதமர் மோடி அதானியின் விமானத்தில் உலகை சுற்றியதையும் இவற்றுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

இந்த கிளென்கோர் நிறுவனமானது சாஞ்சுவான் மாகாணத்தில், “எல் பச்சோன்” தாமிர சுரங்க திட்டத்தை ஆரம்பிக்க முயற்சிக்கிறது. இதற்காக அமெரிக்க வர்த்தக சபையான ஆம்சேமில் (AMCHAM) ஏப்ரல் 14 அன்று சுரங்க கருத்தரங்கம் ஒன்றும் திட்டமிடப்பட்டது.

அதாவது பன்னாட்டு சுரங்க கார்ப்பரேட்டுகள் அர்ஜென்சினாவின் ஆன்ட்டிஸ் மலைத் தொடரை பர்த்டே கேக் போல வெட்டி விழுங்க துடிக்கிறார்கள். ஊழல் அதிகார வர்க்கம் அதை மனமுவந்து தாரை வார்க்க நிற்கிறது.

தீப்பொறி பெரு நெருப்பாகும்!

அர்ஜென்டினாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிலாளர் இடது முன்னணி, குடிமக்கள் கூட்டணி, சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற இடதுசாரி அமைப்புகளும், பொதுமக்களும் இதற்கு எதிராக அணி திரள ஆரம்பித்துள்ளனர்.

மிலே அரசால் பனிப்பாறை பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் முதல் கட்டமாக 5 லட்சம் கையொப்பங்களை பெற்றுள்ளனர். ஆன்ட்டிஸ் மலை சிகரங்களை காக்க தொடங்கியுள்ள இந்த இயக்கமானது, பாசிச மிலேயின் அரசாங்கத்தையும், அர்ஜென்டினா அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சேர்த்து பணிய வைக்கும். இந்தியாவின் தேசங்கடந்த தரகு முதலாளிகளை அர்ஜென்டினாவின் சுரங்க தொழிலில் கால் பதிக்க அனுப்பத் துடிக்கும் இந்திய மோடி அரசையும் அச்சுறுத்தும். சுரங்க கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு முடிவு கட்டும். அதற்கு உலக உழைக்கும் மக்கள் அர்ஜென்டினா மக்களுக்குத் துணை நிற்போம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here