அதிமுக: அடிமைகளின் அக்கப்போர்!!

தர்மயுத்தம் 2.0 அக்கப்போரில் இறங்கி இருக்கும் பன்னீரோ மிக்ஸரை தின்றுகொண்டு குனிந்த முதுகு நிமிராமல் டயரையும், கால்களையும் மட்டுமே தேடி அலையும், கொடுக்கப்பட்ட பேப்பரில் கையெழுத்துப் போடும் ஒரு பேதை அடிமை.

1970-களில் தமிழ்நாட்டில் மக்களின் பெரும்செல்வாக்குடனும் தனக்கு பெரும் சவாலாகவும் இருந்த தி.மு.க. -வை பலவீனப்படுத்துவது அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்திக்குத் தேவையாக இருந்தது. அவரது சதியாலோசனையின் பேரில் 1972-இல் பாசிசக் கோமாளி எம்ஜிஆரால் தி.மு.க.-வை உடைத்துத் தொடங்கப்பட்டதுதான் அ.தி.மு.க. எம்ஜிஆர் திரைப்பட வெளிச்சத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டும், அவரின் விசிலடிச்சான் குஞ்சுகளை மட்டுமே துணையாகக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அடிமைகளின் கட்சி. 1972-ல் இதேபோன்றதொரு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி டெல்லியின் ஆணைக்கிணங்க துரோகத்தனத்தின் மீது அதிமுக எழுப்பப்பட்டது.

அதிமுகவின் தோற்றமே ஒரு தனிப்பட்ட நபரின் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அக்கட்சியில் ஜனநாயகம் என்பது ஒருபோதும் இருந்ததில்லை. உயிரோடு இருக்கும்வரை எம்ஜிஆர்- தான் கட்சியின் பொதுச்செயலாளர், அடுத்து அவரின் ஆசைநாயகியாக இருந்து பின்னர் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட ஜெயலலிதா. கட்சியில் பெயரளவில் பொதுக்குழு, செயற்குழு என்றெல்லாம் இருந்தாலும் தலைமையில் இருப்பவர்களுக்குப் போட்டியாக யாரும் வேட்புமனுகூட தாக்கல் செய்யமுடியாது. உட்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்த கும்பலிடம் எந்த ஒரு ஜனநாயக மாண்பையும் நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆகையால்தான் இக்கும்பல் பாசிச பாஜக-வின் இயற்கையான கூட்டாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பெரியார், அண்ணா என்னதான் சுயமரியாதையை ஊட்டினாலும் அதன் நிழல் கூட இந்த கட்சியின் தலை முதல் அடி வரை என்றும் கிடையாது என்பதுதான் உண்மை. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் ஒரு பாசிச கோமாளி என்றால் அவரின் “கொள்கை” பரப்பு செயலாளராக இருந்து பின்னர் கட்சியை கைப்பற்றிய கோமளவல்லி ஒரு பார்ப்பன பாசிஸ்ட். அடிக்கும் கொள்ளையை நிறுவனமயமாக்கி கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அக்கொள்ளையை பங்கு போட்டுக் கொள்ள வழிவகை செய்தவர். தன் ஆட்சிக்காலத்தில் எல்லா துறை அமைச்சர்களுக்கும் இலக்கு வைத்து ஊழலில் முங்கி முத்தெடுத்தவர். சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சராக இருக்கும் போதே தண்டனை பெற்று சிறையில் ஊதுபத்தி உருட்டியவர்.

சிறை செல்ல வேண்டியிருந்த நேரத்தில் அப்போது அமைச்சரவையில் இருந்த அடிமைகளில் மிகச்சிறந்த அடிமையாக ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்தான் பன்னீர். ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன், மக்கள் மீதான அக்கறை, துறைசார்ந்த அறிவு என்று எந்தவிதத்திலும் தகுதி இல்லாத பன்னீர் பொம்மை முதல்வராக பதவியில் அமர்த்தப்பட்டார். ஜெயலலிதா அப்போலோவில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அடிமைகளின் புதிய எஜமானனாக அவதாரமெடுத்த பாஜக, NEET தேர்வு, உதய் மின் திட்டம், ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு, புதிய கல்வி கொள்கை போன்ற தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அடிமைகளின் முழு ஒத்துழைப்புடன் தமிழகத்தில் வலிந்து திணித்தது.

சாஷ்டாங்கமாக காலில் விழுவதை ஒரு மதிப்பிற்குரிய கடமையாக, பண்பாடாக வளர்ச்சி பெற்றது இக்கட்சியில் மட்டும்தான். திராவிட கட்சி என்று அதிமுகவின் அடிமைகள் தங்களை அழைத்துக் கொண்டாலும் அதன் விழுமியங்களான சுயமரியாதை, பகுத்தறிவு என்றால் என்னவென்றே அறியாத மூடர்கள் நிறைந்த கும்பல்தான் இக்கட்சி. ஜோசியம், மாந்திரீகம், மண்சோறு, காவடி எடுத்தல் போன்ற மூடநம்பிக்கைகளை போற்றி வளர்த்து மூடநம்பிக்கையில் மூழ்கி பார்ப்பன அடிவருடித்தனத்தில் ஊறிப்போயிருக்கும் கட்சிதான் அதிமுக. தற்போது கூட நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முன் எடப்பாடி, பன்னீர் வகையறா தத்தம் வீடுகளில் யாகம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கலாம்.

இக்கட்சி தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில்தான் அடுத்தடுத்து வெளிவந்த மெகாஊழல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை ஆட்டோவில் வீடு தேடிவந்து அடித்துநொறுக்கும், ஆசிட் வீசும் ரவுடிக்கும்பலின் அட்டகாசம், போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு, விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு, தூத்துக்குடி படுகொலை, எட்டுவழி சாலை, அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் கமிஷன், ஊழல் என்று வரைமுறையில்லாமல் கொள்ளையடித்து வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் சொத்துவாங்கிக் குவிப்பது, அதற்காகவே பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது என்பதுதான் அதிமுக முதலமைச்சர்கள், அமைச்சர்களின் யோக்கியதை.

படிக்க :

அதிமுக தமிழகத்தை ஆண்ட காலம்தான் உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம், பார்ப்பனர்களுக்கும், ஜோசியர்களுக்கும், இந்துமத பாசிஸ்டுகளுக்கும், சாதிவெறியர்களுக்கும், அதிமுக அடிமைகளுக்கும் பொற்காலம் என்றால் மிகையாகாது. தமிழ்நாட்டை கொள்ளை அடிப்பது மட்டுமே சிந்தனையாகவும் கடமையாகும் கொண்டிருக்கும் கிரிமினல் கும்பலை கொண்டுள்ள இக்கட்சியின் அழிவு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இன்னும் சில காலத்தில் அதிமுக என்ற கட்சி கவுண்டர் சாதி எதிர் தேவர் சாதி என்று பிரிந்து சுருங்கி மற்றுமொரு பாமக- வாக போவதற்கும் வாய்ப்புண்டு.

ஆனால், ஊழல் ராணி ஜெயலலிதா அப்போலோவிலிருந்து பரலோகம் சென்றபோது அடிமைகளுக்குள் இதேபோல தர்மயுத்தம் 1.0 நடந்தபொழுது புரோக்கர் வேலை செய்து அடிமைகளை தன் சொந்த நலனுக்காக சேர்த்துவைத்த பாஜக தமிழகத்தில் தன் ஒரே ஆதாரக்கொடியான அதிமுகவை அவ்வளவு எளிதில் அழிய விட்டுவிடாது.

இப்போது தர்மயுத்தம் 2.0 அக்கப்போரில் இறங்கி இருக்கும் பன்னீரோ மிக்ஸரை தின்றுகொண்டு குனிந்த முதுகு நிமிராமல் டயரையும், கால்களையும் மட்டுமே தேடி அலையும், கொடுக்கப்பட்ட பேப்பரில் கையெழுத்துப் போடும் ஒரு பேதை அடிமை. ஆனால் எடப்பாடியோ என்னதான் தவழ்ந்து சென்று பதவியில் உட்கார்ந்தாலும், டயரை வணங்கினாலும், சற்று ஏமாந்தால் அந்த டயரையே ஏப்பம் விடும் ஒரு கிரிமினல் அடிமை. ஓட்டு அரசியலில் அப்பாவியாக இருந்தால் புளிப்பு மிட்டாய் கொடுத்து ஓரமாக உட்கார வைக்கப்படுவர் என்பதால் கொங்கு மண்டலத்தின் சுயசாதி MLA-க்களின் பலத்துடனும், கொள்ளையடித்த பணத்தால் வாங்கப்பட்ட பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் ஆதரவுடன் இருக்கும் கிரிமினல் அடிமையான எடப்பாடியின் முன்னால் பன்னீர் தாக்கு பிடிக்க முடியாது என்பது நிச்சயம்.

இரண்டு அடிமைகளும் தற்போது தங்களது எஜமானனிடம் பிரச்சினைகளை கொண்டு போய் இருக்கின்றனர். எஜமானர் ஒருவழியாக தற்காலிகமாகவாவது ஒரு டீலை பேசி முடிப்பார். அது “கணபதி அய்யர் பேக்கரி” டீலிங்கா அல்லது குரங்கு அப்பம் பிட்ட கதையா என இனிமேல்தான் தெரியவரும்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here