பல மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார், உத்தேசமாக அந்தப் பேச்சின் தலைப்பு “பெயரில் என்ன இருக்கிறது?”. அவரும் ஜியா உஸ் சலாம் என்ற பத்திரிகையாளரும் ஜியா உஸ் சலாமின் மலையாள மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதற்காக டெல்லியிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து இருந்திருக்கிறார்கள். இருவரின் பெயரும் விமான டிக்கெட்டில் ஒரு எழுத்து தவறாக பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. சற்று தாமதத் திற்கு பின்பு சித்தார்த் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார், ஆனால் ஜியா உஸ் சலாம் அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவரின் பெயரும், தாடியும், தோற்றமும்.

இன்றைய இந்தியாவின் வெறுப்பு அரசியலை அது சமூகத்தின் சகல தளங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை வெளிப்படும் ஒரு நிகழ்வு அது. பெயர் சூட்டி அவர்களை குற்றவாளியாக்கி தண்டிக்க வைப்பது இன்றைய ஆட்சியாளர்களின் வக்கிரம். அர்பன் நக்சல், அந்நிய கைக்கூலி என்று தொடங்கி தற்போது திமாங்கி நக்சல் வரை தொடர்கிறது. இப்படி தன் வாழ்க்கையில் பெயரின் காரணமாக நாட்டின் ஓரங்களுக்கும், சாவின் விளிம்புகளுக்கும் விரட்டப்பட்ட ஒரு பெண்ணின் வரலாற்றை மர்யம் எனும் நாவலாக செதுக்கியிருக்கிறார் எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா (Samsu Deen Heera)

இது உண்மையில் நாவலாக வடிக்கப்பட்ட ஒரு வரலாறு. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த சந்திரிகா எனும் ஒரு பெண் மர்யமாக மாறியது. அதன்பிறகு ஊடகங்கள் மனித வெடிகுண்டு பெண் என்று அவளுக்கு பட்டம் சூட்டியது. அதன் பிறகு அவள் நொடிக்கு நொடி அரசு எந்திரத்தால் துரத்தப்பட்டது. பிறகு நீதிமன்றம் அதன் பங்குக்கு அவளை துரத்தியது பற்றிய வரலாற்று கதைதான் மர்யம் நாவல்.

ஆணாதிக்க கணவனால் அம்மா படும் சித்திரவதை, அதை எதிர்த்த அவளது மனக்குமுறல், அதனால் இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க அன்பைத் தேடி அலையும் மனம் என்று அவளது இளமைக்காலம், கல்லூரிக் காலம் என்று தொடர்கிறது அந்தக் கதை. அன்பிற்காக ஏங்கிய அவளது மனம், துன்பப்படுவோருக்கெல்லாம் ஓடிப் போய் உதவும் ஒரு இளைஞனின் செயல்களால் ஈர்க்கப்படுகிறது. அவள் அவனை அண்ணா என்றுதான் அழைக்க ஆரம்பிக்கிறாள். அவனோடு விவாதிக்கும்போது மாணவியாகவும், ஆசிரியையாகவும் அவளது சுபாவம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. இருவரும் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். ஆனால், இருவரும் காதல் என்கிற வட்டத்துக்கு வெளியிலிருந்துதான் பழகுகிறார்கள். அப்படி ஒன்றும் அவர்கள் சபதம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அந்த உறவு அப்படித்தான் நீள்கிறது. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் அவள் புறப்பட்டுச் சென்றுவிடுகிறாள். அந்த அபுதாஹிரை வேறு வழியின்றி திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் அவள் மர்யம் ஆகிவிடுகிறாள்.

காதல் திருமணத்தை எதிர்க்கும் ஊர், உறவுகள், அதற்காக உதவி தேடிப் போன இடம் இசுலாமிய அமைப்பு என்பதால் எழும் பிரச்சினை, அதன் காரணமாகவே அவள் மதுரையை விட்டு சென்னை, பிறகு ஆந்திரா, கொல்கத்தா, பீகார், நேபாளம் என்று ஒவ்வொரு இடமாக துரத்தப்படும் அவலம், தங்குமிடமின்றி, உண்ண உணவின்றி, பயணிக்க பணமின்றி அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவளது படிப்பு அவளுக்கு கைகொடுக்கிறது. ஆனாலும், உழைப்புச் சுரண்டிகள் நீக்கமற நிறைந்தே இருக்கிறார்கள். இதற்கிடையில் குழந்தை, குழந்தையோடு ஓட்டம், அதன் மூலம் உறவுகள், நெருக்கடியின் காரணமாக அதில் சிலரே போலீசுக்கு காட்டிக் கொடுப்பது என்று ஒவ்வொரு நொடியும் துரத்துதலுக்கும் துயரங்களுக்கும், அவளும் கணவனும் குழந்தையுமாக ஓடிக் கொண்டே இருக்கிறாள்.

படிக்க: நளினி ஜமீலா : ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – வாழ்க்கை வரலாறு

ஒரு கட்டத்தில் அவளை காவல்துறை பிடித்துவிடுகிறது. ஓட்டம் அவளுக்கு சலித்துப் போகிறது. கணவனையும் அழைத்து வர, அவளே காவல்துறைக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். ஆனாலும், சிறைக்கு வந்தவளுக்கு மீண்டும் ஓட்டமே பரிசாக கிடைக்கிறது. உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு பதிலாக இரண்டு பேரையும் கொன்றுவிடுவதன் மூலமும் நேபாள விமான கடத்தல் குற்றத்தை அவர்கள் மீது சுமத்தி வழக்கை முடித்துவிட முயற்சிக்கிறது நேபாள அதிகார வர்க்கம். தமிழ்நாட்டு அதிகாரிக்கு கடமை உணர்வும் கொஞ்சம் கருணையும் இருந்திருக்கிறது. இவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அந்த காவல்துறை அதிகாரியும் ஓட வேண்டிய நிலை.

தமிழ்நாட்டிற்கு வந்த பிறகும் அதுவரை மூன்று பேரும் ஒன்றாக இருந்த நிலை மாறி, கணவன் ஒரு சிறையிலும், தானும் தன் கைக்குழந்தையுமாக இன்னொரு சிறையிலும் அடைக்கப்படுகிறார்கள். விசாரணையின் நாளுக்காக தவம் கிடக்கும் நிமிடங்கள். கணவனை கண்டுவிடலாம், பேசிவிடலாம் என்கிற கனவோடு இருப்பவளுக்கு கைதிகளின் வண்டிகளை தூரத்தே நிறுத்தி அப்போதும் துரத்துகிறது போலீஸ். நீதிமன்றம், அவர்களுக்கு தண்டனை விதித்ததா? விடுதலை செய்ததா? வெளியே வந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த நாவலும்.

ஒரு வரலாற்றை அல்லது நிகழ்கால நடப்புகளை எழுதுகிற போது, அதை நாவலாக படைக்கிற போது கலையும், நிகழ்வும் உரிய அளவில் கலக்கவில்லையென்றால் இரண்டும் கெட்டானாகிவிடும். இந்த நிகழ்வுகளில் எழுத்தாளரின் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றுதல் நம்மையும் மர்யத்தோடும் அபுதாஹிரோடும் பின்னர் முஜாகிதீனோடும் ஓடச் செய்கிறது, அழச் செய்கிறது, சோர்வடையச் செய்கிறது, கோபமடையச் செய்கிறது.

நிகழ்கால இந்தியாவில் இசுலாமியர்களை தேசவிரோதிகளாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கும் வெறுப்பு அரசியல் ஒரு கிராமத்துப் பெண்ணை எதையெல்லாம் எதிர்கொள்ள வைத்திருக்கிறது? என்பதை உணர வைக்கும் ஒரு அற்புதமான கலைப்படைப்பு இது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது உமர் காலித்தும் சார்ஜில் இமாமும் நினைவுக்கு வருகிறார்கள். உமர் காலித் தஸ்தாவஸ்கியின் வரிகளை சிறையிலிருந்து எழுதிய ஒரு கடிதத்தில் மேற்கோள் காட்டியிருப்பார் “நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உயிரோடு இல்லை. நாங்கள் கல்லறைக்குள் இருக்கிறோம். ஆனால் இறந்து போகவும் இல்லை” என்று. நூற்றம்பைது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வார்த்தைகளை தனது நிலைமைக்குப் பொருத்தி உமர் காலித் அதை எழுதியிருப்பான். ஆரம்பத்தில் சொன்னதுபோல் ஒரு பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு, அந்தப் பெயர் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே உயிரில்லாமல் செய்துவிட முடியும். நீங்கள் கல்லறைக்குள் இருப்பீர்கள், ஆனால் இறந்து போகாமலும் இருப்பீர்கள் என்பதற்கு நிகழ்கால சாட்சிகளாய் அந்த கதை மாந்தர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இதோ, எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்ட 13 பேரையும் கொன்றவர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்று அதிகார வர்க்கம் பெருமையாய் சொல்கிற இந்த நேரத்தில்தான் இந்த நாவலையும் நான் படித்து முடித்திருக்கிறேன். உரிமை, நீதி, நியாயம் எல்லாம் புத்தகங்களில் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பெறுவதற்கு போராட வேண்டியிருக்கும். அத்தனை போராட்டத்திற்குப் பிறகும் உங்கள் பெயரின் காரணமாக உங்களுக்கு நீதி மறுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் காலத்தில் ஒரு பெண் போராடி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதே மிகப்பெரும் உத்வேகம் அளிக்கும் செய்தி. அவளுடைய அத்தனை துயரங்களுக்குப் பின்பும் அந்தப் பெண் ஆசிரியராக இருக்கிறார். அவளது கணவர் அன்பை மட்டுமே அள்ளித்தருகிற அந்த அபுதாஹிர் வழக்கறிஞராக இருக்கிறார். பிள்ளைகள் படித்து வளர்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அந்தப் பெண்ணை கொண்டாடத் தோன்றுகிறது. நாவலை உருவாக்கிய தோழர் சம்சுதீன் ஹீராவுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். கொடூரமான சூழலில் துயரங்களைப் பற்றி எழுதுவதும், துயரங்களை எதிர்கொண்டவர்களைப் பற்றி எழுதுவதும் ஒரு முக்கியமான அரசியல் பணிதான், சமூகப் பணிதான். அதை கலையழகு குன்றாமல் படைத்தளித்தற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் இவையெல்லாம் ஒரு அதிகாரம் குவிக்கப்பட்ட அரசிடமிருந்து ஒரு சாதாரண மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பிரிவுகள் என்று சொன்னதாகவும் வாசித்த நினைவிருக்கிறது. எத்தனை அற்புதமான வரிகள். அரசு அமைப்பு ஒரு தனிப்பட்ட மனிதனை, அல்லது ஒரு பெண்ணை எப்படி வேட்டையாடும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நாவலில் வரும் ‘மர்யம்’. ஆனால், அம்பேத்கர் முன்னோக்கியதை விட மிகவும் வக்கிரம் பிடித்த ஒரு அரசு அமைப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்வதற்கும் அதை எதிர்த்து ஒவ்வொரு தினமும் போராட வேண்டும் என்கிற உறுதியை உருவாக்குவதற்கும் இந்த நாவல் நிச்சயம் ஒருவரிடம் மாற்றத்தை உருவாக்கும்.

நன்றி தோழர் சம்சுதீன் ஹீரா…

வாழ்த்துக்கள் மர்யம் டீச்சர்…

வாழ்த்துக்கள் வழக்கறிஞர் அபுதாஹிர்…

  • கனகராஜ் கருப்பையா

முகநூல் பதிவு

1 COMMENT

  1. கதை மாந்தர்களோடு நம்மையும் ஓடவிடுகிறார் தோழர் கனகராஜ் கருப்பையா. நூல் திறனாய்வின் மிகச் சிறந்த திறன் இதுதான். தெளிந்த நீரோடை போல சலசலவென நம்மை நாவலுக்குள் அழைத்துச் செல்கிறார். தோழருக்கு வாழ்த்துகள். நாவலாசிரியர் சம்சுதீன் ஹீராவை முகநூலில் அவ்வப்பொழுது வாசிப்பது உண்டு. இனி அவரைத் தேடி வாசிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த நாவல் திறனாய்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here