நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!

வழிபாட்டை ஒற்றைமயப்படுத்தும் அடையாள அழிப்பை வலதுசாரி ஃபாசிசம் மேற்கொள்கிறது.

நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்!


புரட்சி என்பது பிஸ்டலில் இருந்து வெடித்துக் கிளம்புகிற
ரவையாக மட்டும் இருப்பதில்லை.

அது சில வேளை
ஒரு பாடலாகவும் இருக்கிறது.

‘காயமே கோயிலாகக்
கடிமனம் அடிமையாக‌
வாய்மையே தூய்மையாக‌’

எழுதியபோது நாவுக்கரசர் நினைத்திருக்க மாட்டார்.
இந்தப் பாடலை மார்க்ஸிஸ்ட், லெனினிஸ்ட்டுகள் பாடுவார்களென.

‘திருச்சிற்றம்பலத்தில் தமிழ் பாடலாமா?’ கோர்ட்டில் கேட்டபோது, ‘ இது அரசு முடிவெடுக்க வேண்டிய விசயம்!’
பதில் சொன்னார் நீதியரசர்.

பிரியாணி, பல்லக்கு, பசு மடமென சமீபமாக தடுமாறியது திமுக அரசு.

ஆனாலும், பேரறிவாளன் சிறைக் கதவைத் திறந்து சிக்ஸர் அடித்தது.

ஹாட்ரிக் விருப்பத்தோடு
‘ தில்லையில் தமிழ் பாடத் தடையில்லை !’ உத்தரவு போட்டது.

அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் . மக்கள் அதிகாரம் தோழர்கள் திருச்சிற்றம்பல மேடை ஏறினார்கள். ‘புரட்சி ஓங்குக’ முழங்கியவர்களதாம்.

வழிபாட்டை ஒற்றைமயப்படுத்தும் அடையாள அழிப்பை வலதுசாரி
ஃபாசிசம் மேற்கொள்கிறது.

இந்த வேளையில், தாயுமானவரையும் மாணிக்கவாசகரையும் பாடி, தமிழர் அடையாளம் மீட்பதே புரட்சிகர அரசியலாக இருக்கிறது.

அந்த புரட்சிகர கடமையை
செய்தது மக்கள் அதிகாரம்.

அதே நேரம். பழமலைநாதர் ஆலயத்தில் இருந்தேன். ஒரு நிச்சயதார்த்த நிகழ்வு. விருத்தாம்பிகை சந்நதி.

அருகே நன்கு மீசையை மழித்திருந்த, சிவபக்தர் அமர்ந்திருந்தார். புன்னகைத்தார் ‘சிவாய நமஹ!’ வணக்கம் சொன்னார்.

‘அன்பே சிவம்!’ சொல்லி
பதிலுக்கு வணங்கினேன்.

சன்னமாக

‘நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’
ஹம் செய்தேன்.

சூழலில் தமிழ் நிரம்பி வழிந்தது. ‘நீங்களும் சிவபக்தரா ? ‘
மழித்திருந்தவர் வினவினார்.

‘கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட்’

இப்போது..
‘ சிவனிஸ்ட் ‘
என்றாலும் தப்பில்லை !’

சிரித்தேன்.

கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here