குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!

இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்று ஆர்எஸ்எஸ்- பாரதிய ஜனதா சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த குஜராத் மக்களிடம் நிரந்தரமான பய பீதியை உருவாக்கியது. 

0

ந்தியாவையே உலுக்கிய குஜராத் இனப்படுகொலை, 2002 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஒரே நாள் இரவில் 2000 இஸ்லாமியர்களை கொன்று குவித்தது.

அரசியல் சட்டம் முன்வைக்கின்ற மதச்சார்பின்மை, போலி சோசலிச முகமூடிகள் கிழித்து எறியப்பட்டு அரசியல் சட்டத்தின் ஆசியுடன் நடத்தப்பட்ட ‘மாபெரும் இனப் படுகொலை ‘ஆகும். முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் விமர்சிக்கப்பட்ட ‘சமகால பயங்கரவாதம் ‘ஆகும்!

இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்று ஆர்எஸ்எஸ்- பாரதிய ஜனதா சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த குஜராத் மக்களிடம் நிரந்தரமான பய பீதியை உருவாக்கியது.

இந்த நாட்டில் வாழ்வதென்றால் தனது வழிபாட்டு உரிமைகளையும், மத நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு ,பார்ப்பன பயங்கரவாதிகள் விதிக்கின்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய மக்கள் வாழவேண்டும், என்று நிலைநாட்டப்பட்டது.

இந்தப் படுகொலைகள் பற்றிய செய்திகள் கூட; பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் முயற்சியினால் தான் வெளிவந்தது.

அவ்வாறு குஜராத் இனப்படுகொலைகள் பற்றிய செய்தியை வெளிக்கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர், தீஸ்தா சேதல்வாத். அவர் மட்டுமின்றி போலீஸ் அதிகாரிகளாக இருந்த போதிலும், விதிவிலக்காக மனசாட்சியுடன் சிந்தித்த சஞ்சீவ் பட் மற்றும் ஸ்ரீகுமார் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

குஜராத் இனப்படுகொலைகள் பற்றிய செய்திகளை ; பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவு மக்களிடம் விசாரணை நடத்தி ,மோடிக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்த , தீஸ்தா செதல்வாட் நடத்திய ‘அமைதி மற்றும் சமாதானத்திற்கான குடிமக்கள் அமைப்பு ‘, என்ற நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தார்.

அமித்ஷா பேசிய பின்னர் 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் முடிவை ‘நீதி அரசர்கள்’ வெளியிட்டனர். காழ்ப் புணர்ச்சியின் காரணமாக தவறான தகவல்களை திரட்டி வழக்கு பதிவு செய்ததாகவும், அதற்கு துணை போனதாகவும் போலீஸ் அதிகாரிகளை கண்டித்து தனது நீதியை வழங்கியுள்ளனர்.

2002ஆம் ஆண்டு வன்முறை வெறியாட்டங்கள் நடந்து உலகமே அதை பார்த்து காறித் துப்பிய பிறகு உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது. அப்போது இஸ்லாமியர்கள் மீது நடந்த இனப்படுகொலைகளை , குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீது நடந்த வன்முறை வெறியாட்டங்களை வேடிக்கை பார்த்த “நவீன கால நீரோ ” என்று மோடியை இதே உச்ச நீதிமன்றம்தான் விமர்சித்து சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது!

இரண்டு தினங்களுக்கு முன்பு குஜராத் இனப் படுகொலை வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்ட உடன் அடுத்தடுத்த தினங்களில் அவதூறாக அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற கூட்டு சதியில் ஈடுபட்டதாக கூறி போலீஸ் அதிகாரி ஸ்ரீகுமார் மற்றும் தீஸ்தா செதல்வாட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க

ஆர்எஸ்எஸ், மோடி கும்பலுக்கு எதிராக முணுமுணுப்பு கூட எழக் கூடாது என்ற மயான அமைதியை நாட்டில் உருவாக்குவதற்கு திட்டமிட்டு செயல்படுகிறார்கள். ‘ஊடகங்களின் கழுத்தை நெறித்து ‘ மோடி ஆட்சியின் கீழ் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது !! என்று மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் மற்றும் மோடிக்கு எதிராக விமர்சிக்கின்ற அனைவரையும் அச்சுறுத்துகின்றன வகையில் தீஸ்தா மற்றும் ஸ்ரீகுமார் கைதுகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது!

பார்ப்பன பாசிச அடக்குமுறைக்கு எதிராக சிறைக் கொடுமைகளுக்கும், மரணத்திற்கும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடுகின்ற, சமூகத்தின் மீதும் மனித குலத்தின் மீதும் அக்கறை கொண்ட நேர்மையான செயல்பாடு மட்டும் தான் தற்போது நாட்டிற்கு அவசியமாக உள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் போது ; தனது சொந்த நலனுக்கு எவ்வித தேவையும் இன்றி நாட்டின் நலன், மக்களின் நலன் என்ற ஒரே நோக்கத்துடன் ‘விடுதலை சுவாசக்காற்றை ‘விரும்பிய லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு தேசபக்தியை உருவாக்கிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற சுய தியாக வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

வரலாறு தேங்கி நிற்கும் குட்டையை போல நீடித்து இருப்பதில்லை. தனது தேவைகளுக்கு ஏற்ப புதிய புதிய வீரர்களை இந்த மண்ணில் பிரசவித்து கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது.

பார்ப்பன பாசிசத்தையும் ,அதனுடன் ஒட்டி உறவாடி நாட்டு மக்களுக்கு எதிராக சுரண்டி கொழுத்து வரும் கார்ப்பரேட் பாசிசத்தையும் ,வீழ்த்துவதற்கு வீரப் புதல்வர்களை வேண்டி நிற்கிறது!

  • செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here