இதுதான் இன்றைய இந்தியா!
“தலித்துகளைஅரவணைக்கும்”ஆர்எஸ்எஸின் சூழ்ச்சி!
1800 களில் மராட்டியத்தில் நடந்த பேஷ்வா பார்ப்பனர்களின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களான தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகள் சொல்லிமாளாது. தெருவில் நடப்பதற்கு உரிமை கிடையாது. அவர்களின் காலடி தடத்தின் மீது பிறர் நடந்து சென்றால் தீட்டுப்பட்டு விடும் என்பதற்காக காலடித்தடத்தை துடைப்பத்தை கொண்டு கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.தெருவில் எச்சில் துப்ப முடியாது கழுத்தில் கலயத்தை கட்டிக்கொண்டு அதில் தான் எச்சில் துப்ப வேண்டும். நிலங்களில் உழைத்து கொடுத்த உழைப்பாளிகளின் நிலைமை இவ்வாறு கொடூரமாக நடத்தப்பட்டு வந்தது.இதை எதிர்த்து நடந்த கலகத்தில் உருவானதே ஜெய்பீம் என்ற முழக்கமும், பீமாகோரேகான் எழுச்சியும் ஆகும்.
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை விரட்டுவதற்கு பார்ப்பன கும்பல் எந்த முயற்சியும் எடுக்கவில்லை மாறாக திவான்,சர், துபாஷிகளாக பிரிட்டனின் காலடியில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களாக விழுந்து கிடந்தனர். அதேசமயம் மிலேச்சர்களின் ஆட்சியையாராவது போராடி விரட்டியபிறகு, மீண்டும் சனாதன வருண-சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்ற பார்ப்பன பேரரசு ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸின் முன்னோர்களின் விருப்பம்.

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் “பிரிட்டன் காலனி ஆதிக்கத்தால் பறிபோன, எங்களிடம் இருந்த ஆட்சி மீண்டும் எங்களுக்கே” என்பது பார்ப்பனக் கும்பலின் சனாதன இந்தியாவின் உள்ளடக்கமாகும்.இதை எதிர்த்துப் போராடும் மக்களை இரண்டு வழிகளில் கையாள்கிறது ஆர்எஸ்எஸ். ஒன்று உறவாடி அவர்களை விழுங்குவது, அல்லது அடக்குமுறையை ஏவி பணிய வைத்து அவர்களை விழுங்குவது. இந்த வகையில் பார்ப்பனியத்தை எதிர்த்து இறுதி காலம் வரை போராடிய டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டவர்களை விழுங்குவதற்கு எத்தனிக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல்.
ஒடுக்கப்பட்ட மக்கள் தனது மூதாதையர்களின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை கொண்ட உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கு பல்வேறு சதித்தனங்களை அரங்கேற்றி வருகிறது ஆர்எஸ்எஸ். கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை கல்வி கற்கத் துவங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை பல்வேறு சூழ்ச்சிகளின் மூலம் தடுப்பதற்கு முயற்சிக்கிறது.
படிக்க:
♦ முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் RSS-BJP கும்பல்தோழர். பால்ராஜ்.ஓவியம்
இத்தனை அடக்குமுறைகளையும் மீறி சொந்தத் திறமையால் முன்னேறும் சிலரையும் வர்க்க ரீதியாக தனது ஆதிக்கத்திற்கு துணை புரிகின்ற வகையில் “நண்பர்களாக” இணைத்துக் கொள்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அவர்களின் சதி வலைக்குள் விழுகின்றவர்களுக்கு பார்ப்பனியம் உறவாடிக் கெடுப்பதை எடுத்துச் சொல்லி புரிய வைப்போம்.
- இரா. கபிலன்.