ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசு! எதிர்த்து நிற்கும் மக்கள்!


நாட்டிலுள்ள காடுகளையும் மலைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதில் குறியாக இருக்கும் பாசிச பாஜக அரசு இப்பொழுது ஆரவல்லி மலையை கார்ப்பரேட்டுகள் தின்று செரிப்பதற்காக படையல் வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. இதற்கு எதிராக ராஜஸ்தானிலும் ஹரியானவிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவின் மிகப் பழமையானது. இது குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பரவியுள்ள பரந்து விரிந்த மலைத்தொடர்.

ஆரவல்லி மலைத்தொடர் ராஜஸ்தான் பாலைவனத்தின் வெப்ப காற்றையும் வறண்ட மணலையும் கிழக்கு நோக்கி பரவிடாமல் தடுத்து அதாவது மாபெரும் பசுமைச்சுவர் போல செயல்பட்டு மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பாலைவனமாகாமல் காக்கிறது.

சுரங்க மாஃபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்களின் கூட்டின் காரணமாக இந்த மலைத்தொடரில் உள்ள கனிம வளங்கள் வரைமுறையின்றி சுரண்டப்பட்டதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கம் நடத்துவதற்கு 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்குப் பிறகு மாநில அரசுகள் ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளில் மாற்றங்களை செய்து சிறு சுரங்கங்கள் என்ற பெயரில் கனிம வளங்களை கொள்ளை இடுவதற்கு அனுமதி அளித்தன.

இப்பொழுது பாசிச பாஜக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கம் தோன்றுவதற்கான புதிய விதிகளை வரையறையறுத்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அந்தப் பரிந்துரைகளை நவம்பர் 20ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

படிக்க

 உத்தரகாசி சுரங்க விபத்து: இமயமலையில் தொடரும் துயரம்!

 கனிம வளங்கள்: கொள்ளையோ கொள்ளை!

நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள வரையறையின் படி, 100 மீட்டருக்கும் குறைவான உயரம் உள்ள மலைகளில் சுரங்கம் தோண்ட அனுமதிக்க முடியும். மேலும் ஒரு மலைக்குன்றுக்கு அருகில் 500 மீட்டர் தூரத்திற்கு வேறு மலைக்குன்று எதுவும் இல்லை எனில் அந்த மலைக்குன்று ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது. அதாவது இப்படி தனியே உள்ள ஒரு மலைக்குன்று 100 மீட்டருக்கு மேல் உயரம் உள்ளதாக இருந்தாலும் கூட அந்த மலையிலும் சுரங்கம் தோண்டலாம் என்று அனுமதிக்கிறது இந்த வரையறை.

சுரங்கம் தோண்டுவதை நெறிமுறை படுத்துவதாக கூறிக்கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரையறை,

குழந்தைகள் முழு கேக்கை வெட்டி, வெட்டி உண்பது போல, ஆரவல்லி மலைத்தொடரை பெரும் முதலாளிகள் தங்கள் விருப்பம்போல வெட்டி கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் ஆரவல்லி மலைத்தொடரை ஒட்டி உள்ள நீர்நிலைகள் வறண்டு போகும். விவசாயம் அழிந்து போகும். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் காற்று மாசு போன்ற காரணங்களால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். காடுகள் அழிந்து வனவிலங்குகள் ஒழிந்து போகும். ஏற்கனவே காற்று மாசு காரணமாக மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் டெல்லியில் மாபெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதலாளிகளின் கொள்ளைக்காக மட்டுமே வெறிகொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.

ஆனால், இந்தக் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று – சுரங்கம் தோண்டுவதற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்றும் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் காடுகளை வளர்ப்பு விரிவு படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான், ஹரியான மாநில மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் வெல்லட்டும்.

குமரன்

ஆரவல்லி விக்கிப்பீடியா Link

1 COMMENT

  1. ஆரவல்லி மலைத்தொடர் காடுகளை பாதுகாக்க பழங்குடி இன மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !

    பாசிச பாஜக ஆரவல்லி மலை காடுகளில் சுரங்கம் வெட்டி கனிம வளத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைக்க பசுமை தீர்ப்பாயத்தில் தங்கு தடையின்றி அனுமதி பெறுவதை தடுத்து நிறுத்துவோம் ! கார்ப்பரேட் காவி பாசிசத்தை சவக் குழியில் தோண்டி புதைப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here