நிலவைக் காட்டி சோறு ஊட்டியது அந்தக் காலம். செல்போனில் பாடல்களை போட்டு சோறு ஊட்டுவது இந்தக் காலம்.

“நிலவை கேட்டா புடிச்சு தருவேன் மாமன்” என்று சோக பாட்டு பாட மாமாக்கள் தயார் இல்லை. ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி செய்வதன் மூலம் அங்கு கிடைக்கின்ற கனிம வளங்களையும், எரிபொருள் பற்றிய விவரங்களையும் சேகரிப்பதற்கு இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் போன்ற செயற்கைக்கோள்களை தயாரிப்பதில் தமிழர்களின் பங்கு இருப்பதாக பெருமை அடித்து கொள்கின்றனர். இதையாவது ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். அதற்குள் வீர முத்துவேல் சாதியை கண்டுபிடித்து அவர் முதலியார் என்பதை பாராட்டுகிறது முதலியார் பேரவை இதைத்தான் சகிக்க முடியவில்லை. அது மட்டுமின்றி வேறு நான்கு சாதிகளும் வீர முத்துவேல் அவர்களை சொந்தம் கொண்டாடுகின்றன.

ஆர் எஸ் எஸ் பாஜகவை சேர்ந்த டேஷ் பக்தர்கள் இஸ்ரோவின் வெற்றியை மோடிஜியின் வெற்றி என்று அலப்பறை கொடுக்கின்றனர். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் முன்னாள் பிரதமர் நேருவின் பங்கை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இஸ்ரோ துவங்கப்பட்டது பற்றி பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். சந்திராயன் இறங்குகின்ற காட்சியை கண்டுகளித்த 90 லட்சம் பேரில் மோடி பேச துவங்கியவுடன் 30 லட்சம் பேர் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டனர் என்கிறது ஒரு தகவல்.

சந்திராயன்-3: டேஷ் பக்தர்கள் அலப்பறை!
live-ல் மோடி வந்ததும் வெளியேறிய மக்கள்!

ராசிபலன், கிரக பலன், ஜாதக பலன் என்று இந்தியர்களை முட்டாள்களாக வைத்திருக்கும் பண்டார பரதேசிகளும், போலி சாமியார்களும் (சாமியார் என்றாலே போலி. அதில் அசல் வேறு உள்ளதா என்று கேள்வி கேட்டு விடாதீர்கள்) சந்திராயன் வெற்றிக்கு முன்னரே தாங்கள் கணித்து சொல்லி விட்டதாக பீற்றி வருகின்றனர்.

சந்திர கிரகணத்தில் நிலாவை பாம்பு விழுங்குகிறது என்று மவுடிக கருத்துக்களை பரப்பியது முதல் சந்திராஷ்டமத்தில் வேலை செய்தால் கேடு உண்டாகும் என்று டஃப் கொடுப்பது வரை இது நாள் வரை பேசி வந்த இந்த கிரிமினல் கும்பல், நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 இறங்கியது கூட ஏற்கனவே நாங்கள் கண்டுபிடித்தது தான் என்று அலப்பறை செய்கின்றனர்.

சந்திராயன்-3 திட்டம் பற்றி “அதேபோல், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது சில இயற்கை பேரழிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அதாவது, நிலநடுக்கம் சுனாமி போன்றவை கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இது சந்திரயான் திட்டத்திற்கு இடையூறாக அமையக் கூடும். ஆனாலும் இந்த சவால்களை தாண்டி சந்திரயான் திட்டம் வெற்றி பெறும்” என்று கர்நாடகத்தில் உள்ள கோடி மடத்தின் சாமியாரான சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிஜி என்பவர் முன்கூட்டியே அனுமானித்துக் கூறி விட்டதாக சங்கி முட்டாள்கள் கூவுகின்றனர்.

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இது போன்ற சாமியார்கள் கூறுவதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதையும் ஓட்டுவது ஒரு வழிமுறையாக உள்ளது சந்திராயன் -3 விவகாரத்தில் கூட கோடி மடத்தின் சாமியார் ராஜேந்திரன் நிலவில் சந்திராயன் இறங்கும்போது அது சுனாமி, நிலநடுக்கம் போன்றவைகளை உருவாக்கும் என்று அளந்துவிட்டார். சந்திராயன் நிலவில் இறங்கிய போது இங்கு ஏதும் மாற்றங்கள் நிகழவில்லை.

ஆனால் நான் கூறியபடி வெற்றிகரமாக இறங்கி விட்டது அல்லவா என்று பிளேட்டை திருப்பி போடுகிறார் சாமியார். இது போன்ற சாமியார்களுக்கு நிகராக சாமியாடி வருகின்றனர் ஆர் எஸ் எஸ் பாஜகவின் டேஷ் பக்தர்கள். நிலவைப் பற்றி ஆய்வு செய்வதன் மூலம் இது போன்ற மத ரீதியான முட்டாள்தனங்களுக்கு ஆப்பு வைக்கிறது இஸ்ரோ என்பதைக் கூட புரிந்து கொள்ளாத மூடர்களாக வலம் வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஜேம்ஸ் வெப்: பிரபஞ்சவியலில் புதிய பரிமாணம்! அறிவியல் கட்டுரை!

நிலவின் தென் துருவத்தில் என்ன கிடைக்கிறது என்பது அறிவியல் ரீதியாக தேவைப்படும் ஒன்றுதான் என்றாலும், அறிவியலுக்கும் வர்க்க சார்பு உண்டு என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்களை சுருட்டுவதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள்  தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் தற்போதைய விண்வெளி சந்தை சுமார் $8 பில்லியன் மதிப்புடையது மற்றும் கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 4% வளர்ச்சியடைந்து வருகிறது, இது உலகளவில் 2% ஆகும்..

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2040-ல் 40 பில்லியன் டாலரைத் தொடும் மற்றும் வெற்றிகரமாக இருக்கும் சந்திரயான்-3 மேலும் பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இந்தியாவை அணுகும் என எதிர்பார்க்கப்படுவதால், இலக்கை மிக விரைவில் அடைய இந்தியா உதவக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ட்விட்டர் கம்பெனியை முழுங்கிய எலன் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆய்வுக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கி ஆதாயமடைய துடித்துக் கொண்டிருக்கிறார். எலன் மாஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் அதன் செயற்கைக்கோள் ஏவுதல் வணிகத்திற்காகவும், நாசா விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பில் கொண்டு செல்லவும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை $3 பில்லியன் ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கி வருகிறது. அந்த ஒப்பந்தத்திற்கு அப்பால், ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டு ஸ்டார்ஷிப்பிற்காக சுமார் $2 பில்லியன் செலவழிக்கும் என்று மஸ்க் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சாட் ஜிபிடி புதிய தொழில்நுட்பம்! முதலாளிகளுக்கு பணம் காய்க்கும் மரம்!

ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனியார் நிதியுதவியுடன் வாரிசுகளை உருவாக்கி வருகின்றன. விண்வெளி ஆராய்ச்சி என்பதன் மூலம் மனித குலத்திற்கு சேவை செய்வது என்பதை தூக்கி எறிந்து விட்டு லாபம் கொழிக்கும் துறையாக மாற்ற எத்தனித்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க சந்திராயன்-3 இறங்கியதை தனது தயாரிப்புகளின் விளம்பரத்திற்கு பயன்படுத்த தொடங்கிவிட்டனர் முதலாளித்துவ கழிசடைகள். குறிப்பிட்ட இடத்தில் மென்மையாக தரையிரங்கியதற்கு வாழ்த்துக்கள்” என்று மேன் ஃபோர்ஸ் என்கிற இந்தியாவில் காண்டம் தயாரிக்கும்  நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது, மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரில் “Land Softly, Land Wildly” என்ற வாசகத்தையும் அந்த நிறுவனம் இணைத்துள்ளது. இதை அந்த நிறுவனம் இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டுள்ளது. இதுதான் எதையும் காசாக்க துடிக்கும் முதலாளித்துவ மூளையின் வரம்பு.

இந்திய வான்வெளி ஆராய்ச்சியின் தந்தையாக கருதப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக சந்திராயன் சுமந்து கொண்டு சென்ற லேண்டருக்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் காலத்தில் துவங்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியை  “இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கும், எளிய மக்களுக்கும் உதவுகின்ற வகையில் சேவை அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்” என்று முன் வைத்தார்.

ஆனால் இன்றோ அவரது பெயரை ஒரு தேவைக்காக பயன்படுத்திக் கொண்டாலும், உண்மையில் விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் புதிய உயரத்துக்கு சென்று விட்டதாகவும், இதன் மூலம் பல லட்சம் கோடிகளை சுருட்டுவதற்கு பாசிச மோடியின் ஆதரவுடன் தயாராகி வருகிறது இந்தியாவில் உள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகள் கும்பல். இந்த உண்மையை மறைத்து சந்திராயன்-3 வெற்றியை பற்றி அலப்பறை செய்து வருகிறார்கள் டேஷ் பக்தர்கள்.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here