இந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடுகின்ற நதிநீரை பங்கிட்டுக் கொள்வதில் தேசிய இனங்களின் அடிப்படையில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு இடையில் எப்போதும் முரண்பாடுகளும் சச்சரவுகளும் உருவாகிக்கொண்டே உள்ளது.
பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவில் தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் இந்தியாவின் ஆளும் வர்க்கங்கள் அக்கம்பக்கத்தில் வாழும் தேசிய இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றது.
இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட யூனியன் (மாநிலங்களின் ஒன்றியம்) ஆகும். இந்த யூனியனில் வாழ்கின்ற பல்வேறு தேசிய இன மக்கள் விருப்பப்பூர்வமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து வாழவில்லை.
மாறாக, பார்ப்பன இந்திய தேசியத்தின் துப்பாக்கி முனையிலும், பூணூல் கயிற்றினாலும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்ற வகையில் தான் காவிரி பிரச்சினையில் நடக்கின்ற சிக்கல்கள் உள்ளன.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேல் போராடி காவிரி நதிநீர் சிக்கலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகும் கூட தமிழினத்திற்கு உரிமையுள்ள நீர் முறைப்படி வந்து சேர்வதில்லை. கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி போன்ற அணைகள் நிரம்பி வழிந்த பிறகு உபரி நீரை தேக்கி வைப்பதற்கு வழி இல்லாத காரணத்தினால் தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து கொண்டுள்ளதே தவிர, அந்த நதியின் மீதான உரிமை அடிப்படையில் அல்ல.
அவ்வாறு வரும் உபரி நீருக்கும் வேட்டு வைக்கின்ற வகையில் தமிழ்நாடு-கர்நாடகா இடையில் மேகதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடக அரசு அடாவடித்தனமாக முயன்று வருகிறது.
அது அகில இந்திய தேசியம் பேசும் காங்கிரசாக இருந்தாலும் சரி! பார்ப்பன இந்திய தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி! குறுகிய இன வெறி அடிப்படையிலேயே சிந்திக்கின்றன. கர்நாடகத்தின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு உபரி நீரை தமிழகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் மேகேதாட்டு அணை கட்டுவதை இதற்கு முன்னால் ஆண்ட காங்கிரசும், தற்போது ஆண்டு வரும் பாரதிய ஜனதாவின் முழுமையாக ஏற்றுக்கொண்டு அமுல் படுத்துகிறது.
படிக்க
காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அதிகாரம் இல்லாத மொன்னையான ஆணையங்களை கண்டு அவர்கள் சிறிதும் அஞ்சுவதில்லை. அது எடுக்கும் முடிவுகளுக்கும், அதன் உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவதில்லை. ஆணையங்கள் மட்டுமல்ல! கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக்கூட கர்நாடக அரசு மயிரளவிற்கும் மதித்தது கிடையாது.
கர்நாடக அரசு தற்போது அடாவடியாக 1,000 கோடி ரூபாயை அணை கட்டுவதற்கு ஒதுக்கி உள்ளது. இந்திய ஒன்றிய மோடி அரசை சந்தித்து கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மையின் குரலாக, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இரு தேசிய இனங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வராமல் அல்லது முடிவுக்குக் கொண்டுவர விரும்பாமல் ஒற்றுமைக்கு குழி பறிக்கின்ற அயோக்கியத்தனத்தை பாரதிய ஜனதா திட்டமிட்டே செய்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் குப்பைத்தொட்டியில் வீசி எறியப்பட்டு விட்டன.
கர்நாடக அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்டாவிட்டால், இந்திய ஒன்றியம் கேள்விக்குள்ளாவதை தடுக்க முடியாது. மக்களை வர்ணத்தின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் – பாரதிய ஜனதா தற்போது இனத்தில் அடிப்படையிலும் பிளவை கூர்மைபடுத்துகிறது.
மேகேதாட்டு அணை கட்டும் பிரச்சினை மட்டுமல்ல! தேசிய இனங்களின் மீதான பார்ப்பன இந்திய தேசியத்தின் ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் ஜனநாயக பூர்வமாக விருப்பத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதை உத்தரவாதப்படுத்தும் புதிய அரசியலமைப்பு சட்டத்தை நோக்கி நகர்வதே நிரந்தர தீர்வாக அமையும்.
- சண்.வீரபாண்டியன்.