
ஓசூர் பகுதியில் மா சாகுபடி நடக்கிறது. கொய்மலர் மற்றும் ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட மலர் உற்பத்தியும் நடக்கிறது. ஒரே ஒருநாள் மழையால், இந்த விவசாயிகள் தற்போது தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதிர வைத்த ஆலங்கட்டி மழை!
மார்ச் 18-ல் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பருவத்துக்கு தொடர்பே இல்லாமல் பெய்துள்ள ஆலங்கட்டி மழையால் ஓசூர் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் உடனடி இழப்பை பார்த்து விக்கித்து நிற்கின்றனர்.
கோடையின் வெப்பம், தாகம் தணிக்க உதவும் தர்பூசணியை பயிரிட்ட விவசாயிகள், ஆலங்கட்டிகள் விழுந்து பழங்கள் பொத்தல்களாக துழைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கண்ணீர் விடுகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் 100 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை தோப்புகள் நாசம் அடைந்து விட்டன. இரண்டு நாட்களில் வெட்ட காத்திருந்த வாழைத்தார்கள் ஆலங்கட்டியால் பாழாகியுள்ளன. வாழை மரத்தின் இலைகள் எல்லாம் நார்நாராக பிரிக்கப்பட்டு, மரங்கள் முழுவதும் ஆலங்கட்டியால் அடிபட்டு விவசாயியை போலவே நிலை குலைந்து நிற்கின்றன.
மாமரத்தில் பிடித்திருந்த பூக்களும், பிஞ்சுகளும் ஆலங்கட்டியின் தாக்குதலால் உதிர்ந்து விழுந்துள்ளன. கைப்பட்டாலே கசங்கும் மலர்கள், ஆலங்கட்டியின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கவா முடியும்? செடியோடு சாய்ந்துள்ளன.
உருக மறுத்த ஆலங்கட்டிகள்!
பொதுவில் ஆலங்கட்டிகள் சாலைகளில் விழுந்து சிதறி, சில நிமிடங்களில் உருகிவிடும். இதுதான் வழக்கமான ஆலங்கட்டி மழை. ஆனால், தற்போது பெய்துள்ள ஆலங்கட்டி மழை இதிலிருந்து வேறுபடுகிறது. மழை பெய்த பகுதிகளில் திரும்பிய பக்கம் எல்லாம் பனிக்குவியல்கள் உருவாகி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பது போன்ற தோற்றத்தை தருகிறது. இதேபோல் கர்நாடகாவிலும் நடந்துள்ளது.
கர்நாடகாவில் ஆலங்கட்டி மழை!
காஷ்மீராக மாறிய கிராமம்!!#Karnataka #Hailstorm #SPARK pic.twitter.com/FNje0hEXOo— Spark+ (@SparkPluz_) March 19, 2026
இரவில் விழுந்த ஆலங்கட்டிகள் மறுநாள் பகலில் சூரியன் சுட்டெரிக்கும் போதும் கூட உருகாமல் கட்டியாக கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளனர் விவசாயிகள்.
விழுந்த ஆலங்கட்டி இயற்கையா – செயற்கையா?
இது அமெரிக்காவின் பரிசோதனை; பில்கேட்ஸின் தாக்குதல் என்றெல்லாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவுகின்றன.
வானில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே உள்ள அடுக்கில் ரசாயனங்களை தூவி செயற்கையாக வரவைக்கப்பட்ட மழைதான் இது என்றும், இது தொடர்பான ஆராய்ச்சியில் பில்கேட்ஸ்சின் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது என்றும், பரிசோதனை முயற்சிகளைப் பொறுத்தவரை “இந்தியர்கள் இளிச்சவாயர்கள்; அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்று அணுகும் போக்கு உள்ளது என்றும், மீடியாக்களில் விமர்சனங்கள் எழுகின்றன. வகை மாதிரிக்கு ஒன்றை பார்ப்போம்.
“மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தான் ரகசியமாக சில பரிசோதனைகள் செய்து இந்த வானிலையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதுதான் அந்த வைரல் செய்தி.
இணையத்தில் பரவும் பெரும்பாலான வீடியோக்கள் அந்த வகையில் அமைந்துள்ளன. ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தும் ஸ்கோபெக்ஸ் (SCoPEx) என்ற ஒரு அறிவியல் திட்டத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. பூமியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த, வளிமண்டலத்தின் மிக உயரமான ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) அடுக்கில் பலூன்கள் மூலமாக கால்சியம் கார்பனேட் துகள்களைத் தூவுவதுதான் இந்த திட்டம் என விவரிக்கின்றன. இது 2024 ம் ஆண்டே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புக் காரணமாக நிறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இதை சோதித்து உண்மையை சொல்ல வேண்டியது அரசின் கடமை.
பயிர்களுக்கு மட்டும் தானே சேதம்!அதை இவ்வளவு பெரிது படுத்த வேண்டுமா? என்கின்றனர், விவரம் புரியாத சிலர்.
சேதம் பயிர்களுக்கு மட்டும் அல்ல; திறந்த வெளியில் கிடைபோட்டிருக்கும் ஆடுகள், மாடுகள், கோழிகள் என பல்வேறு உயிர்களும் இந்த திடீர் ஆலங்கட்டி தாக்குதலால், திடீரென உருவாகி இருக்கும் தட்பவெப்பத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கோழிக் குஞ்சுகள், ஆட்டுக்குட்டிகள், சிறு பறவைகள் இந்த சூழலில் தாக்குப்பிடித்து நிற்பது சிரமம். இது கார்ப்பரேட்டுகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தால், அதற்கு அவர்களை தண்டித்தே தீர வேண்டும்.
அதிவேகத்தில் உருகும் இமயமலை!
இமயமலை இரண்டு மடங்கு வேகத்தில் உருகுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கத்திற்கு மாறாக திரிவேணி சங்கமத்தில் பெரும்பாலான பரப்பில் நீர் இல்லை. அங்கு வறண்டு கிடக்கும் கங்கையின் மணல் திட்டுகளின் மீது மக்கள் நடந்து செல்கின்றனர்.
படிக்க:
♦ குஜராத்: மழையில் பயிர்கள் சேதமடைந்ததற்கு அற்பத்தொகையை நிவாரணமாக வழங்கும் பாஜக அரசு!
♦ அச்சுறுத்தும் பருவமழை ! கலக்கத்தில் தாழ்வான பகுதி மக்கள்! உதவிக்குச் செல்லும் மக்கள் அதிகாரம் !
“குளோபல் வார்மிங்கா? எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. கார்பன் வெளியேற்றம் அதிகமாகின்றதா? அதனால் என்ன? டெல்லியில் மூச்சுத் திணறுகிறார்களா? பரவாயில்லை; எனக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ, அவர்களின் தலையில் இடியை இறக்குவது போன்று தாக்கி இருப்பதுதான் இந்த ஆலங்கட்டி மழை.
வளைகுடா போர் எப்படி எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கி, ஒவ்வொன்றாக அனைத்து துறைகளையும் ஒரு நெருக்கடிக்குள் தள்ளி வருகிறதோ, அதுபோல்தான் பருவநிலை மாற்றமும் பேரழிவை படிப்படியாக கொண்டு வரக்கூடியது.
தற்போது நமது வாழ்வாதாரமான தொழிலில் இழப்பை நஷ்டத்தை சந்தித்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் இதை உணர முந்தி உள்ளது.
இயற்கையை காப்பதன் அவசியம்!
இயற்கை தன் சமநிலையை இழந்தால், இயற்கையை சார்ந்து வாழக்கூடிய அனைத்தும் சர்வநாசத்தை சந்திக்கும். அது செடி, கொடிகள், மரங்கள் என்று பயிர்களாக இருக்கலாம்; அல்லது, ஆடு, மாடு, கோழி, மனிதன் உள்ளிட்ட உயிர்களாகவும் இருக்கலாம்.
ஊடகங்களில் ஊகங்களாக உலா வரும் செய்தியான ஏகாதிபத்தியங்களின் பரிசோதனை முயற்சின் விளைவாகத்தான் ஆலங்கட்டி மழை பெய்து இருக்கிறது என்றால், அதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் கடமை தான்.
ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் அடியாள் அரசாக இருந்தால் ஒன்றிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொள்ளும்போது அவர்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டி வரும். விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் மொத்தமாக வளைப்பதற்கு இது ஏதுவாகவும் அமையும்.
எனவே புவி வெப்பமயமாவதை தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம். புவி வெப்பத்தை தூண்டும் கார்ப்பரேட்டுகளுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் கடிவாளம் இடுவோம். கார்ப்பரேட் காவி பாசிச மோடி அரசை தூக்கி எறிவோம்.
- இளமாறன்







இயற்கை பேரிடர்களும் பருவம் தவறிய மழைகளும் போன்றவைகள் இன்று வருவதற்க்கான காரணங்கள் லாப வெறிபிடித்த முதலாளித்துவ பேய்கள் தான். இதனால் பாதிக்கபடுவது உழைக்கும் மக்களும் விலங்குகள் பறவைகள் போன்ற உயரினங்கள் தான் இதை தடுக்க மக்கள் போராட்டம் தவிர வேறு வழியயில்லை என்பதை நான் உணர்கிறேன்.