திரௌபதி முர்முவின் வெற்றி சங்பரிவார் கும்பலுக்கு தான், ஆதிவாசி மக்களுக்கு அல்ல!

இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் அனைவருமே அவர்களது சாதி, இனம், மதம் அடிப்படையிலேயே அரசியல் நோக்கத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் இதுதானா?

0

பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு என்ற முன்னாள் பாஜக எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றியும் உறுதியாகியுள்ளது.

பாசிச கும்பல் திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்த பின்னர் 2024க்கான தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார்கள். திரௌபதி முர்மு இரண்டாவது பெண் ஜனாதிபதி மட்டுமல்ல, அவர் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என விளம்பரம் செய்கிறர்கள்.

ஜனாதிபதி பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்பது அனைவரும் அறிந்ததே! ஆளும் கட்சியின் தலையாட்டி பொம்மைகளாகவே இவ்வளவு நாட்களாக ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். சுயமாக முடிவெடுத்து செயல்படும் பதவி ஜனாதிபதி பதவி அல்ல என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருப்போம்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டவிதிகளை பாதுகாக்கும் பொறுப்பு குடியரசு தலைவருக்கு உண்டு. ஆனால் அதை இத்தனை காலம் இருந்த குடியரசு தலைவர்கள் செய்தார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆளும் பாஜக ஆட்சியில் தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக திருத்தி ஜனாதிபதி ஒப்புதலை கோரின. எந்த வித கேள்வியும் எழுப்பாமல் அதனை அங்கீகரித்து சட்டமாக்கினார் குடியரசுதலைவர். முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த போதிலும், இராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தினை ஒன்றிய அரசு அமல்படுத்திய போதும், அதை எதிர்த்து இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராடிய போதிலும் இதுவரை ஜனாதிபதி வாய்த்திறக்கவில்லை.

மோடியுடன் ராம்நாத் கோவிந்த்

இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் அனைவருமே அவர்களது சாதி, இனம், மதம் அடிப்படையிலேயே அரசியல் நோக்கத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் இதுதானா? நாட்டிலேயே மிக உயர்ந்த அரசியல் சாசன பதவியை இந்த அளவுகோல் சுருக்கிவிடாதா?

இந்த அளவுகோலின் அடிப்படையில் தான் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் ஒரு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவராய் இருப்பதால் அவர் சார்ந்த ஆதிவாசி சமூகத்துக்கு நீதி கிடைத்து விடுமா?

2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் ஆளுநராக  இருந்த  முர்மு, அந்த காலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் வகுப்பு வாத கலாச்சாரத்தை வளர்த்து பார்ப்பனியத்தை பரப்புவதில் அவர்களின் விருப்பமான நபராக இருந்துள்ளார். ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களை இந்துக்களாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளார்.

படிக்க

முர்மு பிறப்பால் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தியலை கொண்டுள்ள காவி கும்பலின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். மற்றபடி தான் சார்ந்த பழங்குடி மக்களின் நலனுக்காக தான் வேலை செய்தேன் என்று சொன்னால் யாரும் ஏற்கபோவதில்லை.

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவர் என கொண்டாடினாலும் அவர் வருங்காலத்தில் உயர்சாதிகள், சங்பரிவார் கும்பலின் காவி பாசிச நிகழ்ச்சி நிரலுக்கே வேலை செய்யப் போகிறார்.

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்றாலும், அவர் பதவி காலத்தில் தான் சாதி வெறியால் ரோகித் வெமுலா தற்கொலை செய்துக் கொண்டார். குஜராத்தின் உன்னாவ், உத்திரபிரதேசத்தின் ஹாத்ரா பாலியல் பாலியல் படுகொலைகள் வரை எதற்க்கும் வாய்மூடி பார்வையாளராகவே இருந்து வந்துள்ளார்.

APJ அப்துல்கலாம் காவி பாசிஸ்டுகளால் கொண்டாடபடுவதற்க்கு காரணம் அவர் 2002-ல் பாஜகவால் குடியரசு தலைவராக்கப்பட்ட பின்னர் நடந்த சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து வாய் திறக்கவே இல்லை.

ஆதிவாசிகள் அடிப்படையில் இந்துக்கள் என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் நிலைப்பாடு குறித்து முர்முவின் கருத்து என்ன? மாறாக ஆதிவாசிகள் தாங்கள் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுக்க முடியும் என முர்மு நம்புகிறாரா? ஆதிவாசிகளை ஆர்.எஸ்.எஸ் வனவாசிகள் என்று அழைப்பதை விரும்புகிறாரா?

இவர் குடியரசு தலைவர் ஆன பின்பு ஆதிவாசிகளை வனவாசிகள் என மாற்ற ஆளும் பாஜக அரசு முடிவு செய்து முர்முவிடம் அனுப்பினால் அவர் ஏற்பாரா? நிராகரிப்பாரா? ஆதிவாசிகள்  வசிக்கும் பகுதிகளில் செயல்படும் கிறுத்துவ மிஷினரிகளின் மீது பாசிச பிஜேபி அரசு நடவடிக்கை எடுத்தால் முர்முவின் நிலைப்பாடு என்ன?

வளர்ச்சி என்ற பெயரில் மலைகளையும், காடுகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கவும், சுரங்கம் அமைக்கவும் ஆளும் அரசு முடிவு செய்தால் காடுகளிலும், மலைகளிலும் காலம்காலமாக வசிக்கும் ஆதிவாசி சமூகத்தை பாதுகாக்க முயற்சிப்பாரா?

ஏன் இத்தனை கேள்விகள் என்றால் பழங்குடி இனத்தவர் என்ற சாதனைக்காக மட்டும் குடியரசு தலைவராக இருந்து யாருக்கு என்ன பயன். அவர் இதுவரை தான் சார்ந்த சமூகத்திற்க்கோ அல்லது அவர்களது பிரச்சினைக்கோ குரல் கொடுத்ததாக பதிவுகள் இல்லை.

படிக்க:

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை பொறுத்தவரையில் தனது அஜண்டாவை நிறைவேற்ற தான் முஸ்லீமான  அப்துல்கலாமையும். தலித்தான ராம்நாத் கோவிந்தையும் பயன்படுத்திக் கொள்கிறதே ஒழிய அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீதுள்ள அக்கறையினால் அல்ல. அதே நிலையில் தான் திரௌபதி முர்முவையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

காவி பாசிச கும்பலானது, நாங்கள் தலித்தையும், பழங்குடியின பெண்ணையும் ஜனாதிபதிகளாக்கியுள்ளோம் என விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றபடி திரௌபதி முர்மேவின் வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் வெற்றியே ஒழிய அவர் சார்ந்த ஆதிவாசி சமூகத்துக்கு அல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here